Analysis
அவசரநிலை அ முதல் ஃ வரை
Apr 01, 2022
அவசரநிலை என்றால் என்ன, அது உங்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும், அதன் தொழிற்பாடு பற்றி நீங்கள் என்னென்னவற்றை எல்லாம் அறிந்திருக்க வேண்டும்? சிக்கலான சட்டங்களை எளிமைப்படுத்தி இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் உங்களுக்கு நாங்கள் தர இருக்கிறோம்.

ஜனாதிபதி நாடு தழுவிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மக்களை பயமுறுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, அவசர நிலை பற்றி இலங்கையின் குடிமக்களாக நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவற்றை எளிமையாக எடுத்துரைக்க சில சட்டத்தரணிகளை நான் நாடினேன்.

இந்தக்கட்டுரை பல சட்டத்தரணிகளின் கருத்துகளை உள்ளீடாகப் பெற்று உருவாக்கப்பட்ட போதிலும் நான் ஒரு சட்டத்தரணி இல்லை, இக்கட்டுரை தவறான தகவல்களை களைந்து உங்களை தெளிவூட்டவே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அவசரநிலை என்றால் என்ன?

1. பொது

2. அவசரநிலை ஒழுங்குவிதிகள்

3. சிறப்பு அதிகாரங்கள்

இது சட்டப்படியானதுதானா?

இது தொடர்பில் நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டு்ம்?

அடிக்குறிப்புகள்:

அவசரநிலை என்றால் என்ன?

அவசர நிலை பிரகடனம் ஒன்று பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் (PSO) குறிப்பிடப்பட்டுள்ள சில அதிகாரங்களை பயன்படுத்தும் அனுமதியை ஜனாதிபதிக்கும் வழங்கும். குறிப்புகள் அடங்கிய பொது பாதுகாப்பு சட்டத்தின் நகலொன்றை நான் இந்த கட்டுரையுடன் உங்கள் வாசிப்புக்காக பின்னிணைக்கின்றேன்.

Public Security Ordinance.pdf 49843

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமானது ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் 1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பழைய சட்டமொன்றாகும். இச்சட்டம் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன் பல பிற்சேர்க்கைளுக்கும் அடிக்கடி உட்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது:

1. பொது

அவசர ஒழங்குவிதிகளில் உள்ளடங்கியுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்தும் உரிமையை பெற அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என இப்பகுதி கூறுகிறது. அவசரநிலை பிரகடனம் (PoE) நிச்சயமாக அரசாணையாக வெளியிடப்பட வேண்டுமெனவும் இப்பகுதி குறிப்பிடுகிறது.

2. அவசரநிலை ஒழுங்குவிதிகள்

இப்பகுதி அரசியலமைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து சட்டங்களையும் மேவி செயற்படுத்தப்படக்கூடிய பல்வகைப்பட்ட அவசரநிலை ஒழுங்கு விதிகளை பிரயோகிக்கும் இயலுமையை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.

3. சிறப்பு அதிகாரங்கள்

இப்பகுதி, பொலிசார் பொது சட்ட ஒழுங்கினை பேணப் போதுமாக இல்லை என எண்ணும் சந்தர்ப்பத்தில் அவரால் பயன்படுத்தப்படக்கூடிய சிறப்பு அதிகாரங்களை உள்ளடக்கியது.

இவை ஒரு குறிப்பிட்டதொரு படிமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பொதுப்பகுதி ஜனாதிபதி அவசர நிலை ஒழுங்கு விதிகள் வழங்கும் அதிகாரங்களை பிரயோகிக்க முன்னர், கட்டாயம் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

இதற்கு சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 155 வது உறுப்புரையின் படி அவசரநிலை பிரகடனமொன்று அதிகபட்சம் ஒரு மாதம் வரையே நீடிக்கமுடியும். எவ்வாறாயினும் பிரகடனம் முழுமையாக ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட, அரசியலமைப்பின் 156 வது உறுப்புரையின்படி, அது நிகழ்ந்து 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டும்.

