இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் முதன்முறையாக தனது வெளிநாட்டு கடன் மீளச் செலுத்தும் கடப்பாடுகளில் இருந்து தவறும் நிலை உருவாகியுள்ளது. சில சர்வதேச ஊடகங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் என்பன எதிர்வரும் மாதங்களில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் இருந்து தவறும் என சுட்டிக்காட்டியுள்ளன.
இதனை நோக்கும்போது எமக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன: இலங்கைக்கு எவ்வளவு கடன் உள்ளது? யாரிடம் இருந்து இக்கடன்கள் பெறப்பட்டுள்ளன? எம்மால் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு நாம் ஏன் மற்றும் எவ்வாறு இக்கடன்களை பெற்றுக்கொண்டோம்? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
முதலாவதாக, ஏன் இலங்கை இவ்வளவு அதிக கடன்களை பெற்றுக்கொண்டது?
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய ஒரு மீட்டல்
நாம் யாரிடம் இருந்து இந்தப் பணத்தை கடனாகப் பெற்றோம்? எதற்காக இக்கடன்கள் பெறப்பட்டன?
நாம் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளோமா?
எமது நண்பன், சர்வதேச இறையாண்மை முறிகள்
எமது தற்போதைய பாரிய கரிசனை என்ன?
முதலாவதாக, ஏன் இலங்கை இவ்வளவு அதிக கடன்களை பெற்றுக்கொண்டது?
இதனை எளிமையாகக் கூறுவதாயின்: இலங்கை அரசாங்கங்களால் போதிய வருமானத்தை பெற முடியாமல் போனதே பிரதான காரணமாகும்.
அரசாங்கங்களின் வருமானங்கள் அவற்றின் செலவினங்களை ஈடு செய்ய போதாது என்கின்ற நிலையை அடையும்போது அவை கடன்களைப் பெறுகின்றன. தேசிய பாதுகாப்பினை வழங்குதல், சட்டம் ஒழுங்கை பேணுதல், உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களை அமுல்படுத்துதல் என்பன அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளாக அமைகின்றன. இலங்கையின் அரசாங்கமும் இதற்கு விதி விலக்கானது அல்ல.
ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் போன்ற அரச துறை பணியாட்களின் சம்பளங்களை வழங்குதல், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசன முறைமைகள், அத்துடன் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்குவதும் அரச செலவினங்களின் பகுதியாக அமைகின்றது. இந்த செலவினங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக பணத்தைத் திரட்ட வேண்டிய தேவையுள்ளது. வரிகளே அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமாக அமைகின்றன. பொருட்கள், சேவைகள், தனி நபர்கள் மற்றும் கம்பனிகள் மீது அரசாங்கத்தினால் வரிகள் விதிக்கப்படுகின்றன. எனினும் அரசாங்கம் வரிகள் மூலம் போதிய வருமானத்தை திரட்ட முடியாமல் போகும் நிலையால் ஏற்படும் இடைவெளியை நீக்குவதற்கு அவை கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
அரசாங்கம் கடன்களைப் பெறும் வேளை அது உள்ளூர் மூலங்களிடம் இருந்தோ அல்லது வெளிநாட்டு மூலங்களில் இருந்தோ கடன்களைப் பெற்றுக்கொள்கின்றது. உள்நாட்டுக் கடன் பெறுகைகள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளை வழங்குவதன் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறிகள் மற்றும் உண்டியல்கள் அரசாங்கத்தின் பிணை பொறுப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் நாம் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மூலங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களைப் பற்றியே நோக்கவுள்ளோம்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய ஒரு மீட்டல்
கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களின் பெரும் பகுதிக்கான நிதியிடல்கள் வெளிநாட்டுக் கடன்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 70 களின் பிந்திய பகுதி மற்றும் 80 களில் இலங்கை அரசாங்கம் மகாவெலி அபிவிருத்தி திட்டம் போன்ற பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இத்திட்டங்களுக்கான நிதியிடல்கள் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி போன்ற பல்தேசிய நிறுவனங்கள் வழங்கிய கடன் வசதிகளின் மூலமே மேற்கொள்ளப்பட்டன.
பல தசாப்தங்களாக இலங்கை தனது அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்ற சலுகைமிக்க வெளிநாட்டுக் கடன்களிலேயே அதிகம் தங்கியுள்ள நாடாக இருந்து வருகின்றது. சில பொருளியல் நிபுணர்கள் இலங்கையை கொடை வழங்குவோரின் அன்புக்குரிய நாடு என அடையாளம் காணும் அளவுக்கு இந்த தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.
கடன் வாங்குவதில் அதிகம் தங்கியிருந்தமையினால் 1977 ஆம் ஆண்டு பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் கடன்கள் துரிதமாக அதிகரித்தன. இலங்கை அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நுகர்வுக்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றுக்கொண்டிருந்தமையால் 1980 களில் இலங்கையின் கடனின் அளவு வானளாவ உயர்ந்திருந்தது. 1989 இல் இலங்கையின் கடன்கள் (இதில் உள்ளூர்க்கடன்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்குகின்றன) நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் அளவுடன் ஒப்பிடும் வேளை அதன் 109% ஆகக் காணப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியின் உச்ச சதவீதமான 62% என்ற அளவீட்டையும் 1989 ஆம் ஆண்டு இலங்கை பதிவு செய்தது.
மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுக் கடன் உச்ச அளவீடுகளை அடைந்த போதும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் அக்கால நெருக்கடி நிலையினை சமாளித்தது. அந்நேரத்தில் இலங்கை பெற்றிருந்த பெரும்பாலான கடன்கள் சலுகை அடிப்படையில் அமைந்திருந்ததே நிலைமையை சமாளிக்க முடிந்தமைக்கான பிரதான காரணமாகும். இந்த சலுகைக் கடன்கள் குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான கூடிய கால அவகாசம் என்பவற்றைக் கொண்டனவாக அமைந்திருந்தன. இந்தக் காலப்பகுதிகள் 20 தொடக்கம் 40 வருடங்கள் என்ற வேறுபட்ட அளவுகளில் அமைந்திருந்தன. எனவே ஒவ்வொரு வருடமும் அதியுயர் வெளிநாட்டுக் கடன் தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை.
எனினும், இலங்கை 1997 ஆம் ஆண்டு நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் நிலைமைகள் மாற்றமடைய ஆரம்பித்தன. இவ்வாறான தரமுயர்த்தலைத் தொடர்ந்து பல்தரப்பு அபிவிருத்தி முகவர் அமைப்புகள் இலங்கைக்கான சலுகைக் கடன்களை குறைக்க ஆரம்பித்தன. நாம் தலா மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் நடுத்தர வருமானம் பெறும் நாடு என தரமுயர்த்தப்பட்ட (நபர் ஒருவரின் சராசரி வருட வருமானம்) அதே வேளை எமக்கு பல பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான உட்கட்டமைப்பு தேவைகளும் காணப்பட்டன. மேலும், வரவு செலவுத் திட்டத்தில் பாரிய துண்டு விழும் தொகைகள் காணப்பட்ட நிலையில் சொந்தமாக உட்கட்டமைப்பில் முதலீடு செய்யும் திறன் இலங்கையிடம் இருக்கவில்லை.
எனவே, இலங்கை இந்நிலையை சமாளிக்க என்ன செய்தது? நாம் மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தோம். சர்வதேச முதலீட்டுச் சந்தைகள் எம் முன் காணப்பட்ட ஒரு சாத்தியமான தெரிவாக அமைந்திருந்தது, மேலும், ஏற்றுமதி - இறக்குமதி வங்கிகள் (EXIM Banks), பிரதானமாக சீனாவின் EXIM வங்கியில் தங்கிருப்பது இன்னொரு தெரிவாக காணப்பட்டது. இவற்றிடம் பெறும் கடன்கள் வர்த்தக ரீதியான கடன்கள் என்பதால் கடனுக்கான செலவு மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையின் கடன் இயக்கவியலில் முழுமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது. 2020 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியை அடைந்த போது இலங்கையின் மொத்தக் கடன்களில் 51% சலுகைகளற்ற வர்த்தகக் கடன்களாகவே அமைந்திருந்தது.
எளிமையாகக் கூறுவதாயின், சலுகைகளற்ற கடன்கள் என்பது அதியுயர் வட்டி வீதங்களையும் குறைவான திருப்பிச் செலுத்தும் காலப்பகுதியையும் கொண்ட கடன்களாகும். திருப்பிச் செலுத்தும் காலம் கடன் தொகைக்கு ஏற்ப வேறுபடுகின்றது. சலுகைக் கடன்கள் குறைந்த வட்டி வீதம் மற்றும் கூடிய திருப்பிச் செலுத்தும் காலப்பகுதி என்பவற்றைக் கொண்டனவாக அமைந்துள்ள அதேவேளை சலுகைகளற்ற கடன்களின் உயர் வட்டி வீதம் மற்றும் குறைந்த திரும்பச் செலுத்தும் காலப்பகுதி என்பன திரும்பச் செலுத்தும் சுமையை அதிகரிக்கின்றன என்பதை இதன் சாரமாகப் புரிந்து கொள்ளலாம். இது சலுகை மற்றும் சலுகைகளற்ற கடன்களுக்கான துல்லியமான வரைவிலக்கணம் அல்ல என்பதை இங்கு புரிந்து கொள்ள வேண்டும், இந்த சலுகையின் அளவு அக்கடனுடன் இணைந்துள்ள மானியம் என்ற அம்சத்தை வைத்தே அளவிடப்படுகின்றது. இது சம்பந்தமான நுட்பமான விடயங்களை அறிய விரும்பும் ஒருவர் இவ்விணைப்பை வாசிப்பதன் மூலம் தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம்.
Foreign Debt Composition, 2004-2020
Year | Commercial loans % | Concessionary Loans % |
---|---|---|
2004 | 2.55 | 97.45% |
2005 | 3.89 | 96.11% |
2006 | 7.28 | 92.72% |
2007 | 17.08 | 82.92% |
2008 | 15.29 | 84.71% |
2009 | 27.8 | 72.20% |
2010 | 37.42 | 62.58% |
2011 | 42.95 | 57.05% |
2012 | 50.51 | 49.49% |
2013 | 49.57 | 50.43% |
2014 | 52.11 | 47.89% |
2015 | 51.19 | 48.81% |
2016 | 53.1 | 46.90% |
2017 | 54.85 | 45.15% |
2018 | 54.85 | 45.15% |
2019 | 56.77 | 43.23% |
2020 | 53.8 | 46.20% |
நாம் யாரிடம் இருந்து இந்தப் பணத்தை கடனாகப் பெற்றோம்? எதற்காக இக்கடன்கள் பெறப்பட்டன?
கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கை இரண்டு பிரதான காரணங்களுக்காக வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றது. ஒன்று, நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக. மற்றையது, கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்காக (இது மீளநிதியிடல் என்ற பொருளாதாரப் பதத்தினாலும் அழைக்கப்படுகின்றது).
