இரசாயன உரத்தடை விவசாயிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக Watchdog குழுவினர் முக்கியமான ஐந்து விவசாய மாவட்டங்களுக்கு பயணம் செய்திருந்தோம். எமது தொடர் ஆய்வு அறிக்கைகளின் இப்பகுதி அம்பாந்தோட்டை மாவட்ட அறுவடையில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி பற்றியும் அங்குள்ள விவசாயிகளின் எதிர்காலம் குறித்த பயத்தைப் பற்றியும் கலந்துரையாடுகிறது.
- அம்பாந்தோட்டை விவசாயிகள் பெரும்போக அறுவடையில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளார்கள்.
- எரிபொருட்தட்டுப்பாடு காரணமாக அறுவடைக்காக காத்திருந்ததால், சில வயல்களில் பயிர்கள் வாடியுள்ளன.
- 2021/22 பெரும்போக விளைச்சல் முன்னைய போகங்களோடு ஒப்பிடுகையில் பாதியாக குறைவடைந்துள்ளது
பயணம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் திடீர் இரசாயன உரத்தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதைகளை கேட்பதற்காக 2022 ஏப்ரல் மாதம் Watchdog குழுவினர் அம்பாந்தோட்டை, சம்மாந்துறை, வலப்பன, பொலநறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிற்கு சென்றிருந்தோம். ஆண்டுக்கணக்கில் விவசாயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருந்த நிபுணர்கள் அறுவடையில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படும் என்று எச்சரித்த போதிலும் அவர்களது கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இவ்விவசாயிகளின் அனுபவங்கள், இக்கொள்கை முடிவு எவ்வளவு குறுகிய பார்வை கொண்டது என்பதையும் அதன் தாக்கங்களையும் உங்களுக்கு புரியவைக்கும். ஒரு ஆண்டு கழிந்த பின் கொள்கை முடிவை வாபஸ் பெற்றதானால் ஏற்கனவே விவசாயிகளின் வாழ்வாதரத்தில் ஏற்பட்டுவிட்ட இழப்புகளை என்றைக்குமே ஈடு செய்யமுடியாது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, அவர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீடும் இன்றுவரை வழங்கப்படவில்லை.
விவசாயிகளுடன் எங்களை உரையாடுவதற்கு எல்லாவகையிலும் உதவி செய்த அனைவருக்கும் எமது நன்றிகள்; மிக முக்கியமாக தங்களது பொன்னான நேரத்தையும் நுண்ணறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து இந்தத்தொடர் உருவாகக் காரணமாயிருந்த விவசாயிகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அம்பாந்தோட்டையின் பரவகும்புக அதிவேக நெடுஞ்சாலையின் இடைமாற்றுச் சந்தியிலிருந்து 10km தொலைவிலுள்ள வளவ,மாமதல மற்றும் வெலன்கஹவெல ஆகிய மூன்று கிராமங்களுக்கு நாங்கள் சென்றிருந்தோம். நீல நிறக்கடலுக்கு புகழ்பெற்ற தெற்கில், அதற்கு எதிர்மாறான பசுமையான காடுகளால் நிறைந்திருந்தது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பிந்திப்போன ஒன்றிரண்டு வயல்களைத் தவிர பெரும்பாலான வயல்களில் நெல் அறுவடை செய்யப்பட்டிருந்தது. நெல்லே பிரதானமாக பயிரிடப்படுகின்ற போதிலும் ஏனைய தானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழங்களும் இங்கு பயிரிடப்படுகின்றன. சில வயல்கள் மழை மூலமாகவும் ஏனையவை நீர்ப்பாசன திட்டங்கள் மூலமும் சிறு மற்றும் பெரும் போகங்களுக்கு நீரைப்பெறுகின்றன.
உரமும் எரிபொருளும்
ஓர் இரவில் அசேதனப் பசளையிலிருந்து சேதனப்பசளைக்கு மாற எதிர்பார்க்கப்பட்ட அம்பாந்தோட்டை விவசாயிகள் ‘‘நில் கத்தியா (நில் என்றால் நெல்லின் தனித்துவமான பச்சை நிறம்) இந்தமுறை நடக்கவில்லை, எல்லாம் மஞ்சளாகவே இருந்துவிட்டன’’ எனக்கூறுகிறார்கள்.