‘‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது சட்ட ஒழுங்கினை பேணுவதற்காக அல்லது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக,’’ ஜனாதிபதி பின்வருவனவற்றை செய்ய முடியும்:

  • எந்தவொரு சட்டத்தையும் திருத்தல், நிறுத்தல், மற்றும் சட்டங்களை திருத்தங்களுடனோ இன்றியோ பிரயோகித்தல்.
  • எந்தவொரு நபரையும் கைது செய்ய அல்லது தடுத்துவைக்க அனுமதி வழங்கல்.
  • எந்தவொரு சொத்தினையும் - குறிப்பாக தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக குற்றஞ்சுமத்தப்படும் கட்டிடங்களை, நாட்டின் சார்பில் உடைமையாக்கவோ, கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது பொறுப்பெடுக்கவோ அனுமதி வழங்கல்.
  • நிலந்தவிர்ந்த எந்தவொரு சொத்துக்களையும் நாட்டின் சார்பில் கையகப்படுத்தல்.
  • எந்தவொரு வளாகத்திற்குள்ளும் நுழையவும் தேடலை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கல்.
  • ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் போன்ற பொது ஒன்று கூடல்களை தடை செய்தல்.
  • மக்களை குறித்த இடங்களுக்குள் நுழைய தடைவிதித்தல், இருப்பிடங்களை விட்டு வெளியேற தடை விதித்தல், கடவுச்சீட்டுகளையோ ஏனைய ஆவணங்களையோ பறிமுதல் செய்வோ, எவரையும் பரிசோதிக்கவோ கைது செய்யவோ அனுமதி வழங்கல்.
  • ஜனாதிபதியால் இவ்வதிகாரங்களை தான் நியமிக்கும் அமைச்சர்களுக்கோ அல்லது ‘பொருத்தமான அதிகாரிகளுக்கோ’ பரிமாற்றமுடியும்.
  • ‘பொருத்தமான அதிகாரிகள் மூலம்’, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடியதாக கருதப்படும் எந்தவொன்றையும் (உரை, படங்கள், காணொளிகள், இன்ன பிற) வெளியிடவிடாது கட்டுப்படுத்தல். பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் (அத்தியாயம் 40) காரணமாக இந்தப்பட்டியல் மேலும் நீண்டு [1] செல்கிறது.
  • ஜனாதிபதியால் எந்தவொரு சேவையையும் அடிப்படை சேவையாக அறிவிக்க முடியுமென்பதுடன் அகில இலங்கைக்கும் பொறுப்பான அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஒருவரையும் நியமிக்க முடியும். அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே அவரது பொறுப்பாகும். இதன் நிகழ்கால பிரயோகத்தினை 2021 இல், நெல், அரிசி, சக்கரை மற்றும் பிற நுகர்வு பொருட்களின் வழங்கலை ஒருங்கிணைப்பதற்காக அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன்ஹெல நியமிக்கப்பட்ட போது நாம் நேரடியாக பார்த்தோம்.

இந்த அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்த, முதலில் அவசரநிலை ஒழுங்குவிதிகளை அரசாணையாக அவர் வெளியிட வேண்டும். அவசரநிலை காலாவதியாகும் போது அதனுடன் இவ் அவசரநிலை ஒழுங்கு விதிகளும் காலாவதியாகும். அதாவது  அவசரநிலையை மேலும் நீடிக்க பாராளுமன்றம் அனுமதி மறுக்கும் போது அவசரநிலை ஒழுங்கு விதிகள் காலாவதியாகும்.

மேற்குறிப்பிட்ட அதிகாரங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் இல்லை; இவற்றை சட்டரீதியாக பயன்படுத்த வேண்டுமெனில், அரசாணையொன்று முதலில் வெளியிடப்பட வேண்டும். அத்துடன், அரசியலமைப்பால் வழங்கப்படுகின்ற பின்வரும் அடிப்படை உரிமைகள் இவ்வதிகாரங்களால் மீறப்பட முடியாதவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது:

  • சிந்தனை, உளச்சான்று, மற்றும் மத சுதந்திரம் (உறுப்புரை 10) கட்டுப்படுத்தப்பட முடியாது.
  • சித்திரவதை, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவான தண்டனையிலிருந்து சுதந்திரம் (உறுப்புரை 11) கட்டுப்படுத்தப்பட முடியாது.
  • நீதிமன்றால் அன்றி அரசு நேரடியாக உங்களை மரணதண்டனைக்குட்படுத்த முடியாது. (உறுப்புரை 13(4)) - உதாரணமாக இராணுவத்தினர் உங்களை நினைத்தவுடன் சுட முடியும் எனும் வதந்திகள் தவறானவையாகும்.
  • மீயுயர் நீதிமன்றுக்கு சென்று அடிப்படை உரிமைகள் மீறல் பற்றி முறையிடும் உரிமையை (உறுப்புரை 17) முடக்கமுடியாது.

