இயற்கை விவசாயக் கொள்கையின் தோற்றுவாய் எது?
மொத்த அரசு செலவினங்கள் (இலங்கை ரூபாவில் பில்லியன்)
மானியச் செலவினங்கள் (இலங்கை ரூபாவில் மில்லியன்)
மொத்த அரச செலவில் மானியத்தின் பங்கு % இல்
அரிசி உற்பத்தி - மெற்றிக் தொன்னில் ‘000
ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு தேவையான உரத்தினளவு கிலோகிராமில்
நோயைக் காட்டிலும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்திய சிகிச்சை
-
செப்டம்பர் மாதமளவில் இலங்கையில் உணவு கிடைக்காது போகலாம் என பிரதமர், கொழும்பு நகர மேயர் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
-
ஹெக்டயருக்கு 4800 கிலோகிராம் அறுவடை செய்த நிலையிலிருந்து, தற்போது குறுங்கால பண்ணைகளை அமைத்து பற்றாக்குறைய சமாளிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
-
50% இற்கும் அதிகமான பயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
-
கடந்த வருடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் ஓரிரவில் மேற்கொள்ளப்பட்ட உரத்தடை இந்நிலைக்கு நம்மை இட்டுச்சென்றுள்ளது.
-
குறுகிய பார்வை கொண்ட கொள்கை முடிவுகளே சிக்கலே ஒழிய இயற்கை விவசாயம் சிக்கலில்லை.
பாரிய அறுவடையை விட உயிர்களே எனக்கு முக்கியம்…” - கோத்தபாய ராஜபக்ச, 22 ஏப்ரல், 2021
ஜனாதிபதியின் இந்த பேரழிவான கொள்கை முடிவு மேற்படி பிரகடனத்துடனேயே ஆரம்பித்தது. துரதிஷ்டவசமாக பெருகிவரும் சனத்தொகைக்கு உணவிட அப் பாரிய அறுவடை முக்கியம் என்பதை அவர் உணரவில்லை.
விவசாயம் என்பது மண்ணும், தனிமங்களும், விதைகளும், விலங்குகளும் மற்றும் மனிதர்களும் நுட்பமாக ஊடாடும் ஒரு நிகழ்வு. அதை ஒரு சில கட்டுரைகளில் விளக்கி விடமுடியாது. அதே போன்று ஒரேயொரு கொள்கை முடிவைக்கொண்டு இரவோடிரவாக அதனை மாற்றிவிடவும் முடியாது.
இயற்கை விவசாயக் கொள்கையின் தோற்றுவாய் எது?
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் தேர்தல் வாக்குறுதிகளில் இரசாயன உரங்களிலிருந்து மாற்று உரங்களை நோக்கிச் செல்லுதல் எனும் வாக்குறுதி முக்கிய பங்கு வகித்திருந்தது.
கொள்கை வாக்குறுதிகள்:
2010: மகிந்த சிந்தனை – சிறந்ததொரு எதிர்காலத்துக்கான தொலைநோக்கு
இயற்கை உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
2015: மைத்திரி ஆட்சி – நிலையானதொரு நாடு
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களின் படிப்படியான நீக்கத்துக்கான காலச்சட்டகமொன்றை உருவாக்குதல்_. [1]_
2019: கோத்தபாய – செழிப்புக்கும் சிறப்புக்குமான தொலைநோக்கு
அடுத்த பத்து வருடங்களுக்கு இலங்கையில் விவசாயத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இயற்கை உர உற்பத்தி முடுக்கிவிடப்படும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதியில் உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது தற்போதைய உரமானிய முறையை முற்றாக மாற்றி, படிப்படியாக முழுமையான காபன் உரங்களுக்கு மாறுவதை முன்மொழிகிறது. இருப்பினும் தேர்தல் பரப்புரைகளின் போது மகிந்த ராஜபக்ச, தமது அரசு தேர்ந்தெடுக்கப்படால் இரசாயன உரங்களை விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
‘படிப்படியாக’ என்பதுதான் இங்கு முக்கியமாக கணக்கிலெடுக்கப்பட வேண்டிய இடம், ஆனால் நடைமுறையில் அது கணக்கிலெடுக்கப்படாததை நாம் நமது கண்கூடு பார்த்தோம்.
மானியத்தின் வரலாறு
விவசாயத்தில் அதுவும் முக்கியமாக நெல் உற்பத்தியில் இலங்கை அரசின் தலையீடு எப்போதுமே இருந்துள்ளது. விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க முன்னெடுக்கப்பட்ட அவ்வாறான ஒரு தலையீடே மானியங்கள் ஆகும். கோத்தபாய ராஜபக்சவின் அரசு இரசாயன உரத்தடையின் மூலம் முற்றிலும் மாறான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தது.
