கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்
இது இரண்டு பாகங்களைக் கொண்ட கட்டுரையின் முதலாம் பகுதி. முதல் பாகம் மே 09, 2022 அன்று கோட்டா கோ கம மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட வழிவகுத்த விடயங்களை ஆராயும் அதே வேளை இரண்டாம் பாகம் அத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராயவுள்ளது.
நாம் நேரங்களை துல்லியமாக குறிப்பிடாதவிடத்து, இங்கு குறிப்பிடப்படும் நேரங்கள் பருமட்டானவை (5 நிமிடங்கள் முந்தியதாக அல்லது பிந்தியதாக அமைகின்றன).
சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் இன்றைய நிகழ்வுகளின் நேரடி அடைவான எமது ஆவணத் தொகுதி திட்டத்தில் தோன்றவுள்ளவர்கள். அது தயாரானவுடன், இந்த வரி வடிவம் மற்றும் சிவப்பு எழுத்தில் உள்ள பெயர்கள் என்பன ஒவ்வொரு ஆவணத்திலும் இணைப்புகளுடன் புதுப்பிக்கப்படும்.
பெயர்கள் தொடர்பில்: ஒவ்வொருவரதும் அந்தரங்க உரிமை நாம் நம்பிக்கை கொள்ளும் விடயமாக அமைகின்றது. மேலும், எவராவது பகிரங்கமாக இன்னொருவரை தாக்கும் வேளை, அல்லது அரச அலுவலராக இருந்து கொண்டு இலங்கை பிரஜைகளின் உரிமையை (அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை போன்ற) மீறும் சமயம் அந்நபர்களின் அந்தரத்துக்கான உரிமை அவ்விடத்தில் முடிவடைகின்றது எனவும் நாம் நம்புகின்றோம். முட்டாள்தனமான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் முட்டாள்தனமான பரிசுகளையே எதிர்பார்க்க முடியும்.
ஆரம்பிப்போம். ஒவ்வொரு பிரிவையும் நோக்க அப்பிரிவின் கீழுள்ள அம்புக்குறியை சொடுக்கவும்.
காலை 10:00 மணிக்கு முன்னர்: அலரி மாளிகையின் பின்புறத்தில் மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்
படத்திலுள்ள பிரசித்தமானவர்கள் : மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ
அலரி மாளிகைக்கு பின்னால் மஹிந்தவுக்கு ஆதரவானவர்கள் ஒன்று சேர்வதை நியூஸ் பெர்ஸ்ட் செய்திச் சேவை வெளியில் கொண்டு வந்தது. அக்காட்சிகளில் இரண்டு குறிப்பிடத்தக்க நபர்கள் காணப்பட்டனர்: மஹிந்த கஹந்தகம (சிவப்பு சட்டை அணிந்தவர்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர்), அத்துடன் திலிப் பெர்ணான்டோ (மஹிந்தவின் முகத்தை தனது மார்பில் பச்சை குத்திய நபர்: மிலிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளரும் கொழும்பு 06 பிராந்தியத்துக்கான பொதுஜன பெரமுனவின் பிரதம அமைப்பாளரும்).
காலை 10:00 மணிக்கு பின்னர்: அலரி மாளிகையில் சமருக்கான அழைப்பு
காணப்பட்ட பிரபல்யமான நபர்கள்: மஹிந்த ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்சன் பெர்ணான்டோ, சஞ்சீவ எதிரிமான, சனத் நிசாந்த, நாமல் ராஜபக்ச, மஹிந்த கஹந்தகம.
காலை 10:00 மணிக்கு சற்று முன்னர், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையின் பின் கதவுக்கு வெளியே ராஜபக்ச ஆதரவு அணிகள் ஒன்று சேர ஆரம்பித்தன.