அவர்களால் கடந்த காலங்களில் அரிசி ஆலைகளிற்கோ அல்லது அரச நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்கோ பணத்திற்கு நெல்லை விற்ற பின், தமது குடும்பத்தேவைக்கும் ஒரு பங்கை சேமித்து வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு நெல்லை அறுவடைசெய்யக் கூடியதாயிருந்தது. இம்முறை அறுவடை பாதியாகக் குறைந்தபடியால் பல பேர் நெல்லை தமது குடும்பத் தேவைக்கு மாத்திரம் எடுத்து வைத்துக் கொண்டனர். உற்பத்தி செலவு மற்றும் பற்றாக்குறை அதிகரித்தபடியால் தமது குடும்பத்திற்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவொன்றே அவர்களுக்கு ஒரே வழி.
அரச மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சேதன உரங்கள் பயன்படுத்துவதற்கு கடினமானவை. பல விவசாயிகள் தங்களிற்கு வழங்கப்பட்ட உரத்தின் தரத்தினை பற்றி குறை கூறுகின்றனர். அவர்களிற்கு வழங்கப்பட்ட உரத்தில் கண்ணாடித்துண்டுகள் மற்றும் இறப்பர் துகள்கள் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ‘‘இவற்றால் எங்களிற்கு காயம் ஏற்படலாம் என்று தெரிந்தும் எவ்வாறு எங்களால் வயலுக்குள் இயல்பாக நடமாட முடியும்? எங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் வயல்களில் விளையாடுவார்கள் அவர்களிற்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?’’ விவசாயிகளில் சிலர் தமக்கு வழங்கப்பட்ட சில சேதன உரவகைகளில் மீனின் இரத்தம் காணப்பட்டதாகவும் அவை ஒட்டுமொத்த வயலையும் துர்நாற்றம் வீசுமிடமாக மாற்றியதோடு, பயிர்களை அழிக்கும் விலங்குகளை வயலை நோக்கி ஈர்த்ததாகவும் கூறினர். அவர்கள் குறிப்பிட்ட உரவகைகளின் பெயர்களை அறிய முடியாததால் இதை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தனியே சேதனப்பசளைகளை மாத்திரம் பயன்படுத்தினால் பாரிய அழிவில் தான் போய் முடியும் என்பதால் விவசாயிகள் அசேதனப்பசளைகளை அவற்றுடன் சேர்த்து இட எண்ணினர். சிலர் முகவர்கள் மூலம் உயர் விலையில் அவற்றை கொள்வனவு செய்தனர். 450 ரூபாவுக்கு மானியத்தில் வாங்கியவை தற்போது 15,000 ரூபாவுக்கு மேல் விலை போகின்றன. ஏனையோர் தாங்கள் ஏற்கனவே களஞ்சியப்படுத்தியிருந்தவற்றை பயன்படுத்தினர். ‘‘ஒவ்வொரு போகத்திலும் நாங்கள் சிறிதளவை ஒதுக்கி வைப்போம், அவையும் இப்போது முடிந்து விட்டன, அதனால் அடுத்த போகத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.’’
அறுவடையினை அவர்கள் உழவு இயந்திரத்திற்கான டீசல் விலை மற்றும் அதன் கிடைக்குந்தன்மை ஆகியவற்றுக்கேற்ப திட்டமிட வேண்டியுள்ளது. தொடக்கத்தில் வாகனங்களுக்கு மாத்திரம் நேரடியாக எரிபொருள் நிரப்புமாறு எரிபொருள் நிலையங்கள் பணிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரத்தின் எரிபொருள் முற்றாக தீர்ந்திருந்த விவசாயிகள் உள்ளூர் எரிபொருள் நிலைய ஊழியர்களிடம் இது தொடர்பில் வாக்குவாதப்பட்டனர். தற்போது சில எரிபொருள் நிலையங்களில் விவசாயிகளுக்கு மாத்திரம் கலன்களில் எரிபொருள் நிரப்பப்படுமென அட்டைகளில் எழுதி தொங்கவிட்டுள்ளனர். என்னதான் இருந்தாலும் வரிசையில் நிற்பதை இது போக்கிவிடவில்லை. - ‘‘நாங்கள் அறுவடை செய்வதற்காக மிக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.’’
‘‘நாங்கள் மூன்று நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்ற போதிலும் அவர்கள் கலன்களில் எரிபொருளை நிரப்ப மறுத்துவிட்டார்கள். உழவு இயந்திரத்திற்கு தேவையான எரிபொருளிற்காக கமநல சேவைகள் நிலையத்தில் கடிதம் பெற்று வந்து கலன்களில் எரிபொருளை நிரப்ப வேண்டியுள்ளது.’’