ஒரு தசாப்தகாலக் கதையின் மிக சமீபத்திய படிநிலைகளே, இந்தத் தடையும் ஒரு வருடத்தின் பின்னரான அதன் மீளப்பெறலும்:
- 1948: உத்தரவாத விலைத்திட்டம் - அரசு கமநல சேவைகள் திணைக்களத்தினூடு நெல்லைக் கொள்வனவு செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு அவர்களது பயிர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல்.
- 1951: உரமானியத் திட்டம் - பணம் செலுத்தி அல்லது கடனாக நெற் பயிர்ச் செய்கைக்காக கொள்வனவு செய்யப்படும் உரங்களுக்கு 50% மானியம் வழங்குதல்.
- 1962: நெல்லுக்கான உரமானியம் தொடங்கப்பட்டது - பாரம்பரிய நெல் வகைகளிலிருந்து அதிக விளைச்சல் தரும் கலப்பின நெல் வகைகளை நோக்கி விவசாயிகளை திருப்பவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாயிருந்தது. இரசாயன உரப்பயன்பாடு அதிகரிப்பிலும் இத்திட்டத்துக்கு முக்கிய பங்குள்ளது. இம்மானியம் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உரத்தின் பெறுமதியில் 50% ஆன செலவை ஏற்றுக்கொண்டது. [2]
- 1975: மானியம் அனைத்து பயிர்களுக்குமென விரிவாக்கப்பட்டது - இம்மானியம் யூரியா, அமோனியம் சல்பேற், பொஸ்பரஸ், சுப்பர் பொஸ்பேற் மற்றும் பொட்டாஸ் மியூரேட் ஆகிய நைதரசன் உரங்களுக்கு வழங்கப்படுகிறது. சிறிய, பெரிய, இடைப்பட்ட என எந்த மட்ட தொழிற்சாலைகளிலும் உரத்தை உற்பத்தி செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. - மத்திய வங்கியின் கூற்றுப்படி
- 1979: மானியப் பெறுமதிகள் மாற்றியமைப்பு - யூரியாவின் 85% செலவையும் ஏனைய உரங்களின் 75% செலவையும் ஏற்குமாறு மானியப் பெறுமதிகள் மாற்றப்பட்டன. அமோனியம் சல்பேற் மற்றும் பொஸ்பேற்றுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது.
- 1990: மானியம் முற்றாக நிறுத்தப்பட்டது - விவசாய ஆய்வாளர்கள் பாதீட்டில் மானியம் அரசுக்கு மிகப்பாரிய சுமையாக இருப்பதாக கூறியதை காரணம் காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- 1994: மானியம் மீள அறிமுகம் - சில குறிப்பிட்ட உரவகைகளுக்கு மாத்திரம்
- 1997: யூரியாவுக்கு மாத்திரம் மானியம் வழங்கப்பட ஆரது
- 2005: பரந்துபட்ட மானியம் மீள அறிமுகம் - நெல்லுக்கான முதன்மையான உரவகைகளின் கலவைக்கு அன்றி அவற்றின் தூய வடிவுக்கு மானியம் மட்டுப்படுத்தப்பட்டது. தேயிலை, இறப்பர், மற்றும் தென்னை பயிரிடும் குறு விவசாயிகளுக்கும் (5 ஏக்கருக்கு குறைவான நிலத்தை கொண்டுள்ளவர்கள்) மானியம் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது.
- 2016: நேரடி பண மானியம் வழங்கல் முறை - முன்பு அரச நிறுவனங்களால் விவசாயிகளின் விருப்புக்கேற்ப மானிய விலையில் உரங்கள் கையளிக்கப்பட்டன. இம்முறை நேரடியாக மானியத்தை பணமாக வழங்கும் முறையாக மாற்றப்பட்டு விவசாயிகளின் கோபத்தை தூண்டச் செய்தது. பெரு முதலாளிகள் உரங்களை களஞ்சியப்படுத்தி வருவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தைக்கொண்டு அவர்களால் உரத்தை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
வெவ்வேறு அரசுகள் மானியத்தை எவ்வெவ்வாறு நிருவகித்தன என இதுவரை பார்த்தோம். இனி இலங்கையின் குடிமக்கள் கட்டும் வரியில் எத்தனை பங்கு மானியத்திற்கு செலவாகிறது என வரைபின் உதவியுடன் பார்ப்போம்.
மானியச் செலவினங்கள்
மொத்த அரசு செலவினங்கள் (இலங்கை ரூபாவில் பில்லியன்)
மானியச் செலவினங்கள் (இலங்கை ரூபாவில் மில்லியன்)
மொத்த அரச செலவில் மானியத்தின் பங்கு % இல்
மானியத்திற்கான தேவை
ஏற்றுமதி செய்யப்படும் பயிர்கள் மற்றும் ஏனைய துணைப்பயிர்களுக்கும் மானியம் வழங்கப்பட்ட போதும் அதன் முதன்மையான நோக்கம் நெற்பயிர்ச்செய்கையை வலுவூட்டுவதே. கீழுள்ள புள்ளி விபரங்கள் அந்நோக்கத்தில் குறிப்பிடத்தக்களவு வெற்றி கிடைத்துள்ளதை காட்டுகின்றன.