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பிரதானமாக திட்ட அடிப்படையில் (project-based) அமைந்த வெளிநாட்டுக் கடன்கள் மூலமே நிதி வழங்கப்பட்டது. பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறையாக சர்வதேச முதலீட்டுச் சந்தைகளில் கடன் பெறுவது அமைந்திருந்தது. சர்வதேச இறையாண்மை முறிகளை (ISBs) வழங்குவதன் மூலம் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் இவ்வாறான கடன்கள் பெறப்பட்டன.
இனி, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக நாம் எவ்வளவு கடனை பெற்றுள்ளோம் மற்றும் அக்கடனை எங்கிருந்து பெற்றுக்கொண்டோம் போன்ற விடயங்களை நாம் நோக்குவோம்.
2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 வரையான காலப்பகுதிகளில் அரசாங்கம் பல துறைகளில் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தது, இவை அனைத்துக்குமான நிதிகளும் வெளிநாட்டுக் கடன்களின் ஊடாகவே பெறப்பட்டிருந்தன.
இவற்றில் பெரும்பாலான பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் 2005 ஆம் ஆண்டின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டன, எனினும் சில திட்டங்களுக்கான பூர்வாங்கப் பணிகள் 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. 2005-2021 காலப்பகுதியில் இலங்கை இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை (தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேகப் பாதை) திறந்து வைத்தது. இதற்கு மேலதிகமாக, இந்த இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வெளிச்சுற்று நெடுஞ்சாலை, இலங்கையின் முதலாவது நிலக்கரி மூலம் செயற்படும் மின்னுற்பத்தி நிலையம், புதிய சர்வதேச துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியன உருவாக்கப்பட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளாகும். இதற்கு மேலதிகமாக, நாட்டின் பல பிரதான வீதிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன, வடக்கு புகையிரதப்பாதை அமைக்கப்பட்டதுடன் தெற்கு புகையிரதப் பாதையும் நீட்டப்பட்டது. மேலும், கொழும்பு மற்றும் கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது பகுதி 2021 இன் ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களில் அநேகமானவற்றுக்கு திட்டக் கடன்கள் மூலமே நிதி வழங்கப்பட்டது, இவ்வாறு பெறப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து (EXIM Bank) பெறப்பட்டது. இந்த திட்டக் கடன்களுக்கு மேலதிகமாக இறையாண்மை முறிகளை வழங்கியும் கடன் பெறப்பட்டது.
பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கு வேறுபட்ட கடன் வழங்குனர்களிடம் இருந்து எவ்வளவு பணம் கடனாகப் பெறப்பட்டது மற்றும் அவற்றுக்குரிய நிபந்தனைகள் பற்றிய விபரங்கள் கீழுள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.
Project Name | Lender | Agreement Date | Amount (In USD) | Grace Period (Years) | Loan Period Including Grace Period (Years) | Interest Rate |
---|---|---|---|---|---|---|
Puttalam Coal Power Project - Preferential Buyer's Credit | China | 2005/08/30 | 300,000,000 | 7 | 21 | 2 |
National Highways Sector Project | ADB | 2006/12/14 | 150,000,000 | 4 | 24 | LIBOR 6+0.6 |
Puttalama Coal Power Project - Buyer's Credit Facility. | China | 2006/09/08 | 152,982,427 | 9 | 18 | LIBOR 6+1 |
Colombo Port Expansion Project | ADB | 2007/04/25 | 300,000,000 | 5 | 25 | LIBOR 6 |
Hambantota port development project | China | 2007/10/30 | 306,726,735 | 6 | 17 | 6.3 |
Upgrading of Railway Line Colombo Matara. | India | 2008/07/23 | 100,000,000 | 4 | 16 | LIBOR 6+0.5 |
Uma Oya Hydro Electric and Irrigation Project (Iran) | Iran | 2008/04/28 | 450,000,000 | 6 | 15 | LIBOR 6 |
Clean Energy and Access Improvement Project | ADB | 2009/06/17 | 135,000,000 | 5 | 24 | LIBOR 6+0.2 |
Colombo - Katunayake Expressway (CKE) Section A2 | China | 2009/08/06 | 63,573,815 | 4 | 16 | 6.3 |
Colombo - Katunayake Expressway ( CKE) Section A1 | China | 2009/08/06 | 70,041,527 | 4 | 16 | 6.3 |
Colombo - Katunayake Expressway (CKE) Section A3 | China | 2009/08/06 | 47,801,344 | 4 | 16 | 6.3 |
Colombo Katunayake Expressway (CKE) Section A4 | China | 2009/08/06 | 66,783,314 | 4 | 16 | 6.3 |
Puttalam Coal Power Project - Phase II | China | 2009/12/25 | 891,000,000 | 5 | 20 | 2 |
Northern Road Rehabilitation Project- 11B | China | 2010/09/09 | 42,509,700 | 4 | 16 | LIBOR 6+2.4 |
Northern Road Rehabilitation Project ( Mulativu _ Kokkilai) - 11A | China | 2010/09/09 | 42,767,677 | 4 | 15 | LIBOR 6+2.4 |