‘‘இந்த வயலில் உள்ள நெல் முற்றிப்பழுத்த நிலையை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்கள் கடந்தால் அதை அறுவடை செய்வதில் பயனில்லை. இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான டீசல் இல்லாததால் அறுவடை பிந்திவிட்டது.’’
பல விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையிடம் நேரடியாக விற்காமல் அரிசி ஆலையின் இடைத்தரகர்களிடம் விற்கின்றனர். சபை அவர்களிடம் குறித்தளவு காய்ந்த நெல்லை கேட்பதே இதன் காரணம். இடைத்தரகர்களிடம் ஈர நெல்லை விற்பதனால் விவசாயிகளுக்கு அதிக எடைக்கான பணம் கிடைப்பதுடன் அந்த இடைத்தரகர்களிடம் அவற்றை காயவைப்பதற்கான கருவிகளும் இருக்கின்றன. தரகர்கள் சில நேரங்களில் நேரடியாக வயல்களிலேயே வந்து நெல் மூட்டைகளை கொள்வனவு செய்வதால் தற்காலத்தில் விவசாயிகளுக்கு நெல்லை இடமாற்றுவதற்கான எரிபொருள் செலவையும் அது சேமிக்கிறது. அவர்களில் யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்க தயாராக உள்ளார்கள்.
நெல் மூட்டைகள் நிரம்பிய உழவு இயந்திரம் ஒன்று எம்மை கடந்து செல்ல அதன் பின்னாலேயே ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்கிறார். ‘‘அதிகரித்த விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக இப்போது நேரடியாக உழவு இயந்திரத்திலிருந்தே மக்கள் சிலவேளைகளில் திருடுவதால், எல்லா உழவு இயந்திரங்களையுமே இவ்வாறு யாராவது ஒருவர் காவலாக பின்தொடர்கிறார்.’’
அரிசித்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தம்மிடம் உள்ள கொஞ்ச நஞ்ச நெல்லையும் தமது குடும்ப உணவுத் தேவைக்கு வைத்துகொள்கிறார்கள். ஒரு சில மூட்டைகள் அதிகமாக உள்ளவர்கள் அடுத்த விலை உயர்வுக்காக காத்திருந்து சிறிது சிறிதாக விற்றுவருகின்றனர். ஒரு விவசாயி இன்னொரு வீட்டிற்கு செல்கையில் மூலையில் கூடுதல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டதைப்பற்றி எம்மிடம் கூறினார். ‘‘அவர்கள் கூடுதல் விலைக்கு விற்க காத்திருப்பதால் எங்களுக்கு விற்க மாட்டார்கள். இந்நேரத்தில் உயிர் வாழ அவர்களுக்கும் அவ்வருமானம் தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.’‘ என அவர் கூறினார்.
‘‘காலங்காலமாக நாங்கள் இந்த நிலங்களில் விதைத்து வருகிறோம். எங்களுடைய பிள்ளைகள் நாங்கள் பயிரிடுவதற்காக படும்பாட்டை கண்டு நல்ல சம்பளம் தரும் வேறு வேலைகளை தேடிச் சென்றுவிட்டார்கள்.’’
ஒரு இரவில் விளைந்த பேரழிவு
விவசாயிகளுக்கு எந்தவொரு பயிற்சியும் வழங்கப்படாது ஓரிரவில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இக்கொள்கை முடிவுகளால் நேரடியாக பாதிக்கப்படப்போகும் விவசாய சமூகத்திடம் கலந்துரையாடாமல் இம்முடிவுகள் எடுக்கப்பட்டன. விவசாய திணைக்கள அதிகாரிகள் செய்த அதிகபட்ச முயற்சி உர விநியோகம் மற்றும் இழப்பீட்டிற்கான படிவங்களை நிரப்பி கையெழுத்திட்டதுதான் என விவசாயிகள் கூறினர். பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதற்கு மேலாக ஆண்டாண்டு காலமாக அசேதன உரங்கள் இடப்பட்டு வந்ததால் மண் அதற்கு இசைவாக்கமடைந்து விட்டது. திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதால் நெல் சேதன பசளையை ஏற்கவில்லை என விவசாயிகள் எண்ணுகிறார்கள். பயிர்கள் வாடத்தொடங்கிய உடனேயே ஏதோ தவறிருப்பதை அவர்கள் அறிகிறார்கள். ‘‘நாங்கள் பல்கலைக்கழகம் ஒன்றுக்கும் போகவில்லை என்றாலும் நெல் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.’’