நாட்டின் பெருகிவரும் சனத்தொகையுடன் நெல் உற்பத்தியினை ஒப்பிடுவோம். முழுமையான தற்சார்பு அல்லது பகுதியளவு தற்சார்புதான் நமது இலக்கு என்றால் பெருகிவரும் சனத்தொகை காரணமாக அடிப்படை உணவு பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்பது வெளிப்படை உண்மை.
அரிசி உற்பத்தி - மெற்றிக் தொன்னில் ‘000
சனத்தொகை
உரப்பாவனையை அதிகரிப்பதோ அல்லது தொடர்ந்து பாவிப்பதோ மாத்திரமே, தேவையான அளவுக்கு விவசாய உற்பத்தியை அடைய மிக விரைவான வழி. மேற்படி இரு தெரிவுகளுமே விவசாய செயன்முறையை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு தேவையான உரத்தினளவு கிலோகிராமில்
இலங்கை மண் விஞ்ஞான சங்கத்தின் தலைவர் பேராசிரியர் விதாரண சேதன உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பின்வருமாறு எழுதினார்:
தற்போதுள்ள விவசாய உற்பத்தி முறைமைகள் 100% சேதனை பசளை அறிமுகப்படுத்தப்பட்டால் எதிர்பார்க்கப்படும் உயர் உற்பத்தி மட்டத்தினை அடையமாட்டா என்பது விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட மண்ணையும் காலநிலைகளையும் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் இதுதான் உண்மை நிலை. எனவே இந்த தொலைநோக்கற்ற முடிவினை நாடு முழுவதுக்கும் நடைமுறைப்படுத்துவது உணவுப் பற்றாக்குறைக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்குமே வழிவகுக்கும்.
தொலைநோக்கற்ற முடிவு தொடர்பான அவரது சொற்கள் ஒவ்வொன்றும் குறுகிய காலத்திலும் சரி நீண்ட காலத்திலும் சரி தீர்க்கதரிசனமானவை என்பதை எம்மால் உணர முடிகிறது.
தடையும் வீழ்ச்சியும்
இரசாயன உரப்பாவனையை தடை செய்யும் கொள்கை முடிவு இரவோடிரவாக திடீரென்று நடைமுறைப்படுத்தப்பட்டது. உரக்கொள்கையில் ஏற்பட்ட இம்மாற்றத்தின் உடனடி விளைவுகள் பலவாறு பதிவு செய்யப்பட்டன:
- மானியத்தை மீளஅறிமுகம் செய்து தொடர்ச்சியாக வழங்கக் கோரி தடையின் பின் உடனடியாக விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்.
- பல்பொருள் அங்காடிகள் மற்றும் வார சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் உற்பத்திகளின் அளவு குறைந்ததுடன் கிழமைக்கு கிழமை மாறுபட்டுக் கொண்டும் இருந்தது. விற்பனையாளர்கள் மற்றும் வழங்குநர்கள் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட மரக்கறிகளின் பற்றாக்குறைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒட்டியிருந்த சுவரொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது ஆய்வாளர்கள் கூறினர்.
- மண்ணில் போதுமான அளவு நைத்திரேற் இல்லாதபடியால் கடந்த போகத்தில் மிகக்கடினப்பட்டு வளர்க்கப்பட்ட நெற்பயிர்கள் கருகுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
- கிடைக்கும் அளவு குறைந்தபடியால் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. நகரில் ஆரோக்கியமான உணவை உண்பதற்கான செலவு ஆண்டு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரசாயன உரங்களை தடைசெய்ததோடு மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் சேதன உரங்களை ஊக்குவிக்கவும் செய்தது. காலங்கடந்த சிந்தனையாக சேதன உரங்களை இறக்குமதி செய்யவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. எது எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்படுகின்ற சேதன உரங்கள் உள்ளூர் மண் மற்றும் நீர் மூலங்களை மாசுபடுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
இம்மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே உள்ளூரில் சேதன உரங்களின் உற்பத்தியை பெருக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டன. [3]
இலங்கை விவசாயப் பொருளாதார ஒன்றியம் (SAEA) ஜனாதிபதியின் ‘செழிப்புக்கும் சிறப்புக்குமான தொலைநோக்கு’ எனும் திட்டத்தோடு இத்தடையானது பல்வேறு இடங்களில் மாறுபடுவதாகக் கூறியிருந்தது. விவசாயிகள் மீள்வதற்கும் வளைந்து கொடுப்பதற்கும் தேவையான திட்டங்கள் எதுவுமின்றி சடுதியாக மேற்கொள்ளப்பட்ட இம்மாற்றம் நாட்டினை உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
விவசாய திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள உள்ளூர் சேதன உர உற்பத்தியாளர்களின் உற்பத்தியின் அளவு நெல் உற்பத்திக்கு மாத்திரம் தேவையான உரத்தின் அளவிற்கு அருகில் கூட வரவில்லை என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மண் வளம் மற்றும் தாவர ஊட்ட பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி எழுதியிருந்தார்.