Northern Road Rehabilitation Project-(AB020) (AB032)(AB016)(AB018) | China | 2010/09/09 | 74,758,205 | 4 | 15 | LIBOR 6+2.4 |
Northern Road Rehabilitation Project-A009 ( From 230 Km Post to Jaffna) | China | 2010/09/09 | 70,510,671 | 4 | 15 | LIBOR 6+2.4 |
Hambantota Port Development Phase I for Ancillary Work and Supply of Equipment Project | China | 2013/04/24 | 140,000,000 | 5 | 20 | 2% |
Hambantota Port Development Project - Phase II | China | 2012/09/17 | 51,000,000 | 4 | 15 | LIBOR 6 months for USD +4% |
Hambantota Port Development Project Phase II | China | 2012/09/17 | 145,000,000 | 7 | 20 | 2% |
Hambantota Port Development Project - Phase II | China | 2012/09/17 | 600,000,000 | 6 | 19 | 2% |
Railway Line Omanthai-pallai, Madhu-Tallaimannar & Medawachchiya | India | 2010/11/26 | 416,390,000 | 5 | 40 | LIBOR 6+0.5 |
Construction of Outer Circular Highway Project - Phase 1 | Japan | 2007/03/28 | 187,324,000 | 10 | 30 | 1.5 |
Construction of Outer Circular Highway Project- Phase 2(I) | Japan | 2008/07/29 | 52,458,000 | 10 | 40 | 0.2 |
Construction of Outer Circular Highway Project - Phase 2 (II) | Japan | 2011/03/22 | 391,209,000 | 10 | 40 | 0.2 |
Restoration of Northern Railway Services | India | 2012/01/17 | 382,370,000 | 6 | 24 | LIBOR 6+0.5 |
Mattala Hambantota International Airport Project | 3/5/2010 | 3/5/2010 | 191,200,000 | 6 | 20 | 2 |
Matara Beliatta Section of Matara Kataragama Railway Extension Project | 2013/02/19 | 4/19/2013 | 200,000,000 | 7 | 19 | 2 |
Matara- Beliatta Section of Matara - Kataragama Railway Extension Project | 2013/05/28 | 5/4/2014 | 83,278,000 | 8 | 21 | 2 |
Construction of Outer Circular Highway Project Phase III from Kerawalapitiya to Kadawatha | 2014/09/16 | 1/25/2017 | 494,037,400 | 5 | 20 | 2 |
Construction of Extension of Southern Expressway, Section 4 from Mattala to Hambantota via Andarawewa Project | 2014/09/16 | 1/20/2017 | 414,454,000 | 6 | 20 | 2 |
Hambantota Hub Development Project | 2014/09/16 | 1/20/2017 | 255,081,000 | 6 | 20 | 2 |
Construction of Extension of Southern Expressway Section 1 from Matara to Beliatta | 2014/12/23 | 1/25/2017 | 683,494,300 | 6 | 21 | 2 |
Construction of Extension of Southern Expressway, Section 2 from Beliatta to Wetiya Project | 2016/04/07 | 6/24/2016 | 360,293,948 | 5 | 20 | 2 |
Central Expressway Project - Section 01 from Kadawtha to Meerigama | 2019/03/22 | 3/22/2019 | 989,000,000 | 6 | 20 | 2.5 |
இதில் காணப்படும் தரவுகளுக்கு ஏற்ப, பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக பெரும் தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளது.
இங்குள்ள கேள்வி என்னவெனில், நாடு தனது வரவு செலவுத்திட்டத்தில் பாரிய துண்டு விழும் தொகையைக் கொண்டிருந்த நிலையில் மற்றும் அந்நியச் செலாவணி பிரச்சினைகளுக்கு மத்தியில் இத்திட்டங்கள் அவசியமானவையா என்பதாகும். கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மாத்தறை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை என்பன மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கக் கூடியது என நியாயப்படுத்த முடிந்தாலும் இரண்டாவது விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞசாலை விஸ்தரிப்பு என்பவற்றின் அவசியம் கேள்விக்குரியதாகும். குறிப்பாக அரசாங்கம் வரவு செலவில் துண்டு விழும் தொகை மற்றும் நடைமுறைக் கணக்குகளில் துண்டு விழும் தொகை என்பவற்றை கையாள வேண்டிய சூழ்நிலையில் இக்கேள்வி முக்கியத்துவம் பெறுகின்றது.
தெற்கு புகையிரதப் பாதையை பெலியத்தை வரை நீடிப்பது ஒரு பொருளாதார முன்னுரிமையாக அமைந்திருந்ததா? இலங்கை அரசாங்கம் தெற்கு அதிவேகப் பாதையை மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை விஸ்தரிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன் பெற்றிருந்தது, இது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையை நிர்மாணிக்க பெறப்பட்ட கடனின் நான்கு மடங்குக்கும் அதிகமாகும். அதே போன்று தெற்கு புகையிரதப் பாதையை கதிர்காமம் வரை விஸ்தரிக்க பெறப்பட்ட கடன், கொழும்பு – கட்டுநாயக்க அதி வேகப் பாதை நிர்மாணத்துக்கு பெறப்பட்ட கடனிலும் அதிகமாகும்.
நாம் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளோமா?