சேதன பசளையை வீட்டிலேயே செய்ய முயற்சித்த சில விவசாயிகள் அரசால் வழங்கப்பட்ட பசளையை விட தமது பசளைகள் சிறப்பான தரத்திலிருந்ததை கண்டறிந்தனர். இருப்பினும் அதற்குரிய செலவு தற்போதைக்கு கட்டுப்படியானதில்லை. ஒரு கிலோ பசளை உற்பத்திக்கு அவர்கள் மூன்று கிலோ மூலப்பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
‘‘போகம் ஒன்றில் விளைச்சல் நன்றாக இல்லாவிடில் எங்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் நாங்கள் கடன் வாங்குவதில்லை.’’ அதற்குபதிலாக அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்குகின்றனர். உள்ளூர் இளைஞர்களின் விவசாயம் மீதான ஆர்வம் அதிகம் குறைந்துவிட்டது, அதுவும் உரத்தடையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்த பின் மிக அதிகமாக குறைந்துவிட்டது. பலர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்ய விரும்புகிறார்கள். தாராளமாக நிலங்கள் கிடக்கின்ற நிலையில் தற்சார்பான எதிர்காலத்திற்காக அவற்றை விட்டுச் செல்லவது எவ்வளவு ஒரு வெட்கக்கேடான நிலை என விவசாயிகள் கூறுகிறார்கள்.
தற்போதைய நிலையில் அவர்கள் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை என அவர்கள் எண்ணுகிறார்கள். ‘‘விலைகள் அதிகரித்து உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, நாங்கள் எங்கள் நிலத்தில் எதையாவது வளர்த்து எங்களது குடும்பத்திற்கு தேவையான உணவை பெற்றுக் கொள்ளலாம். கொழும்பிலுள்ளவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது நகர்ப்புறத் தோட்டங்களில் அவர்களால் மரக்கறிகளை வளர்க்க முடியாதே.’’
‘‘முன்பெல்லாம் இந்த வரப்பினூடாக நடக்கவே முடியாது இருக்கும். புடலங்காய்கள் மிகுதியாக விளைந்து வழியை மறித்துக்கொண்டு நிற்கும். ஆனால் இந்த போகம் விளைச்சல் குறைந்து விட்டது.’’
‘‘அதிக விளைச்சல் தரும் விதைகளை பசளையின்றி பயன்படுத்தினால் அவைகள் வேலை செய்வதில்லை. பயிர் சுருங்குவதை பாருங்கள். இவற்றை பயன்படுத்த முடியாது.’’
தனது கன்றிப்போன விரல்களால் தக்காளிக் கொடியொன்றை தூக்குகிறார் ஒரு விவசாயி - அதன் இலைகள் கருகத்தொடங்கி விட்டன, தக்காளிப் பழமோ இப்போதுதான் உருவாகத்தொடங்கியுள்ளது. அவர்கள் எமக்கு உரத்துடனான உறவையும் வரலாறையும் பற்றி எமக்கு விளங்கப்படுத்துகிறார்கள். ‘‘முதலில் எங்களை அசேதனப் பசளைகள் பக்கம் திருப்பியது யார்? அரசுதான் அதைச் செய்தது. அதன் பிறகு எங்களை அவர்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட விதைகளை பயன்படுத்த வைத்தார்கள். இவை அனைத்தையுமே அவர்கள் எங்கள் மீது திணித்து விட்டு, ஐம்பது ஆண்டு கால வேலைத்திட்டத்தை நாங்கள் ஒரு இரவில் இல்லாது ஆக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?’’
‘வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட’ கலப்பின விதைகள் 1960களில் பசுமைப்புரட்சியோடு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உள்ளூர் ரகங்கள் அசேதன உரங்களின் தேவையின்றி சேதன மற்றும் ஏனைய இயற்கை உரங்கள் மூலம் நன்றாக வளரக்கூடியதாக இருக்க, இக்கலப்பினங்கள் அசேதன பசளையில் மட்டுமே நன்றாக வளருமாறு உருவாக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் எண்ணுகிறார்கள்.