பேராசிரியர் தர்மகீர்த்தியின் கணக்குப்படி, நாட்டின் மொத்த சேதன உர உற்பத்தி 0.22 மில்லியன் தொன்கள் மாத்திரமே. நெல் உற்பத்தியில் தன்னிறைவடையத் தேவையான உரத்தின் அளவில் நான்கில் ஒரு பங்குக்கு கூட இந்த உற்பத்தியில்லை. நெல் மற்றும் தேயிலை இரண்டுக்கும் தேவையான உரத்தின் எட்டில் ஒரு பங்குக்கு கூட இந்த உற்பத்தியில்லை.
எட்டு போகங்களுக்கு நீடித்த பரிசோதனைகளின் முடிவில், சேதன உரங்களினை இடுவதன் மூலம் மண்ணில் சேதன பொருட்களின் அளவில் எதுவித அதிகரிப்பும் ஏற்படவில்லை எனத்தெரிந்தது. பேராசிரியர் தர்மகீர்த்தி எழுதியது மேற்படி முடிவுகளுடன் ஒத்துப்போகிறது. தரமற்ற சேதன உரங்களின் பயன்பாடோ, அதிகளவான சேதன உரங்களின் பயன்பாடோ விளைச்சலில் எதுவித அதிகரிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இவ் அவசரத்தடையின் காரணமாக செப்டம்பர் தொடங்கி மே மாதம் வரையான பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிரிழப்பு அண்ணளவாக 40% அளவுக்கு இருக்குமென, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விவசாயப் பொருளியலாளர் ஜீவிக வீரஹெவ குறிப்பிட்டிருந்தார். இதே சாரப்பட்ட கருத்து தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தொழில்துறை அதிகாரிகளாலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசர முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பவர்களுள் பேராதனைப் பல்கலைக்கழக பயிர் விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே முக்கியமானவர்.
சடுதியான தடையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் உள்ளூர் உர உற்பத்தியாளர்களின் ஆயத்தமில்லாத்தன்மை ஆகியன குறித்து தனது பல கட்டுரைகளிலும் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்நேரத்தில் பேராசிரியர் மாரம்பே விவசாய அமைச்சின் பல்வேறு ஆலோசனை வழங்கும் குழுக்களில் உறுப்பினராக இருந்திருந்தார். அவரது விமர்சனங்களுக்கு பிறகு அவர் அனைத்து குழுக்களிலிருந்தும் நீக்கப்பட்டார்.
ராஜபக்ச அரசை பல்வேறுபட்ட நிபுணர்களும் மற்றும் விவசாயிகளும் இச்சடுதியான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இறைஞ்சிக் கேட்ட போதும், அவர்களது கூக்குரல்கள் ‘தேசியவாத’ அறிவாளிகளின் இரைச்சலுக்கு மத்தியில் அமிழ்ந்து விட்டது. இந்தக் குழுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) முன்னாள் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய, அப்போதைய இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் உள்ளடங்குவர்.
ஒக்டோபர் மாதமளவில் இரசாயன உரத்தடைக்கு எதிரான விவசாயிகள் போராட்டங்கள் பல்கிப்பெருகத் தொடங்கியது. தொடர் அழுத்தங்கள் காரணமாக அரசு படிப்படியாக வழிக்கு வந்தது.
நவம்பர் மாதம் தனது முடிவிலிருந்து தானே விலகி எதிர் நிலைப்பாட்டினை எடுத்து, தனியாரை இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது.
அப்போதைய விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மானியங்கள் மீள அறிமுகப்படுத்தப்படமாட்டா என குறிப்பிட்டிருந்தார். நெல் விவசாயிகளுக்கு மாத்திரம் சேதன உரங்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
#GotaGoHome போராட்டங்கள் உச்சம் பெற்றிருந்த ஏப்ரல் 2022 காலப்பகுதியில் உரத்தடையானது தவறானதொரு முடிவென ஏற்றுக்கொண்டிருந்தார்.
நோயைக் காட்டிலும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்திய சிகிச்சை
குறைவான உணவுப்பொருட்கள் உற்பத்தி காரணமாக இந்நிலையானது இன்னும் மோசமடையவுள்ளது, அதற்காக பல்வேறுபட்ட பதில் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
சுருங்கச் சொன்னால் மக்கள் உண்பதற்கு ஏதாவது இருப்பதை உறுதி செய்ய அரசு பெருமளவு பணத்தை செலவு செய்துள்ளது.
- பயிர்ச்செய்கையில் அவர்கள் பட்ட துயரங்களுக்காக வரலாறு காணாதவாறு ஒரு கிலோ நெல் 95 ரூபா வரை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. மேலும் பயிரிழப்புகளுக்கான இழப்பீட்டிற்காக 40 மில்லியன் ரூபாவினை செலவிட உள்ளதாக அரசு அறிவித்திருந்தது.