இக்குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகளின் பணியாளர்கள் மற்றும் அக்கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் உள்ளடங்கியிருந்தனர். இந்நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை நியூஸ் பெர்ஸ்ட் செய்திச் சேவை முகநூல் வாயிலாக காலை 9:47 இற்கு ஆரம்பித்தது. ஒன்று கூடிய குழுவின் முன்னே ஒரு ஒலி வாங்கியை நீட்டிய அவ்வலைவரிசை அங்கு என்ன நடக்கின்றது என நேரடியாகவே கேட்டது:
மஹிந்த கஹந்தகம இங்கும் தெளிவாகத் தோன்றுகின்றார் (காணொளியின் 10:20 என்ற நேரப் பகுதியில் பார்க்கவும்). இக்குழுக்கள் பின்னர் அலரி மாளிகைக்குள் நுழைந்தன. அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என பலர் அங்கு உரையாற்றினர். நீங்கள் பார்ப்பது போன்று, அக்குழுவில் பெரும் எண்ணிக்கையானவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
இதன் பின்னர் உடனடியாக (நியூஸ் பெர்ஸ்ட் வழங்கிய நேரலைக்கு ஏற்ப), மஹிந்த ராஜபக்ச அங்கு ஒன்று கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
காலை 11:33 இற்கு சற்று பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஒலி வாங்கியின் முன்னால் காணப்பட்டார். ‘மைனாகோகம’வினை பெயர் குறிப்பிட்டுக் கூறிய அவர் ஆதரவாளர்களை தூண்டி விட்டது தெளிவாக தெரிகின்றது. ‘சமரை ஆரம்பிப்போம்’ (‘සටන ආරම්භ කරමු!’) என அவர் முழங்கினார். ‘ஜனாதிபதியினால் செய்ய முடியாவிட்டால்… நாம் அனைத்தையும் அகற்றி முடிப்போம்’ என்றார்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் மார்க் அன்டனி பின்வருமாறு கூறுவார் “அழிவை ஏற்படுத்துவோம்” மற்றும் “யுத்த நாய்களை அவிழ்த்து விடுவோம்”.
ஜோன்ஸ்டனின் அருகில் நின்று பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான அழிவை உற்சாகத்துடன் வரவேற்றார். இவர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவும் அங்கு காணப்பட்டார். ‘காலி முகத்திடலுக்கு செல்வோம்’ என்ற கோஷங்களுக்கு மத்தியில் அவர் ஆதரவாளர்களுடன் செல்பிகளை எடுத்துக் கொண்டிருப்பது இங்கு காண்பிக்கப்படுகின்றது.
பின்னர் அதே படங்களை டுவீட் செய்த நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் கூட்டம் அமைதியாக இடம்பெற்றதாகவும் ‘அது வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்களால் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும்’ தெரிவித்திருந்தார்.
இது அமைதிக்கு எதிரான ஜோன்ஸ்டனின் அறைகூவலுக்கு முரணாக அமைகின்றது. பின்வரும் நபரின் பிரசன்னமும் நாமலின் இக்கருத்தை முறியடிப்பதாக அமைகின்றது: சனத் நிசாந்த என்ற பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கோட்டாகோகமவுக்கு வந்த குழுவில் நேரடியாக பங்கேற்றிருந்தார். அதனை வீடியோக்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த இடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நிசாந்தவின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. கறுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் வர்ணங்களைக் கொண்ட அந்த டீ-சேர்ட் இனை அவதானியுங்கள்.
திரையில் அவதானிக்கும் வேளை, அவரும் அதே மேடையையே பயன்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது (மஹிந்த மற்றும் ஜோன்ஸ்டன் ஆகியோர் உரையாற்றிய அதே இரட்டை ஒலிவாங்கிகள் கொண்ட மேடையை கவனிக்கவும்). இதே மேடையையே பொதுஜன பெரமுனவின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாராச்சியும் பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது.
அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் (கீழுள்ள காணொளியில் 15:40 என்ற நேர அளவில் நோக்கவும்), கூச்சலிட்டவாறு அந்தக் குழு அலரி மாளிகையில் இருந்து வெளியேறுகின்றது. “காலி முகத்திடலில் இறங்குவதற்கு இதுவே சரியான நேரம்” (“මේක තමයි වේලාව**,** Galle Face බහින්න!”) எனக் கோசமிடுகின்றனர்.
நண்பகல் 12:00 மணிக்கு சற்று பின்னர்: மைனாகோகம மீதான தாக்குதல்
காணப்பட்ட பிரசித்தமான நபர்கள்: நிசாந்த ஜெயசிங்க, திலிப் பெர்ணான்டோ, புஷ்பலால் குமாரசிங்க.
**AmanthaP வெளியிட்ட டுவிட்டர் காணொளியில்** வொன்டர் ஹோட்டலின் (அலரி மாளிகைக்கு சற்று தூரத்தில் கொள்ளுப்பிட்டியை நோக்கிய திசையில் அமைந்துள்ளது) முன் காணப்பட்ட வீதித் தடைகளின் மேலால் பாய்ந்து மைனாகோகமவை தாக்க அக்குழு சென்றதை அவதானிக்க முடிகின்றது.
**Economynext வெளியிட்டுள்ள மேலுள்ள புகைப்படத்தில்** அந்த நேரம் துல்லியமாக பி.ப. 12 எனக் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலகக் குழு மைனாகோகம வீதி வரை முன்னேறியது. அலரி மாளிகைப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தோன்றுகின்ற கீழுள்ள காணொளி கலகக் குழு மைனாகோகமவை தாக்கிய தருணங்களை எமக்குக் காண்பிக்கின்றது.
இந்த தாக்குதலை காண்பிக்கும் நியூஸ் பெர்ஸ்ட் காணொளி இங்குள்ளது.
https://www.youtube.com/watch?v=pMo4uRT3IEI
அலரி மாளிகைக்கு பின்புறமாக உள்ள வீதியொன்றில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. NewsWire வெளியிட்ட காணொளியில் திலிப் பெர்ணான்டோ சம்பவ இடத்தில் காணப்பட்டமையை உறுதிப்படுத்துகின்றது.
மைனாகோகமவில் இடம்பெற்ற தாக்குதலில் அங்கிருந்த பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை வெள்ளை நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் அறைந்து கீழே தள்ளும் தெளிவான காணொளிகளை பல செய்தி ஊடகங்கள் படம்பிடித்திருந்தன.
எமது #AttackonGGG என்ற ஹாஷ்டாக்கை பயன்படுத்தி சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் தாக்குதலை மேற்கொண்ட நபர் அமித அபேவிக்ரம என டேக் செய்ய ஆரம்பித்தனர்.
அமித அபேவிக்ரம என்ற ரவுடி சிறிய பின்விளைவுகளை மாத்திரம் ஏற்படுத்தும் நபர் போன்று தோற்றமளிக்கின்றார். தனது பேஸ்புக் புரபைலை செயலிழக்க வைக்கும் முன்னர் அவர் (கவனயீனமாக) கீழுள்ள புகைப்படங்கள் போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவற்றிலும் அவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் என்பதை அறிய முடிந்தது. அத்துடன் அவரின் பேஸ்புக் கவர் புகைப்படம் அவர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கும் நிகழ்வை காண்பித்தது.
இதிலுள்ள இரண்டாவது ரவுடி (இளம் நீல வர்ண டீ-சேர்ட் அணிந்தவர்) நிசாந்த ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் முகநூல் பக்கம் மற்றும் தினமினவின் செய்தி வெளியீடு ஆகிய இரண்டும் இவரை மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் எனக் குறிப்பிடுகின்றன.
இவை அனைத்துக்கு நடுவே ஒரு தருணத்தில் புஷ்பலால் குமாரசிங்க என்ற பொதுஜன பெரமுனவின் அம்பலாங்கொடை உள்ளூராட்சி சபைத் தவிசாளர் அலரி மாளிகையின் அருகில் வைத்து மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்.