இந்த அட்டவணையின் அடிப்படையில், எமது கடன்களில் பெரும்பாலானவை சீனாவிடம் இருந்தே பெறப்பட்டுள்ளன என நீங்கள் நினைப்பது புரிந்துகொள்ளத்தக்கதாகும். 2005 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்களின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்த போதும் சீனா இலங்கையின் பிரதானமான கடன் வழங்கும் வெளிநாடு அல்ல என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, இலங்கை வெளிநாட்டு நாணயங்களில் கடன்களைப் பெற சர்வதேச இறையாண்மை முறிகளை விடுவிக்க ஆரம்பித்தது. இறுதியாக, அதுவே இந்நாட்டின் பிரதான வெளிநாட்டுக் கடன் பெறும் மூலமாக மாறியது. 2020 இன் இறுதியில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களில் கிட்டத்தட்ட 40% இந்த சர்வதேச இறையாண்மை முறிகளின் ஊடாக பெறப்பட்டனவாகவே உள்ளது – அவை திட்டக் கடன்களாக அமையவில்லை, இவ்விடயம் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடன் பெற்ற வெளிநாட்டு மூலங்கள் தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இந்த வரைபு தெளிவுபடுத்தும். இந்த வரைபு காண்பிப்பதைப் போன்று, இலங்கையின் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பெரும்பாலானவற்றுக்கு சீனா கடன் வழங்கிய போதும், அது எமது மிகப்பெரிய கடன் வழங்கும் நாடாக அமையவில்லை. சர்வதேச இறையாண்மை முறிகள் எமது கடன்களில் பாரிய பகுதியாக அமைந்திருப்பது மாத்திரமன்றி இலங்கை தனது அந்நியச் செலாவணி வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்வதில் எதிர்கொள்ளும் பாரிய கரிசனையாக அமைந்துள்ளது.
எமது நண்பன், சர்வதேச இறையாண்மை முறிகள்
தற்பொழுது நாம் சர்வதேச இறையாண்மை முறிகளின் தன்மையினை நோக்குவோம்.
சர்வதேச இறையாண்மை முறிகள் என்பன திட்டம் ஒன்றுடன் இணைக்கப்படாத வர்த்தக கடன் பெறுதலைக் குறிக்கின்றன. இதன் பொருள் பெறப்படும் கடன் தொகையினை அரசாங்கம் விரும்பிய வழியில் செலவிட முடியும் என்பதாகும். அத்துடன் அரசாங்கம் கோரும் கடன் தொகையானது ஒரே தடவையில் வழங்கப்படும்.
இது அரசாங்கம் தனது அந்நியச் செலாவணி சேமிப்புகளை அதிகரித்துக் கொள்ளும் வழியாகக் காணப்படுகின்றது, எனவே, இது செலுத்த வேண்டிய தொகைகள் பற்றிய பாதிப்புறும் ஏதுநிலைகள் சர்வதேச இறையாண்மை முறிகள் வழங்கும் காசுப் பாய்ச்சலை முகாமைத்துவம் செய்ய வழங்கும் சுயாதீனம் காரணமாக குறைக்கப்படுகின்றன. இது ஏனைய நாடுகள், பல தரப்பு முகவர் அமைப்புகள் மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி வங்கிகளிடம் இருந்து திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன்களின் வகையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். திட்டங்களின் ஊடாகப் பெறப்பட்ட கடன்கள் கட்டுப்பாடுகள் மிக்கனவாக அமைகின்றன, அக்கடன்கள் பெறப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுதல் அல்லாத வேறு விடயங்களுக்காக பயன்படுத்தப்பட முடியாதனவாகும்.
மேலும், இந்த திட்டங்கள் கடன் வழங்கும் நாடுகளில் உள்ள ஒப்பந்தக்காரர்களாலேயே அமுல்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, வடக்கு புகையிரதப் பாதை அமைப்பு பணிகள் இந்திய அரசாங்கத்துடன் இணைந்த IRCON சர்வதேச கம்பனியினாலேயே முன்னெடுக்கப்பட்டது, அதே போன்று ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சைனா ஹார்பர் கம்பனியினாலேயே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான கட்டுப்பாடுகள் அல்லது குறைபாடுகள் சர்வதேச இறையாண்மை முறிக் கடன்களுடன் இணைந்திருப்பதில்லை.
எவ்வாறாயினும், சர்வதேச இறையாண்மை முறிக் கடன்கள் திட்டக் கடன்களை விட செலவு கூடியவை. அவை சர்வதேச முதலீட்டுச் சந்தைகளினாலேயே வழங்கப்படுகின்றன, எனவே அவற்றின் வட்டி வீதம் திட்டக் கடன்களை விட மிகவும் உயர்வானதாகும். வழங்கப்பட்ட சர்வதேச இறையாண்மை முறிகளுக்கு 5.13% தொடக்கம் 8.75% வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. அதே வேளை, திட்டக் கடன்களுக்கான வட்டி வீதம் 2% ஆகும். (உலக வங்கி மற்றும் ஜப்பான் நாடு என்பன வழங்கிய கடன்களுக்கான வட்டி வீதம் 1% இனையும் விடக் குறைவாகும், எனினும் இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடு எனத் தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் இந்த இரண்டு மூலங்களும் கடன் வழங்குவதைக் குறைத்துள்ளன). உயர் வட்டி வீதத்துக்கு மேலதிகமாக, சர்வதேச இறையாண்மை முறிகள் முதிர்ச்சியடையும் வேளை, அக்கடன் தொகை ஒரே தடவையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
நாம் எவ்வளவு ஆழமான படுகுழியில் வீழ்ந்துள்ளோம்?
இலங்கையின் கடன் பிரச்சினைகளை புரிந்து கொள்வதில் இது மிகவும் முக்கிய காரணியொன்றாக விளங்குகிறது.