- இறக்குமதி செய்ய பணம் தேவைப்பட்டதால், தனியார் உர நிறுவனங்கள் மானியத்திற்கு வழங்குவதற்காக அரசுக்கு விநியோகித்த உரங்களுக்கான நிலுவைத் தொகை 26 பில்லியன் ரூபாவினை தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தன.
- கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு உதவவென நவம்பர் மாதம் 2021 இல் இந்தியாவிலிருந்து நனோ நைதரசன் உரங்கள் கொண்டுவரப்பட்டன.
நமது சூழலுக்கும் பயிர்களுக்கும் பொருந்துமா என எதுவித தரவுகளுமின்றியே 7900 மில்லியன் ரூபா அல்லது 39 மில்லியன் அமெரிக்க டொலர் நனோ உரத்தினை இறக்குமதி செய்ய செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மண் விஞ்ஞான சங்கம் குறிப்பிட்டுள்ளது.
- பெப்ரவரி 2022 இல், அந்நியச் செலவாணி நெருக்கடியை சமாளிக்க அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது. உரத்தடையின் உடனடி விளைவாக நாட்டின் அந்நியச் செலவாணி தேய்ந்து கொண்டிருந்த அதே வேளை அரிசி இறக்குமதியை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை (NPQS), கிங்டாவ் சீவின் உயிர்-தொழிநுட்ப உர நிறுவனத்தின் சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியா இருப்பதாக உறுதிப்படுத்திய பின்னரும், அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கை 6.7 மில்லியன் டொலரை அந்நிறுவனத்திற்கு செலுத்த முடிவு செய்திருந்தது.
- இந்தியாவிடமிருந்து 100,000 மெற்றிக்தொன் அரிசியும் மியான்மாரிடமிருந்து 300,000 மெற்றிக் தொன் அரிசியும் ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட உள்ளது. கப்பல் கட்டணமும் சேர்த்து ஒவ்வொரு தொன் அரிசியும் 126,750 ரூபா/ 445 அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்தது. மொத்தமாக இவற்றுக்கு 50 பில்லியன் ரூபா அல்லது 178 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும்.
- கடந்த போகத்தில் பயிரிழப்புகளுக்கு ஆளான விவசாயிகளுக்கு ஹெக்டயருக்கு 50,000 ரூபா வீதம் வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் முதலாந்திகதி அரசு அறிவித்தது.
ஆண்டுதோறும் பெரும்பயிர்கள், சிறு ஏற்றுமதி பயிர்கள் மற்றும் துணை உணவுப் பயிர்கள் என அனைத்தையும் சேர்த்து சராசரியாக 1,697,480 ஹெக்டயர்கள் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. [4]
இவற்றுள் பாதியளவு ‘பாதிக்கப்பட்ட பயிர்கள்’ எனக்கொள்ளப்பட்டால் கூட அரசு அண்ணளவாக 42 பில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டிவரும்.
இவ்விழப்பீடுகள் அண்ணளவாக 187 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
செலவு செய்ய பணமில்லாத நிலையில் உள்ள நாடொன்றுக்கு அது மிகமிகப் பெரிய தொகையாகும்.
புரிதல்கள்
சொல்லப்போனால் இயற்கை விவசாயம் ஒன்றும் சிக்கலில்லை, குறுகிய பார்வை கொண்ட கொள்கை முடிவுகளே சிக்கல். அதுவும் மிகவும் சிக்கலான விவசாயம் போன்ற விடயங்களில் மேலும் கவனந் தேவை.
நாங்கள் சந்தித்த இயற்கை விவசாயிகள் முக்கியமாக குறிப்பிட்டது, இயற்கை உரங்களுக்கு மாறுதல் மாத்திரம் பலனைத்தராது; நமது விவசாய முறையில் ஒரு பரந்த, ஆழமான மாற்றம் அவசியம்.
“நாங்கள் பயிரிடும் வயல்களில், இரசாயன உரங்கள் பயன்படுத்தி எடுத்த அதே விளைச்சலை ஏன் அதை விட அதிகமாகக் கூட இயற்கை உரங்களை பயன்படுத்தி எம்மால் எடுக்க முடியும். அதற்கு தனியே சேதன உரத்துக்கு மாறுவது மட்டுமன்றி நேரம், அறிவு, மற்றும் முழுமையான முறை மாற்றமும் தேவைப்படும்.” - சதுரிக்கா செவ்வந்தி, இணை நிறுவனர், கிரீன்ஃபெம் சூழலியல் விவசாயப் பயிற்சி மையம்
இதனை, விவசாயிகளுக்கு விதை வகைகள் தொடர்பில் கற்பித்தல், மலிவான தொழிநுட்பங்களினை கிடைக்கச் செய்தல், உற்பத்திகளை விற்பதற்கு சந்தைகளை உருவாக்கல் ஆகியன மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்பதோடு விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றி நாட்டின் நீண்டகால உணவுப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்தலாம்.