நாங்கள் அவர்களிடம் இது போன்ற இடையூறை இதற்கு முன் உங்கள் வாழ்நாளில் சந்தித்துள்ளீர்களா எனக்கேட்டோம். ‘‘88/89 காலங்களில் இரண்டாவது கிளர்ச்சியின் போது ஜேவிபி எங்களை பயிரிடாது வயல்களை வெறுமையாக விடுமாறு எங்களிடம் கூறியது. ஆனாலும் நாங்களும் எமது சமூகமும் உண்ண உணவு வேண்டுமே, அதனால் நாங்கள் அப்போதும் பயிரிட்டோம்.’’
‘‘பயிரிடுவது இப்போது பயனற்றதாகி விட்டது. நாங்கள் முன்பு செலவழித்தது போன்று பத்து மடங்கு செலவழித்து கொஞ்சநஞ்ச அறுவடையை பெறுகின்றோம். இனி நாங்கள் எமது வீட்டில் உண்பதற்கு போதுமான அளவுக்கு மாத்திரம் பயிரிடப்போகின்றோம்.’’
‘‘முன்பு நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து நேராக அடுத்த முனை வரை இப்பெரிய வயலை பார்க்ககூடியதாக இருந்தது. ஆனால் அதிவேக நெடுஞ்சாலை வந்துவிட்ட படியால் இனிஅந்த நீண்ட துண்டில் பயிரிட முடியாது.’’
சிறு மரக்கறி பாத்தியை சூழ்ந்து இருக்கும் ஒரு நெல் வயலினூடு நடக்கும் போது எம்மால் நீட்டப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வயல்களை ஊடறுத்து செல்வதை பார்க்க கூடியதாயுள்ளது. நெடுஞ்சாலை இந்த பிரதேசத்தை கூறுபோட்டதனால் ஏக்கர் கணக்கிலான பயிர்ச்செய்கை தற்போது குறைவடைந்துள்ளது. பல விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நட்டஈடும் இன்னமும் வழங்கப்படவில்லை. அவர்களது சுற்றுப்புற ஊர்களில் அந்த நட்ட ஈட்டின் சிறியதொரு பகுதியையாவது பெற்றது அவர்களுக்கு தெரிந்து ஒரேயொரு நபர் மட்டுந்தான்.
நடைமுறை மாற்றமும் நிச்சயமற்ற எதிர்காலமும்
அறுவடை செய்யப்பட்ட வயல்களைக் கடந்து குறைந்த விலையில் எரிபொருள் கோரி மீனவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இடத்தையும் கடந்தபோது அரசு சாரா நிறுவனமொன்றின் பயிற்சியை முடித்து வந்து கொண்டிருந்த சில விவசாயிகளைச் சந்தித்தோம். பயிற்சியாளர் அவர்களுக்கு சேதனப் பசளை வகைகளையும் அவற்றை வீட்டிலேயே உற்பத்தி செய்யும் முறைகளையும் கற்றுக் கொடுத்திருந்தார். எங்களுடன் உரையாடுவதற்காக கதிரையில் அவர்கள் உட்கார்ந்த அதே நேரம்,எங்களுக்கு ஒரு முழுச்சீப்பு வாழைப்பழம் உண்பதற்காக வழங்கப்பட்டது.
அவர்களது தாராளமான விருந்தோம்பல் தற்போது விருந்தினரோடு மட்டுப்பட்டு விட்டது, முன்பென்றால் அவர்கள் சந்தோசமாக ஊரிலுள்ள அனைத்து குடும்பங்களுடனும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். எம்மை மேலும் மேலும் சாப்பிடச் சொல்லிக்கொண்டே ‘‘மக்களை வீட்டுக்கு அழைப்பதென்றாலும் சரி அவர்களுக்கு உணவுகளை அனுப்புவதென்றாலும் சரி விருந்தோம்பல் என்பது எமது பண்பாட்டின்மிக முக்கிய அங்கம். இந்த நெருக்கடிகளெல்லாம் ஒன்று சேர்ந்து எங்களால் இப்போது அதைக்கூட செய்ய முடியவில்லை. முன்பெல்லாம் நாங்கள் அனைத்தையும் அயலாருடன் பகிர்ந்து கொள்வோம். இப்போது எங்களுக்கு அந்தளவுக்கு வசதியில்லை.’’ எனக்கூறினார்கள். நீங்கள் உண்பதற்கே சிரமப்படும் நேரத்தில் எங்களுக்கு தருகின்ற தானத்தின் அளவை நீங்கள் நிச்சயம் குறைக்க வேண்டுமென உள்ளூர் விகாரைகளிலுள்ள பிக்குகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
ஒரு விவசாயி ஓரிரவில் சேதனப்பசளைக்கு மாறியதை பொருத்தமான உவமையொன்றின் மூலம் விளக்கினார்.‘‘வாழ்நாள் முழுதும் ஆங்கில/மேற்கத்தேய மருத்துவம் எடுத்துக்கொண்டிருந்த உங்களிடம் திடீரென பாரம்பரிய/சிங்கள மருத்துவத்தை எடுக்க சொல்வது போல.’’ அவர்கள் உணவுப் பற்றாக்குறையிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது பற்றி எங்களிடம் குறிப்பிட்டார்கள். அதிகளவிலான அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை எங்கிருந்து வருகின்றன எனத்தெரிந்த போதிலும் அவையும் சேதனப்பசளை மட்டும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டனவையா என எமக்குத் தெரியாது.