இலங்கை 5 வருடம் முதிர்ச்சிக் காலம் கொண்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்க சர்வதேச இறையாண்மை முறி ஒன்றைப் பெற்றுள்ளது என வைத்துக்கொள்வோம். இந்த இறையாண்மை முறிக்கு இலங்கை அரசாங்கம் வருடாந்த வட்டித் தொகையை ஒவ்வொரு வருடமும் இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும். எனினும் கடன் தொகை ஒவ்வொரு வருடமும் செலுத்தப்பட வேண்டியதில்லை. இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகை மாற்றமடையாமல் அவ்வாறே நிலைத்திருக்கும். அத்துடன் இத்தொகை ஐந்து வருடங்கள் நிறைவில் ஒரே தடவையில் செலுத்தப்பட வேண்டும். இது திட்டக் கடன்களை மீளச் செலுத்தும் கட்டமைப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாகும். திட்டக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான காலம் 20 – 30 வருடங்களாக அமைந்திருக்கும். அத்துடன் அவற்றை ஒரே தடவையில் திரும்பச் செலுத்தும் தேவை இல்லை.
இலங்கை போன்ற ஸ்திரமற்ற பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு ஒன்றுக்கு இந்த ஒரே தடவையில் செலுத்தும் ஏற்பாடு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்துகின்றது. இக்கடன்கள் அமெரிக்க டொலர்களில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பதால் இது நாட்டில் இருந்து அதிகளவான அந்நியச் செலாவணி இழக்கப்படவும் வழிவகுக்கின்றது. இது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் சென்மதி நிலுவைகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எவ்வாறாயினும், இந்த அழுத்தங்கள் நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதன் மூலம் குறைக்கப்படலாம் - இதற்கு ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDIs) அதிகரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், இலங்கை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தவறியுள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் சதவீதம் தொடர்ச்சியாக குறைவடைவதன் மூலம் இது எடுத்துக் காட்டப்படுகின்றது. (பொருளாதாரம் தொடர்பான எமது முந்தைய ஆக்கத்தை பார்க்கவும்). எமக்கு கிடைக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டிலும் இது அவதானிக்கத்தக்க வகையில் குறைவடைந்து வருவதுடன் மொத்த தேசிய உற்பத்தியிலும் இதன் சதவீதம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றது. இதன் விளைவாக, இலங்கையின் அந்நியச் செலாவணியின் அளவு அதிகரிக்காத நிலையில் மீளச் செலுத்த வேண்டிய கடன் தவணை தொகை அதிகரித்து வருகின்றது. இது நாட்டின் வெளியக கடன் சேவை விகிதத்தை - இது ஏற்றுமதி மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணியின் என்ன சதவீதம் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் காண்பிக்கின்றது – அதிகரித்துள்ளது, அத்துடன் இவ்விகிதம் 2020 இல் 33.5% என்ற உயர் பெறுமதியை எட்டியது.
சர்வதேச இறையாண்மை முறிக் கடன்களை மீளச் செலுத்துவதில் மோசமான தாக்கங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு, அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பன இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்புகள் மோசமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எமது ஏற்றுமதிச் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ள நிலையில் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணியின் அளவை உயர்த்துவதற்குரிய ஏனைய வழிகளைத் தேட வேண்டும். இது வழக்கமாக, பழைய சர்வதேச இறையாண்மை முறிக் கடன் ஒன்றை பெறுவதற்கு புதிய இறையாண்மை முறிக் கடன் ஒன்றை பெறுதல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது, இது மீள் நிதியிடல் எனவும் அறியப்படுகின்றது (அல்லது கடனைப் புரட்டுதல்). இதனை நாம் 2014 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டோம். 2015 – 2020 இற்கு இடைப்பட்ட காலத்தில் 11,550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை 10 சர்வதேச இறையாண்மை முறிக் கடன்கள் மூலம் பெற்றுள்ளது. இத்தொகையின் பெரும்பகுதி வெளிநாட்டுக் கடன்களை அடைக்கவே பயன்படுத்தப்பட்டது – தற்போது எம்மால் மேலதிக சர்வதேச இறையாண்மை முறிக் கடன்களைப் பெற முடியாதுள்ளது.
எமது தற்போதைய பாரிய கரிசனை என்ன?
இலங்கை போன்ற ஸ்திரமற்ற பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடொன்றுக்கு சர்வதேச இறையாண்மை முறிக் கடன்களை தொடர்ந்தும் பெறுவது அதாவது மீள் நிதியிடல் என்பது பல காரணிகளில் தங்கியுள்ளது, இக்காரணிகளில் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இலங்கை சர்வதேச இறையாண்மை முறிகளை விற்று சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து கடன்களைப் பெறுவது பெருமளவில் நாட்டின் கடன் நிலை தரவரிசைப்படுத்தல்களில் தங்கியுள்ளது. இந்த தரவரிசைகளை முதலீட்டாளர்கள் நாடு ஒன்றின் கடனை திரும்பச் செலுத்தும் இயலுமையை மதிப்பிட பயன்படுத்துகின்றனர்.
எனவே, நாடுகளின் கடன் நிலை தரவரிசைப்படுத்தல் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திர நிலை, பொருளாதாரத்துடன் இணைந்துள்ள வெளித்துறை தொடர்பான பாதிப்புறும் ஏதுநிலைகள், வரலாற்று ரீதியான மற்றும் எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகைகள் / மேலதிகம், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கான திறன் மற்றும் மேலும் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.
எமது முந்தைய கட்டுரையில் விளக்கியவாறு, கடந்த பல வருடங்களாக இலங்கை தீவிரமான பல கட்டமைப்பு பலவீனங்களைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தின் பாதிப்புறும் ஏதுநிலை தொடர்ச்சியாக மோசமடைதல் மற்றும் கட்டமைப்பு பலவீனங்கள் (குறைந்த வரி வருமானம் மற்றும் தேக்க நிலையில் காணப்படும் ஏற்றுமதி வளர்ச்சி போன்றன) நாட்டின் கடன் நிலை தரவரிசைப் படுத்தலில் தீய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் - 19 பெருந்தொற்றுக் காலத்தில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து எமது பொருளாதாரத்தின் பாதிப்புறும் ஏதுநிலைகள் வெளிப்படையாகத் தெரிந்தன.