இயலுமையை கட்டியெழுப்புதல் மற்றும் ஆதரவுகளை வழங்குதல் போன்றனவற்றில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை. இருந்தாலும், விவசாயிகள் முன்பு உற்பத்தி செய்தது போலத் தொடர்ந்து உற்பத்தி செய்ய மாத்திரம் எதிர்பார்க்கப்படுகிறது.
எமது வலையொலியின் புதிய பதிப்பில் உரையாடும் போது பேராசிரியர் புத்தி மாரம்பே, நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் இயற்கை விவசாயத்தை நம்பி இருக்கச் செய்வது புத்திசாலித்தனமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாடு முழுவதற்கும் தடையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அரசு நிபுணர்களின் கருத்தினை கேட்க மறுத்ததையும் வெளிப்படுத்திய ஒரு கட்டுரையில் பேராசிரியர் மாரம்பே எழுதியது பின்வருமாறு:
“எமது கொள்கை வகுப்பாளர்கள் விவசாயப் பொருளாதாரம், விவசாய சமூகம், கல்வியியலாளர்கள், விவசாய திணைக்களத்தின் விஞ்ஞானிகள், ஏனைய பயிர்களின் ஆராய்ச்சி நிலையங்கள், நாட்டில் பல தசாப்தங்களாக உணவு உற்பத்தித்துறையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றங்கள் என அனைத்தையுமே நட்டாற்றில் கைவிட்டுவிட்டார்கள். இதன் விலையோ அதிகம்; இழப்புகளோ மீளப்பெறமுடியாதவை.””
ஏப்ரல் ஒன்றில் தொடங்கிய 1600 கிலோமீற்றர்கள் நீண்ட எமது நாடு தழுவிய பயணத்தில் ஐந்து முக்கிய விவசாய மாவட்டங்களான அம்பாந்தோட்டை, அம்பாறை, நுவரெலியா, பொலநறுவை, மற்றும் யாழ்ப்பாணத்தில், இத்திடீர் முடிவு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எங்ஙனம் பாதித்தது என்பதை பாதிக்கப்பட்ட அவர்களிடமே கேட்டறிந்தோம்.
இத்தொடரின் அடுத்து வரும் பாகங்களில், இவ்விவசாயிகளின் குரலைப் பதிவு செய்து தடையால் அவர்கள் அடைந்த பாதிப்புகளை புடம் போட்டு காட்டவுள்ளோம்.
அடிக்குறிப்புகள்
https://www.youtube.com/watch?v=xFqecEtdGZ0
[1] மூலந்தெரியாத நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் இலங்கையில் கண்டறியப்பட்ட முதல் பகுதிகளுள் பொலநறுவையிலுள்ள சிறிசேனவின் சொந்தத்தொகுதியும் ஒன்று. இன்றும் கூட அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது.
கடந்த ராஜபக்ச அரசில் டிசம்பர் 2014 ஆம் ஆண்டிலேயே முக்கிய ஐந்து நெல் பயிரிடும் மாவட்டங்களில் கிளைபோசேற் பயன்பாட்டை நிறுத்திய போதும், மே 2015 இல் விவசாய இராசயனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு முற்றாக ஒழிக்கப்படுவதாக சிறிசேன அறிவித்தார்.
2018 மே மாதம் தடையானது தேயிலை மற்றும் இறப்பர் துறைகளுக்கு மீளப்பெறப்பட்ட போது, தோட்ட நிர்வாகிகளும் தோட்டக்காரர்களும் ஆண்டு விளைச்சலில் அண்ணளவாக 35 பில்லியன் ரூபா பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டிருந்தனர். இவ்வனுபவம் இவ் அவசர முடிவு தொடர்பில் முன்பே அறியத்தந்திருத்தல் வேண்டும் போன்ற பல படிப்பினைகளை அரசுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. பயிரிழப்புகளுக்கு அப்பால் அண்மைய நாடுகளில் இருந்து நாட்டுக்குள் கிளைபோசேற் கடத்தல் பெருகவும், வரைமுறைப்படுத்தப்படாத தீங்கு விளைவிக்கக்கூடிய மாற்றீடுகளின் ஊடுருவலுக்கும் வழிவகுத்தது.
[2] இத்திட்டத்தையும் மானியத்தையும் சேர்த்தால் நாட்டில் நுகரப்படும் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் இரண்டு ஊக்கிகள் காணப்படுகின்றன. மேற்படி திட்டங்களெல்லாம் உணவுத் தற்சார்பு எனும் நீண்ட கால இலக்கு நோக்கி உருவாக்கப்பட்டவை. மேற்படி திட்டங்கள்தாம் 1946 க்கும் 1960 க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டரை மடங்குக்கு இலங்கையில் நெல் உற்பத்தி பெருகியமைக்கும், தனிநபர் விவசாயத் துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் காரணமென குறிப்பிடப்படுகின்றன.