மைனாகோகமவில், கலகக்காரர்கள் அங்கிருந்த கட்டமைப்புகளை உடைத்து அவற்றில் இருந்த உலோக குழாய்கள் மற்றும் தடிகளை ஆயுதங்களாக பயன்படுத்த எடுத்தமையை Mind Adventures டுவிட்டர் கணக்கு (மிகத் தெளிவாக) காண்பிக்கின்றது.
அதன் பின்னர் இக்கலகக் குழு கோட்டாகோகமவினை நோக்கி பேரணியாகச் சென்றது.
பிற்பகல் 12:30 இற்கு சற்று பின்னர்: காலி முகத்திடல் சுற்று வட்டத்தைநோக்கிய பேரணி
காணப்பட்ட பிரசித்த நபர்கள்: சனத் நிசாந்த
**வாட்ஸ்அப் இன் ஊடாக வலம் வந்த ‘The Sri Lankan Struggle’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின்** மூலமாகவே இந்த விடயம் தொடர்பில் எம்மால் முதலாவது காணொளியை சேகரிக்க முடிந்தது. ராஜபக்சவுக்கு ஆதரவான கலகக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக செல்லும் வேளை பொலிசார் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாமல் இருப்பதை காண்பிக்கின்றது. இந்த காணொளியில் கமராவை கையில் பிடித்துள்ள நபர் ஒருவர் பொலிசாரிடம் ஏன் நீங்கள் கலகக்காரர்களை தடுத்து நிறுத்தவில்லை எனக் கேட்ட வேளை, அதற்கு தம்மால் முடியாது என பதில் வழங்கப்படுகின்றது.
இந்த இரண்டாவது காணொளி காலிமுகத்திடல் சுற்று வட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது: இதில், கலகக்காரர்கள் தாம் செல்ல எத்தனிக்கும் இடத்தை இன்னும் அடையவில்லை. கமரா இயங்கிக் கொண்டிருந்த வேளை, சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவாசிகளிடம் ‘உள்ளே செல்லுமாறு’ கூறுகின்றார் - இதன் பொருள் கோட்டாகோகம நோக்கிச் செல்லுங்கள் என்பதாகும் - அத்துடன் கலகக்காரர்களை தடுத்து நிறுவத்துவதாகவும் வாக்குறுதியளிக்கின்றார்.
பின்னணியில் நீர்த்தாரை பிரயோகம் செய்யும் வண்டி நகர்கின்றது. அத்துடன் காலி முகத்திடல் சுற்றுவட்டத்துக்கு சற்று முன்னால் பொலிசார் தடுப்பு அணி ஒன்றை உருவாக்குகின்றனர்.
பிற்பகல் 12:33 (தெரண அலைவரிசையில் குறிப்பிடப்படும் நேரத்துக்கு ஏற்ப), பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பொலிஸ் தடுப்பு அணிக்கு முன்னால் காணப்படுகின்றார். அந்த மஞ்சள் வண்ண டீ-சேர்ட் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
பிற்பகல் 12:43 இற்கு சற்று பின்னர்: பொலிசார் கலகக்காரர்களை காலி முகத் திடலுக்கு செல்ல அனுமதிக்கின்றனர்
காணப்பட்ட பிரசித்த நபர்கள்: சனத் நிசாந்த
இவ்விடத்திலேயே நியூஸ் பெர்ஸ்ட் இன் நேரடி ஒளிபரப்பு முக்கிய விடயமாக மாறுகின்றது. பிற்பகல் 12:40 இற்கு (நேரடி ஒளிபரப்பின் 39:37 நேர அளவில்) பொலிசாரின் இரண்டாவது அணைக்கு முன்னால் அவர்களின் கமரா ஒன்று நிலை பெறுகின்றது – அதாவது கலகக்காரர்களை நோக்கியதாக. ஒரு நபர் பின்வருமாறு கூச்சலிடுவதை எம்மால் தெளிவாக செவிமடுக்க முடிகின்றது: “எமக்கு கோட்டாபய வேண்டும், எமக்கு மஹிந்த வேண்டும், தடுப்புகளை தகர்ப்போம், அவர்களின் துப்பாக்கிகளைக் கேட்டெடுப்போம், கொல்வோம், கோட்டாகோகமவில் உள்ள எவரையும் நாம் (உயிருடன்) விட மாட்டோம், அவர்களின் மீது பெற்றோலை வீசுங்கள்!