இலங்கையின் கடன் நிலை தரப்படுத்தல் தொடர்ச்சியாக குறைவடைந்த வேளை அதன் கட்டமைப்பு பலவீனங்கள் மிகவும் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பித்தன. பிட்ச் (Fitch) தரவரிசைப்படுத்தலில் இலங்கை 2019 செப்டம்பரில் B மட்டத்தில் இருந்து CCC மட்டத்துக்கு கடந்த ஜனவரி 2021 இல் கீழிறக்கப்பட்டது. இது இலங்கை அந்நியச் செலாவணி இறையாண்மை முறி வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதுடன் இணைந்துள்ள சவால்களை எமக்கு எடுத்துக்காட்டியது.
https://twitter.com/newsdotlk/status/1472207979852144641
இதனை மறுப்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றது, இதில் ஊடக அறிக்கைகள் (மேலுள்ளது) தொடக்கம் மென்மையான மற்றும் காரசாரமான டுவீட்டுக்களும் (கீழுள்ளவை) உள்ளடங்குகின்றன.
https://twitter.com/an_cabraal/status/1419681474526302212
அவற்றினால் எந்தப் பயனும் இல்லை. ==இங்குள்ள யதார்த்தம் எமது தரவரிசை கீழிறக்கப்பட்டுள்ளது என்பதேயாகும்.== இது இலங்கை புதிய சர்வதேச இறையாண்மை முறிக் கடன்கள் மூலம் பழைய இறையாண்மை முறிக்கடன்களை மீளச் செலுத்தும் திட்டம் தற்போது சாத்தியமற்றதாக ஆகியுள்ளது. புரட்டல் மூலம் கடனை திரும்பச் செலுத்தும் விருப்பத் தெரிவு கைநழுவி விட்டது, விசேடமாக வருடமொன்றுக்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் சுற்றுலாத்துறை செயலிழப்பினால் இல்லாமல் போனதன் காரணமாக இந்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இது வெளியக நிதிவருகை இடைவெளிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இறக்குமதிகளுக்கு பணம் செலுத்தவும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தவும் போதுமான அந்நியச் செலாவணி உள்வருவதில்லை. கடன் நிலை தரப்படுத்தல் மோசமாக்கப்பட்டதால் மேலதிக இறையாண்மை முறிக் கடன்களை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான வழியாக அமைவது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவைப் பெறுவதும் அதன் மூலம் சாத்தியமான வகையில் எமது கடன் கட்டமைப்பை மீளமைப்பதுமாகும். எனினும் அரசாங்கம் இதற்கு மாற்றமான வழிமுறை ஒன்றையே கடைப்பிடித்தது. இறக்குமதிகளுக்கு தடை விதிப்பதன் மூலம் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை தடுத்தல், ஏற்கனவே காணப்படும் அந்நியச் செலாவணி கையிருப்பை கடன் தவணைகளை செலுத்த பயன்படுத்தல் அத்துடன் அரசாங்கம் IMF இன் உதவியை கோரப் போவதோ அல்லது கடன்களை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தவோ போவதில்லை என தொடர்ச்சியாகக் கூறி வருதல் என்பனவே இம்மாற்று வழியின் அம்சங்களாக அமைந்திருந்தன.
https://twitter.com/NewsWireLK/status/1460541332649230340
இதன் வெளியீடாக அமையப் போவது என்ன? தற்பொழுது, இலங்கையின் அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது. ஜனவரி 2022 இறுதியில் பயன்படுத்தக் கூடிய அந்நியச் செலாவணியின் அளவு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவடைந்தது. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை ஏனைய பல பற்றாக்குறைகளுக்கு வழிவகுத்தது. பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்த வழியும் இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக பல ஏனைய பற்றாக்குறைகள் ஏற்படத் தொடங்கியது.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை தேவையான அளவு எரிபொருளைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இது டீசல் மற்றும் பெற்றோலுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தியதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளையும் அவதானிக்க முடிகின்றது. எரிபொருள் பற்றாக்குறை 7.5 மணி நேரங்கள் நீளமான மின் துண்டிப்புகளுக்கும் வழி வகுத்துள்ளன. அரசாங்கத்திடம் தனது அனல் மின்னுற்பத்தி நிலையங்களை செயற்படச் செய்வதற்கு தேவையான எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றது. வெளிநாட்டுக் கடன்கள் அனைவரினதும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இது நிச்சயமாக ஒரு சிக்கலான விடயமாகவே உள்ளது, இதனை அரசியல்வாதிகளுக்கு நேயம் மிக்க வழியில் மீட்டிப் பார்ப்போம்:
முடிவாக…