ஜனாதிபதிக்கு சில சிறப்பு அதிகாரங்கள் அவசரநிலை நடைமுறையில் இருந்தாலும் இல்லையென்றாலும் இருக்கின்றன. ஜனாதிபதி கடந்த மார்ச் 21 உறுப்புரை 40 இனை பயன்படுத்தி நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பொது சட்ட ஒழுங்கினை பேணுமாறு பாதுகாப்பு படையினரை பணித்தமை, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உயிர்த்த ஞாயிற்று தாக்குதலின் பின் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில், இச்சிறப்பு அதிகாரங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படலாம் என விளக்கும் இவ்விளக்கப்படத்தை சட்டத்தரணி எர்மிசா தேகல் உருவாக்கியுள்ளார்:

இங்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இச்சிறப்பு அதிகாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் ஆணைகள் யாவும் மாதம் ஒருமுறை அரசாணையாக வெளியிடப்பட வேண்டும், இல்லையெனில் அவை செல்லுபடியற்றதாகி விடும். தேவைப்படின் இவை இன்னொரு அரசாணை மூலம் நீக்கப்படவும் முடியும்.

இது சட்டப்படியானதுதானா?

ஆம். இதுதான் நாம் ஏற்றுக்கொண்டு இருக்கும் அரசியலமைப்பு.

இந்த அதிகாரங்கள் பிரித்தானிய காலனிகளை ஆட்சி செய்ய உருவாக்கப்பட்டு, பின்பு போரில் ஈடுபடக்கூடியவாறு மாற்றியமைக்கப்பட்டு இன்று நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியை நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபராய் மாற்றியமைத்த அரசியலமைப்பு கொள்கையாய் உருவெடுத்து நிற்கிறது. போர் முடிந்த பின்பும் இவை இன்னும் நடைமுறையில் உள்ளன. இவை அடிப்படை உரிமைகள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையம் ஆய்வுக்கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அவசரநிலை ஒழுங்கு விதிகள் செயற்படுத்தப்பட்டு விட்டால், குற்றமற்றவர் என்ற அனுமானம், ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடப்பாடு, சட்டமொன்று இயற்றப்பட முன் நடந்த நிகழ்வுகள் மீது அச்சட்டத்தை பிரயோகிக்க தடை, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை, கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான பொதுவான சட்ட நடைமுறை மற்றும் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல், சங்கங்கள், இயக்கங்களின் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு, மதம், கலாசாரம் மற்றும் மொழி சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள் போன்றவற்றை அது இல்லாமல் செய்து விடும் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றில் எவராலும் சவாலுக்குட்படுத்த முடியாது. (பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பகுதி 03 ஐ பார்க்கவும், இவை ‘வெளிக்கூறு’ என குறிப்பிடப்படும், அதாவது இவை நீதிமன்றின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவையாகும்) 1980 இல், மீயுயர் நீதிமன்றம் அவசரநிலை பிரகடனத்தை தம்மால் மீளாய்வு செய்ய முடியாது என தெரிவித்திருந்தது. (யசபால எதிர் ரணில் விக்ரமசிங்க)