(“ගෝඨාබය ඕනේ! මහින්ද ඕනේ! Barriers කඩාගෙන යමවු! ඉල්ල ගනිල්ලා rifle! මරල දාපල්ලා! මුං මරපියවු! ගෝටගම එකෙක් තියන්නෑ! ඉවසුව ඇති! ගහපල්ලා petrol!”).
இவ்வாறான தீவிர அச்சுறுத்தல்கள் மற்றும் கலகக்காரர்களின் பாரிய எண்ணிக்கை என்பவற்றை நோக்கிய பின்னரும், பொலிஸ் அரண் இலகுவில் அகற்றப்பட்டது. கலகமடக்கும் பொலிசாரின் கேடயங்களை ஒரு நிமிட நேரத்துக்கும் குறைவாகவே கலகக்காரர்கள் நெருக்கிய நிலையில் பொலிசார் உடனடியாக அரணைக் கைவிட்டு ஒரு புறமாக அகன்றதை தெரணவின் காணொளிகள் எமக்கு காண்பித்தன.
இந்த முயற்சி எந்தளவு பெயரளவில் காணப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள உயரமான இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது காணொளியை நோக்கவும். அந்த முயற்சி நம்ப முடியாத அளவுக்கு பெயரளவில் காணப்பட்டது. இரண்டு வரிசைகளைக் கொண்ட மிகவும் மெல்லிய பொலிஸ் அரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன் அது கலகக்காரர்களின் முன்னிலையில் உடனடியாகவே நீர்த்துப் போனது. அத்துடன் அங்கு ஒன்றல்ல இரண்டு நீர்த்தாரை வண்டிகள் (பயன்படுத்தப்படாமல்) காணப்பட்டன, அத்துடன் கலகமடக்கும் உடைகளுடன் பொலிசார் காணப்பட்டனர் (அவர்கள் எதையுமே செய்யவில்லை).
கலகக்காரர்கள் உடனடியாக அரணை உடைத்து முன்னேறினர். நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களைக் காண்பிக்கும் கத்தரிக்கப்பட்ட காணொளித் துண்டொன்று இதோ:
முதலாவது பொலிஸ் அரண் தகர்க்கப்பட்டதும் பொலிசார் உடனடியாக ஓடிச் சென்று காலி முகத்திடல் பஸ் தரிப்பு நிலையத்தின் முன்னால் இரண்டாவது அரண் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தனர். கருவிகள் அங்கிருந்த போதும் நீர்த்தாரை பிரயோகமோ கண்ணீர்ப்புகை பிரயோகமோ அங்கு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பொலிசார் கைகளை இணைத்து இன்னொரு பெயரளவிலான அரணை அமைத்தனர், அது உடனடியாக தகர்க்கப்பட்டது.
எமது அடுத்த காணொளி இதுவாகும். இது பிற்பகல் 12:46 மணியளவில் படமாக்கப்பட்டது என நாம் ஊகிக்கின்றோம். வீதியில் உள்ள கலகக்காரர்களின் நெருக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொலிசார் பின்வாங்குவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனினும் பக்கவாட்டில் காலி முகத்திடல் முற்றுமுழுதாக திறந்தே காணப்படுகின்றது. முதலாவது அரணைப் போலவே இரண்டாவது அரணும் கலகக்காரர்களினால் தகர்க்கப்படுகின்றது.