[3] தடை போடப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 2021 இலேயே, விவசாய அமைச்சு எப்பாவல பொஸ்பேற் இருப்பிலிருந்து உரந்தயாரிக்கும் லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்து உற்பத்தியை விரைவுபடுத்துவது பற்றி கலந்துரையாடியது.
[4] இலங்கை மத்திய வங்கி, ‘பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள்’ அறிக்கை, 2020
அதிக விளைச்சல் தரும் கலப்பின அரிசி ரகங்களின் அறிமுகத்துக்கும் உலகளவிலான உரப்பயன்பாடு அதிகரிப்புக்கும் முன், இலங்கை பலவகையான பாரம்பரிய அரிசிகளை பயிரிட்டுவந்தது. இவ்வகையான 4541 அரிசி வகைகள் தாவர மரபணு வள மையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் இருபத்து மூன்று பாரம்பரிய அரிசி வகைகளின் (Oryza sativa L.) இயல்வேதியியல் மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் எனும் ஆய்விலிருந்து பெறப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளின் படம்
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (HARTI) முன்னெடுத்த ஆய்வொன்று, இப்பாரம்பரிய அரிசி வகைகளின் பயிர்ச்செய்கைக்கு வெளி உள்ளீடுகளின் தேவை குறைவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது. பாரம்பரிய தொழிநுட்பங்களில் ‘இயற்கை சக்திகளின் முழுமையான ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.’
[3] பூவரசு போன்ற மரங்களின் இலைகள் விதைப்புக்கு முன் இடப்பட்டு நெல் வயல்களின் வளம் மேம்படுத்தப்படும். அறுவடைக்கு பிறகு அடுத்த போகத்துக்கான உழவு தொடங்கும் வரை பசுக்களும் எருமைகளும் கட்டியோ சுதந்திரமாகவோ மேய்ச்சலுக்கு விடப்படும். அவை பெருமளவான களைகள் வளர்வதை தடுப்பதுடன் சாணம் மற்றும் சிறுநீர் வடிவில் மண்ணுக்கு உரத்தையும் இலவசமாக அளிக்கும். இவ்விரண்டு கழிவுகளும் நெல் தண்டுகளையும் வைக்கோல்களையும் விரைவில் உக்கவும் வைக்கும். இதனால் அடுத்த போகத்தில் நெற்பயிர்களுக்கு தேவையான அனைத்து ஊட்டங்களும் மண்ணுக்கு கிடைத்துவிடும். - மதுகம செனவிருவன், ‘உள்நாட்டு நெல்வகைகளும் பாரம்பரிய அறிவும்’
பாரம்பரிய விவசாயத்தில் விவசாயிகள் பாரம்பரிய அரிசி வகைகளை பயிரிட்டனர், இயற்கை உரங்களை (வைக்கோல், பசுந்தாள் உரம், மாட்டு சாணம், கோழி உரம், திரவ உரம்) பயன்படுத்தினர், களைகளை கையாலும் பொறியாலும் நீக்கினர், நீர் முகாமைத்துவம் மற்றும் களைக் கட்டுப்பாட்டை சடங்குகள் மூலம் நிறைவேற்றினர். - முனைவர். தர்மசேன, ‘இலங்கையில் பாரம்பரிய அரிசி விவசாயம்’
இன்றுவரை இவ்வகைகளை எவ்வாறு பயிரிடுவதென விவசாயிகளுக்கு அமைப்புகள் பல பயிற்சி வழங்கி வருகின்றன. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆய்வு அறிக்கை 2% க்கும் குறைவான நிலத்திலேயே பாரம்பரிய வகைகள் பயிரிடப்படுவதாக குறிப்பிடுகின்றது.