பசுமையான வயல்களையும் நீர்நிலைகளையும் காட்டி ‘‘எவ்வளவு அழகான வளமான தீவு. எங்களிடம் எல்லாமும் இருக்கின்றன, எல்லாவற்றையும் எம்மால் கொடுக்க முடியும், இருந்தும் நாட்டிற்கு வெளியே பணமனுப்பி உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம்.’’ என அவர்கள் புலம்பினர்.
அரசு தேவையான உதவிகளை செய்து எதிர்காலத்தில், தற்போதுள்ள இக்கட்டான நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை சிறிதளவே உள்ளது. ‘‘என்னென்ன கெடுதல் எல்லாம் நடக்கமுடியுமோ அவை அத்தனையுமே எங்களுக்கு ஏற்கனவே நடந்து விட்டன.’ என்றனர் இறுதியாக.
புள்ளிவிபரங்கள்
- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்தம் 12 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. 2013/14 பொருளாதார மதிப்பீட்டின்படி, அம்பலாந்தோட்டை இவற்றுள் அதிகளவான விவசாயிகளை (ஒட்டுமொத்த மாவட்டத்தின் 11% ஆன விவசாயிகள்) உள்ளடக்கிய பிரதேசமாகும். நாங்கள் சென்ற இடங்கள் யாவும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவையாகும்.
- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2020/21 பெரும்போகத்தில் ஹெக்டயர் ஒன்றுக்கு 5,883 கிலோ கிராம் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது. நாம் சந்தித்த விவசாயிகளில் பெரும்பாலானோர் 2021/22 பெரும்போக விளைச்சல் பாதியாக குறைவடைந்துள்ளதாக கூறுகின்றனர். முற்கூட்டியே சேமித்து வைத்திருந்த இரசாயன உரங்களை பயன்படுத்திய சில விவசாயிகளின் பயிர் இழப்பு மட்டும் சற்றுக் குறைவாக உள்ளது.
- 2013/14 பொருளாதார மதிப்பீடு, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 9,587 ஆண்களும் 1,698 பெண்களும் விவசாயத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது.
- 2013/14 பொருளாதார மதிப்பீட்டின்படி அம்பலாந்தோட்டை பிரதேச விவசாயிகளில் 57.4% ஆனோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இளைஞர்கள் நகரங்களிலோ வெளிநாடுகளிலோ தொழிற்சாலைகளில் வேலை செய்யவே விரும்புகின்றார்கள், விவசாயம் செய்ய விரும்புவதில்லை என எமக்குச் சொல்லப்பட்ட கருத்துடன் இத்தரவு ஒத்துப்போகின்றது.
- நாங்கள் சந்தித்த விவசாயிகள் பலர் நெல், பாசிப்பயறு, குரக்கன், புடலங்காய், குடை மிளகாய், மிளகாய், வெங்காயம் என பல்வேறுபட்ட பயிர்களை பயிரிடுகிறார்கள். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல பெருமளவு நெல் இடைத்தரகர்கள் மூலமாகவே விற்கப்படுகின்றது. ஏனைய பயிர்கள் ஊர் சந்தையில் விற்கப்படுகின்றன.
தரவுகள்
DSC Paddy Data - 2020_2021Maha_Metric (1).pdf 60118
2013_14 Economic Census - HambantotaSH2Report (1).pdf 4176221