கீழுள்ள படத்தில் சனத் நிசாந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுடன் உரையாடலில் ஈடுபட்டவாறு கோட்டாகோகமவை நோக்கி நடப்பதைக் காண முடிகின்றது. இந்த பொலிஸ் அதிகாரியே காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் வைத்து கலகக்காரர்களை தடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்.
அது நிச்சயமாக சனத் நிசாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் என்பதை **நியூஸ்வயர் ஊடகம்** உறுதிப்படுத்தியது.
கோட்டாகோகம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்
காணப்பட்ட பிரசித்த நபர்கள்: சனத் நிசாந்த
கலகக்காரர்கள் இரு புறங்களில் இருந்தும் கோட்டாகோகம மீது தாக்குதல்களை நடத்தினர். இதனைத் தடுக்க பொலிசார் மிகவும் குறைந்த முயற்சியையே மேற்கொண்டனர். பக்கப் பிரதேசங்களை புறக்கணித்து பொலிசார் வீதியில் மூன்றாவது தடுப்பு அரணை உருவாக்க முயற்சித்தினர், இது கலகக்காரர்கள் கோட்டாகோகமவின் கூடாரங்களை தாக்குவதற்கு ஏதுவாக அமைந்தது. தெரண ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளிகளில் இத்தாக்குதலை தெளிவாகக் காணக் கூடியதாக இருந்தது.
கோட்டாகோகமவின் கலைக் கூடம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பலியானோரின் நினைவுச் சின்னங்கள் என்பன முதலாவதாக தாக்கியழிக்கப்பட்டன.
தாக்குதல் மேற்கொள்ளும் ராஜபக்ச ஆதரவு கலகக்காரர்களை தடுப்பதற்கு பெயரளவிலான முயற்சிகளையாவது மேற்கொள்ளாமல் பொலிசார் அவர்களைக் கடந்து சென்றனர் (காணொளியின் 05:03 என்ற நேரத்தில் நோக்குங்கள்).
அந்த காணொளியின் அடுத்த முப்பது செக்கன்கள் கடந்த பின்னர் பல கூடாரங்கள் எரிந்து கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
இறுதியாக, நீர்த்தாரை பிரயோக வாகனங்கள் செயற்பட ஆரம்பித்தன. அவை ஏற்கனவே தாக்கியழிக்கப்பட்ட கோட்டாகோகமவின் சிதைவுகளை நோக்கியே நீரை வீசியடித்தன. ஒரு நீர்த்தாரை வண்டி மற்றைய நீர்த்தாரை வண்டி மீது சிறிது நேரத்துக்கு நீரைப் பாய்ச்சியடித்தது. இது தவறுதலாக நடந்தது போல் தோன்றுகின்றது.
இந்த காணொளியின் நடுப்பகுதியில் (7:55 என்ற நேரத்தில் இருந்து நோக்கவும்), ராஜபக்சக்களுக்கு ஆதரவான இந்த கலகக் குழு ஒரு நபரை வீதியில் வைத்து பயங்கரமாக தாக்குவதை உங்களால் அவதானிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராகி எதிர்த்தாக்குதல் நடத்த அந்த இடத்துக்கு வர ஆரம்பித்தனர். சனத் நிசாந்த அவ்விடத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுவதை நியூஸ் பெர்ஸ்ட் ஊடகத்தின் காணொளி எமக்குக் காண்பிக்கின்றது (கீழுள்ள காணொளியின் 1:24 என்ற நேரத்தில் இருந்து நோக்கவும்).