தரவுகள்
ஆண்டு | மொத்த அரசு செலவினங்கள் (இலங்கை ரூபாவில் பில்லியன்) | மானியச் செலவினங்கள் (இலங்கை ரூபாவில் மில்லியன்) | மொத்த அரசு செலவில் மானியத்தின் பங்கு % இல் |
---|---|---|---|
2010 | 1293613 | 26028 | 2.012039 |
2011 | 1414122 | 29802 | 2.107456 |
2012 | 1574995 | 36456 | 2.314674 |
2013 | 1686384 | 19706 | 1.168536 |
2014 | 1809508 | 31802 | 1.757494 |
2015 | 2304425 | 49571 | 2.151123 |
2016 | 2351795 | 27771 | 1.180843 |
2017 | 2585079 | 30361 | 1.174471 |
2018 | 2714683 | 26948 | 0.992676 |
2019 | 2932390 | 34966 | 1.192406 |
2020 | 3040916 | 36687 | 1.206446 |
அறுவடையான ஆண்டு | அரிசி உற்பத்தி - மெற்றிக்தொன்னில் ‘000 | சனத்தொகை |
---|---|---|
1952 | 604 | 8,256,552 |
1953 | 458 | 8,417,113 |
1954 | 650 | 8,591,018 |
1955 | 746 | 8,778,438 |
1956 | 575 | 8,978,765 |
1957 | 654 | 9,190,650 |
1958 | 765 | 9,412,139 |
1959 | 761 | 9,640,825 |
1960 | 899 | 9,874,476 |
1961 | 901 | 10,111,637 |
1962 | 1,003 | 10,352,179 |
1963 | 1,028 | 10,597,511 |
1964 | 1,056 | 10,849,975 |
1965 | 758 | 11,110,820 |
1966 | 957 | 11,380,670 |
1967 | 1,149 | 11,657,650 |
1968 | 1,348 | 11,937,600 |
1969 | 1,377 | 12,214,956 |
1970 | 1,619 | 12,485,740 |
1971 | 1,398 | 12,747,821 |
1972 | 1,315 | 13,002,231 |
1973 | 1,315 | 13,252,036 |
1974 | 1,605 | 13,501,935 |
1975 | 1,156 | 13,755,146 |
1976 | 1,255 | 14,012,899 |
1977 | 1,680 | 14,273,495 |
1978 | 1,894 | 14,533,690 |
1979 | 1,919 | 14,788,862 |
1980 | 2,134 | 15,035,834 |
1981 | 2,229 | 15,272,831 |
1982 | 2,156 | 15,501,207 |
1983 | 2,484 | 15,724,651 |
1984 | 2,413 | 15,948,487 |
1985 | 2,661 | 16,176,280 |
1986 | 2,588 | 16,408,859 |
1987 | 2,127 | 16,643,952 |
1988 | 2,477 | 16,878,189 |
1989 | 2,063 | 17,106,753 |
1990 | 2,538 | 17,325,773 |
1991 | 2,389 | 17,535,729 |
1992 | 2,340 | 17,736,821 |
1993 | 2,570 | 17,924,823 |
1994 | 2,683 | 18,094,477 |
1995 | 2,810 | 18,242,912 |
1996 | 2,061 | 18,367,288 |
1997 | 2,239 | 18,470,900 |
1998 | 2,692 | 18,564,599 |
1999 | 2,857 | 18,663,284 |
2000 | 2,860 | 18,777,601 |
2001 | 2,695 | 18,911,730 |
2002 | 2,860 | 19,062,482 |
2003 | 3,067 | 19,224,037 |
2004 | 2,628 | 19,387,153 |
2005 | 3,246 | 19,544,988 |
2006 | 3,341 | 19,695,972 |
2007 | 3,131 | 19,842,044 |
2008 | 3,875 | 19,983,984 |
2009 | 3,652 | 20,123,508 |
2010 | 4,301 | 20,261,737 |
2011 | 3,894 | 20,398,497 |
2012 | 3,847 | 20,532,600 |
2013 | 4,620 | 20,663,046 |
2014 | 3,381 | 20,788,511 |
2015 | 4,819 | 20,908,027 |
2016 | 4,420 | 21,021,171 |
2017 | 2,383 | 21,128,032 |
2018 | 3,930 | 21,228,763 |
2019 | 4,592 | 21,323,733 |
2020 | 4,591 | 21,413,249 |
2021 | 5,121 | 21,497,310 |
ஆண்டு | ஒரு ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு தேவையான உரத்தினளவு கிலோகிராமில் |
---|---|
1961 | 140.4874 |
1962 | 165.4541 |
1963 | 114.6313 |
1964 | 106.9785 |
1965 | 121.5851 |
1966 | 131.8598 |
1967 | 128.4318 |
1968 | 163.2619 |
1969 | 110.6965 |
1970 | 129.7531 |
1971 | 137.6225 |
1972 | 121.5328 |
1973 | 134.1787 |
1974 | 122.1823 |
1975 | 85.17647 |
1976 | 105.8889 |
1977 | 117.4737 |
1978 | 135.886 |
1979 | 162.1267 |
1980 | 183.6267 |
1981 | 163.7778 |
1982 | 181.6021 |
1983 | 192.9988 |
1984 | 218.9186 |
1985 | 222.234 |
1986 | 217.7723 |
1987 | 227.6067 |
1988 | 230.6236 |
1989 | 233.9079 |
1990 | 190.1589 |
1991 | 196.2281 |
1992 | 202.9359 |
1993 | 239.208 |
1994 | 246.3228 |
1995 | 232.5542 |
1996 | 238.0722 |
1997 | 235.0372 |
1998 | 262.0067 |
1999 | 286.2773 |
2000 | 269.9071 |
2001 | 266.4498 |
2002 | 304.563 |
2003 | 259.1842 |
2004 | 287.01 |
2005 | 255.2918 |
2006 | 291.3152 |
2007 | 288.525 |
2008 | 311.7117 |
2009 | 281.3764 |
2010 | 229.0475 |
2011 | 257.3146 |
2012 | 214.0895 |
2013 | 173.9857 |
2014 | 261.3146 |
2015 | 307.1471 |
2016 | 126.2628 |
2017 | 117.3936 |
2018 | 138.2963 |