இந்த சர்ச்சையின் சுருக்கம் யாதெனில், இலங்கை தன்னால் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு கடனைப் பெற்றுள்ளது. நாடொன்றாக, வருமானத்தை விட அதிகமாக இலங்கை செலவிட்டுள்ளது. இந்த செலவினங்களில் பெரும்பாலானவை கடன் வாங்கியே மேற்கொள்ளப்பட்டன. குறைந்த வரி வருமானம் மற்றும் மோசமான அபிவிருத்தி செயற்பாடு போன்ற பொருளாதாரத்தில் காணப்பட்ட கட்டமைப்பு செயலிழப்புகளை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் இந்த கட்டமைப்பு செயலிழப்புகளுக்கு முழுமையான மற்றும் நீண்ட கால அடிப்படையில் அமைந்த தீர்வுகளைக் காண்பதற்கு பதிலாக எமது அரசாங்கங்கள் தாராளமாக கடன்களைப் பெற்;று அவற்றை தாராளமாக செலவிட்டுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளை தொடர்ச்சியாக புறக்கணித்து தொடர்ந்தும் கடன்களைப் பெற்றுக்கொண்டிருந்தால் என்ன நடக்கும்? உடனடியாகவோ அல்லது தாமதமாகவே நாம் தீவிர பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்போம்==.==
Outstanding International Sovereign Bonds as at 31 January 2022 (1)
Maturity Date | Issue Date | Series Name | ISIN for the Rule 144A Global Bonds | ISIN for the Regulation S Global Bonds | Coupon Rate | Amount (USD Mn) |
---|---|---|---|---|---|---|
25 July 2022 | 25 July 2012 | SRILAN 5.875 07/22 | US85227SAK24 | USY2029SAH77 | 5.8750 | 1,000.00 |
18 April 2023 | 18 April 2018 | SRILAN 5.750 04/23 | US85227SAV88 | USY8137FAK40 | 5.7500 | 1,250.00 |
14 March 2024 | 14 March 2019 | SRILAN 6.850 03/24 | US85227SAY28 | USY8137FAN88 | 6.8500 | 1,000.00 |
28 June 2024 | 28 June 2019 | SRILAN 6.350 06/24 | US85227SBA33 | USY8137FAQ10 | 6.3500 | 500.00 |
3 June 2025 | 3 June 2015 | SRILAN 6.125 06/25 | US85227SAN62 | USY8137FAC24 | 6.1250 | 650.00 |
3 November 2025 | 3 November 2015 | SRILAN 6.850 11/25 | US85227SAQ93 | USY8137FAE89 | 6.8500 | 1,500.00 |
18 July 2026 | 18 July 2016 | SRILAN 6.825 07/26 | US85227SAR76 | USY8137FAF54 | 6.8250 | 1,000.00 |
11 May 2027 | 11 May 2017 | SRILAN 6.200 05/27 | US85227SAT33 | USY8137FAH11 | 6.2000 | 1,500.00 |
18 April 2028 | 18 April 2018 | SRILAN 6.750 04/28 | US85227SAW61 | USY8137FAL23 | 6.7500 | 1,250.00 |
14 March 2029 | 14 March 2019 | SRILAN 7.850 03/29 | US85227SAZ92 | USY8137FAP37 | 7.8500 | 1,400.00 |
28 March 2030 | 28 June 2019 | SRILAN 7.550 06/30 | US85227SBB16 | USY8137FAR92 | 7.5500 | 1,500.00 |
ISBs Outstanding as at 31.01.2022 | 12,550.00 |
இந்தக் கடன் சுமை எமது தலைக்கு மேலே காணப்பட்ட நிலையிலும், அண்மைய அரசாங்கங்கள் வரி வருமானத்தை உயர்த்தவும் அந்நியச் செலாவணி உள் வருகைகளை அதிகரிக்கவும் தவறியுள்ளன. அதற்கு பதிலாக அதிவே நெடுஞ்சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிலேயே அவற்றின் கவனம் நிலைத்திருந்தது. தற்போது நாம் (உண்மையாகவும் உவமையாகவும்) கறுப்பு நாட்களை எதிர்கொள்கின்றோம்.
எமது அரசாங்கத்தினால் தற்போது என்ன செய்ய முடியும்? ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு, நாம் அனுபவிக்கும் கடன் பிரச்சினைகள் குறுகிய கால தீர்வுகள் அல்லது வாய் பேச்சுக்கள் மூலம் தீர்க்கப்பட முடியாதன என்பதை ஏற்க வேண்டும் - எமக்கு கட்டமைப்பு பலவீனங்களை அகற்ற தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமாவுள்ளன.
இந்த கட்டமைப்பு பலவீனங்களை தீர்க்க திட்டங்கள் வகுக்கப்படுவதும் கடன் கட்டமைப்பை மீள மாற்றியமைக்க IMFஅமைப்பின் ஆதரவை கோருவதும் அவசியமாகவுள்ளது. ஏனெனில், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் ஏற்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை நிறுத்தாமல் எம்மால் தொடர்ச்சியாக கடன்களை மீளச் செலுத்தும் நிலையில் இலங்கை இல்லை என்ற யதார்த்தம் ஜீரணிக்க கடினமானது எனினும், அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். தற்போது நாம் மின்சாரமா அல்லது எரிபொருளா அல்லது வெளிநாட்டுக் கடனை அடைப்பதா என்பதை தெரிவு செய்ய வேண்டிய நிலையை அடைந்துள்ளோம். இங்கு எமக்குள்ள வழி வெளிநாட்டுக் கடன் மீள் கொடுப்பனவுகளை பிற்போடுவது மாத்திரமே ஆகும் (இது கடன் மீள் கட்டமைப்பு எனவும் அழைக்கப்படுகின்றது). இதன் மூலமாகவே எமது பொருளாதாரத்தை மெதுவாக சீர் செய்ய முடியும். மிகவும் முக்கியமாக, இலங்கை அரசாங்கம் இதன் மூலம் பாடம் கற்றுக்கொண்டு கடன் பெறுவதில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.