Webnews.lk தளத்தின் நேரடி ஒளிபரப்பு 12:04 என்ற நேரத்தில் ஆரம்பித்ததுடன் கலகக்காரர்கள் கோட்டாகோகமவினை தாக்கி அழிப்பதன் நெருங்கிய வீடியோவை காண்பிக்கின்றது. காணொளியின் 46:00 என்ற நேரத்தில் (அதாவது 12:50 இற்கு) பொலிசார் மூன்றாவது அரணை அமைக்க முயற்சிக்கின்றனர். காணொளியின் 52:13 என்ற நேரத்தில் (பி.ப. 12:58 இற்கு) கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படும் சத்தத்தை உங்களால் கேட்க முடியும். அவ்விடத்தில் ஏற்கனவே நீர்த்தாரை பிரயோகமும் ஆரம்பமாகியுள்ளது என ஊடகவியலாளர் கூறுகின்றார்.
கலகமடக்க நன்கு பாதுகாப்பு உடைகளைத் தரித்த (துடுப்புகள், புகை முகக் கவசங்கள் மற்றும் ஏனையவை) பொலிஸ் அதிகாரிகள் காணொளிக்குள் வந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையிலும் அவர்கள் பெரிதாக எதனையும் செய்யவில்லை.
இந்நேரத்தைச் சூழ்ந்த நேரம் ஒன்றில் சஜித் பிரேமதாச உள்நுழையும் முயற்சி ஒன்றை மேற்கொள்கின்றார். அங்கு தாக்குதல் இடம்பெறுகின்றது. வாகனத்தின் கண்ணாடியும் நொருங்குகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜபக்சவுக்கு எதிரான குழுக்கள் பலமடைய ஆரம்பித்து ராஜபக்ச ஆதரவாளர்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றனர். பொதுஜன பெரமுனவின் கலகக்காரர்கள் தாக்கப்படுவதில் இருந்து அவர்களை பாதுகாக்க பொலிசார் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
கலகக் குழு அவ்விடத்துக்கு விரைந்ததில் இருந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் வரை கோட்டாகோகமவின் மீது கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தாக்குதல் நடப்பதை எம்மால் கணிக்க முடிகின்றது. பாசாங்கான நான்கு பொலிஸ் மனித அரண்கள் உருவாக்கப்பட்டு அவை கலகக்காரர்களினால் தகர்க்கப்பட்டன. கோட்டாகோகமவை பாதுகாக்க முன்னின்றவர்களிடம் காணப்பட்ட சக்தியைவிட பல மடங்கு சக்தி பொலிசாரிடம் காணப்பட்ட நிலையை கருதும் போது அவர்கள் இதனை தடுக்க முனையாதது ஆச்சரியமளிப்பதாகும்.
பி.ப. 01:51 அளவில் சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு கோட்டாகோகம மற்றும் பொலிசார் இடையே மனித வேலி ஒன்றை அமைத்தனர் (கீழுள்ள EconomyNext படத்தின் மூலம் இந்நேர அளவை பெற முடிந்தது).
முடிவுரையாக
இந்த விடயங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம், எனினும் நாங்களும் இதை சொல்லியாக வேண்டும்.
பொலிசார் இங்கு விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் அண்மைக்கால உத்திகளுடன் ஒப்பிடும் வேளை அமைதியான மக்கள் போராட்டம் ஒன்று அழிக்கப்படுவதை தடுப்பதற்கு மிகக் குறைந்த முயற்சியினையே அவர்கள் மேற்கொண்டனர். அத்துடன் சில அடிகள் தூரத்துக்கு அப்பால் கலகக்காரர்கள் கூடாரங்களுக்கு தீ வைக்கும் வேளை ஒரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
தமது கூட்டத்தை வேறு நோக்கங்களை கொண்ட குழுக்கள் கைப்பற்றி இந்த நாச வேலையை செய்ததாக நாமல் ராஜபக்ச கூறுகின்றார், அத்துடன பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கே அதிக வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.
இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பிரசித்தமாக அக்கூட்ட மேடையில் வைத்து தாக்குதலைத் தூண்டினார். இந்த செயற்பாடு முழுவதும் (அலரி மாளிகைக் கூட்டம் தொடக்கம் கோட்டாகோகம தாக்குதல் வரை) சனத் நிசாந்த கலகக்காரர்களுடன் இணைந்திருந்தார். திலிப் பெர்ணான்டோ அங்கு காணப்பட்டார், நிசாந்த ஜெயசிங்க ஒரு பெண்ணைத் தாக்கும் காணொளி உள்ளது. அத்துடன் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை சம்பவம் நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மொரட்டுவை மாநகர மேயர் சமன்லால் பெர்ணான்டோவும் இதில் பாரிய அளவில் சம்பந்தப்பட்டுள்ளார் என தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அவரின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தும் காணொளி, புகைப்படம் அல்லது ஆவணம் எதனையும் எம்மால் திரட்ட முடியவில்லை. மேலும், பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மிலான் ஜயதிலக்கவின் பகுதியளவிலான அடையாளமும் கிடைத்துள்ளது. நாம் இதனை பகுதியளவிலான அடையாளம் என வர்ணிப்பது எமக்கு கிடைத்த ஸ்கிரீன் பதிவுகளின் மூலத்தை தேடும் வேளை உயர் வரைவிலக்கணம் கொண்ட மூலம் ஒன்றை எம்மால் பெற முடியாமல் இருப்பதாலாகும்.
எனினும் இங்கு தாக்குதல் நடத்த வந்த கும்பல் பொது ஜன பெரமுன ஆதரவாளர்கள் என்பது மாத்திரம் மிகத் தெளிவானது.
இந்த ஆக்கத்திற்கான காணொளிகளை பதிவு செய்த மற்றும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் : NewsFirst, Derana, NewsWire, EconomyNext (உங்களது கமரா மூலமான நேரப் பதிவுகளுக்கு நன்றி!), Webnews.lk, சம்பவங்களைப் பதிவுசெய்த, எங்களை டேக் செய்த மற்றும் #AttackonGGG ஹேஷ்டெக் மூலம் ட்விட்டரில் இந்தத் தகவலைக் கண்டறிவதில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள். இந்த ஆக்கத்திற்காக சம்பவத்தை விரைவாக ஆவணப்படுத்துவது முக்கியமானதாக இருந்தது, மேலும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை அடையாளப்படுத்த பொது மக்களின் பங்களிப்பு பெரிதும் உதவியது.
சில வீடியோக்களை பதிவிறக்கம் செய்து இங்கே மீண்டும் பதிவேற்றியுள்ளோம். அவற்றுக்குச் சொந்தமானவர்களது உரிமையை திசைதிருப்புவதோ அல்லது இதை முற்றிலும் எங்கள் சொந்தப் படைப்பாக காண்பிப்பதோ இதன் நோக்கம் அல்ல, மாறாக ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் இருந்து இந்தக் காட்சிகள் சேகரிக்கப்பட்டதால், குறித்த தளங்களுக்குள் நுழைந்து அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற சிரமத்தை எங்கள் வாசகர்களுக்கு வழங்காதிருப்பதே இதன் நோக்கம்.
நாங்கள் பயன்படுத்திய உள்ளடக்கத்தின் மூலங்களுக்குப் பெயரிட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம் - சில காட்சிகளை முதலில் உருவாக்கியது யார் என்பதை எங்களால் சரிபார்க்க முடியாததால், அவற்றுக்கு பெயர் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பல ஆதாரங்களில் உள்ள காட்சிகளைக் குறுக்கு சரிபார்ப்பு செய்துள்ளோம்; அவற்றில் தெளிவானவற்றை தெரிவு செய்து உங்களுக்கு வழங்கியுள்ளோம். எப்பொழுதும், நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை மாத்திரம் நோக்காது, வழங்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்த்து, காலவரிசை துல்லியமானதா என்பதைச் சரிபார்க்கவும்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்களைப் பார்ப்பதற்கு நாம் தினுக லியனவத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பரிந்துரைக்கிறோம்.