எவ்வாறாயினும் உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு வலுவான காரணம் உள்ளதா என மீயுயர் நீதிமன்றம் ஆராய முடியும். (பகுத்தறிவு மற்றும் அண்மித்த தொடர்பு என்ற பதத்தை அவர்கள் இதை குறிக்க பயன்படுத்துவர்) உதாரணமாக, ஜோசப் பெரேரா எதிர் சட்டமா அதிபர், கருணாதிலக்க எதிர் தயாநந்த திசாநாயக்க, மற்றும் லிலாந்தி டி சில்வா எதிர் சட்டமா அதிபர், என பல வழக்குகளில் அவசரநிலை சட்ட ஒழுங்குகளின் நியாயத்தன்மையை நீதிமன்று ஆராய்ந்துள்ளது. ஜோசப் பெரேரா எதிர் சட்டமா அதிபர் வழக்கில், பொதுமக்களின் பாதுகாப்பை பேண அவசரநிலை சட்ட ஒழுங்குகள் அவசியம் எனும் ஜனாதிபதியின் கருத்திலுள்ள நியாயத்தை நீதிமன்று ஏற்றுகொண்ட போதிலும், அவசரநிலை ஓழுங்கு விதிகளின் தேவை தொடர்பிலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில், அவசரநிலை ஒழுங்குகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் பகுத்தறிவு மற்றும் அண்மித்த தொடர்பு கொள்கையினடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பது தொடர்பிலும் நீதிமன்றால் கேள்வி எழுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டு்ம்?

நாம் முன்பே கூறியது போல, தற்போதைக்கு அவசரநிலை பிரகடனம் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து அவசரநிலை ஒழுங்கு விதிகள் அரசாணையாக வெளியிடப்படுவுள்ளன. இனி வெளியிடப்படப்போகின்ற அசாதரணமான அரசாணைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Documents.gov.lk இணையத்தளத்தின் மீது ஒரு கண்ணை வைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இப்போதைக்கு எம்மால் தரக்கூடிய ஒரேயொரு அறிவுரை. வழமைக்கு மாறான முடிவுகள் ஜனாதிபதியினால் எடுக்கப்படும் போது அவை இவ்விணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

இது மேலிடத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பில் ஓரளவாவது மக்களுக்கு விளக்கம் கிடைக்கும் வாய்ப்பை தருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் விரிவான அதிகாரங்களில் ஏதேனும் ஒன்று பிரயோகிக்கப்பட்டால் இந்த வகையில் மக்களுக்கு நிச்சயம் தகவல் தரப்படும்.

அரசாணைகளின் முக்கியத்துவத்தை எம்மால் மிகைப்படுத்தி கூறிவிடமுடியாது. அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், வாட்சப் செய்திகள் என்ன கூறினாலும், இது தொடர்பான சட்டபூர்வமான முடிவுகள் யாவும் நிச்சயம் அரசாணையூடாக வரவேண்டும், அவ்வாறே இதுவரை வந்து கொண்டுள்ளன.

அவசரநிலையினை பாராளுமன்றம் எதிர்க்குமாயின், அவசரநிலை இயல்பாகவே காலாவதியாகும்.

எமக்கு விவரம் தெரிந்த பின்னான வாழ்க்கையில் பெரும்பாலானதை (எமது வாசகர்களில் பெரும்பாலானோரின் வயதின் அடிப்படையில்) நாம் அவசரநிலையிலேயே கழித்துள்ளோம். 1983 இல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம், 2011 ஆகஸ்ட் மாதமே முடிவுக்கு வந்திருந்தது. 2018 இல் கண்டி சம்பவங்களுக்கு பிறகு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றொரு அவசர நிலை பிரகடனமொன்றை பிறப்பித்திருந்தார். மற்றுமொரு அவசரநிலை பிரகடனம் 2019 உயிர்த்த ஞாயிற்று தாக்குதல்களுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்டது. 2021 இல், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உணவுப்பொருட்களின் விலையினை கட்டுப்படுத்த மற்றுமொரு அவசரநிலை பிரகடனமொன்றை பிறப்பித்ததுடன், அவசரநிலை ஒழுங்கு விதிமுறைகளை பயன்படுத்தி மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன்ஹெலவை அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகமாக நியமித்திருந்தார்.

இவ்வரலாறுகளின் அடிப்படையில் பார்த்தால் அவசர நிலை பிரகடனமொன்று, பேச்சுரிமையையோ போராட்டங்களையோ பத்திரிகையாளர்களின் செயற்பாடுகளையோ முழுமையாக தடுத்துவிட முடியவில்லை என்பது தெளிவாகிறது.

எவ்வாறாயினும், மேலும் பலவற்றால் நம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ‘பல இடங்களில் பாதுகாவல் அதிகரிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’, என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். அவசர நிலை பிரகடனம் ஒன்று செயற்பாட்டில் இருந்தாலும் இல்லையென்றாலும், மிகவும் விரிவான அதிகாரங்கள் மிக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் செயற்பாட்டில்தான் உள்ளது.

இது மிகவும் சிக்கலான சட்டவிதிகள் பற்றியதொரு எளிமையான விளக்கம் மாத்திரமே, சட்டங்களை விளங்கி கொள்ளும் போது, நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கொள்கைகள், கொள்கை செயற்படுத்தல், கொள்கைகள் பற்றிய நீதிமன்ற முடிவுகள், மற்றும் வழக்குகளை பொறுத்து தாக்கம் செலுத்தக்கூடிய பல்வேறுபட்ட வேறு சட்டங்கள் என பலவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால், வழக்கறிஞர் ஒருவரை நாடுவதே சரியான தெரிவாகும்.

நீங்கள் அவசரநிலை பற்றி சிரத்தை எடுப்பின், தயவு செய்து வதந்திகளையோ ஊகங்களையோ பகிராதீர்கள். நீங்கள் சாதாரணமாக நினைத்து பகிர்வது பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். நீங்கள் பாராளுமன்றத்துக்கென தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகளிடம் சென்று அவசரநிலையினை மேலும் நீடிக்க அனுமதிக்க வேண்டாம் எனச் சொல்வதே, இந்நிலையில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிக சரியான நடவடிக்கையாகும்.

இந்தக்கட்டுரைக்கு பங்களித்த அனைத்து சட்டத்தரணிகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது நிபுணத்துவம் இல்லையேல் பல வதந்திகள் எதிர்ப்பே இல்லாமல் பரவி இருந்திருக்கும்.

அடிக்குறிப்புகள்:

[1] 2005 ஆம் ஆண்டு இராஜதந்திரியும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான லக்‌ஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்குப் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையிலிருந்து: 26) எவராது எழுத்தாலோ பேச்சாலோ குறியீடுகளாலோ புலனாகக்கூடிய சித்தரிப்புகளாலோ நடத்தைகளாலோ அல்லது வேறு செயற்பாடுகளாலோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சட்ட அங்கீகாரம் பெற்ற இலங்கை அரசின் ஆட்சியினை சட்ட விரோதமான முறையில் கவிழ்க்கும் விருப்பத்தினையோ தேவையினையோ பணியினையோ பரப்புரை செய்தாலோ, தூண்டினாலோ அல்லது அறிவுறுத்தினாலோ அவர் குற்றம் செய்தவராவார்_. 27) எவரும், பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கலிற்கு கேடு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்தினை உடைய, சுவரொட்டிகளையோ துண்டு சீட்டுகளையோ பொதுமக்கள் பார்வை படும்படியான இடங்களில் ஒட்டவோ பொதுமக்களிடம் கையளிக்கவோ கூடாது. 28) எவரும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய அல்லது சட்ட ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய வதந்திகளையோ, தவறான தகவல்களையோ எழுத்தாலோ பேச்சாலோ இன்னபிற முறைகளாலோ பரப்பக்கூடாது. 29) தகவல்களை பதிவுசெய்யும் அல்லது வழங்கும் அல்லது தகவல்கள் தொடர்பான கருத்தினை தெரிவிக்கும் எந்தவொரு ஆவணத்தையோ, சித்தரிப்பையோ, படத்தினையோ, திரைப்படத்தினையோ அல்லது இன்ன பிற படைப்புகளையோ அச்சிடவோ வெளியிடவோ செய்யும் எந்த நபரும் :—_

a) இவ்வொழுங்கு விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்ட எந்தவொரு அமைப்புகளினதும் நடவடிக்கைகள்

b) பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான அரசின் விசாரணைக்கு சம்பந்தமான எந்தவொரு விடயமும்;;

c_) இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் இடமாற்றங்கள், நிலைகள், நகர்வுகள் அல்லது செயற்பாடுகள்;_

d_) இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடையை எந்தவொரு விடயமும்;_

e_) சமூக பதற்றத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளைவிக்கக்கூடிய எந்தவொரு விடயமும்; குற்றச்செயலாகும்._

https://www.refworld.org/pdfid/471712342.pdf