இவ்வாண்டு தொடக்கத்தில் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசு இரு புதிய சட்டங்களை கொண்டு வந்தது.
நடைமுறையிலில்லாதது: பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி (SGST)
இவ்வரிகளால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் யார்?
இலங்கை உடனடியாகத் தீர்க்கவேண்டிய மாபெரும் பொருளாதார பிரச்சினையான வரி வருமானக் குறைபாட்டினை, இவ்வரிமாற்றங்கள் நமக்கு படம் போட்டுக்காட்டுகின்றன. 1990 களின் தொடக்கத்திலிருந்தோ, இலங்கையின் வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையான விகிதம் கணிசமாக குறைந்து வந்துள்ளது. இதனால் அரசு தொடர்ந்தும் கடன்களை வாங்கி குவிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. இலங்கையின் வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையான விகிதம் உலகின் மிகவும் குறைவான வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையான விகிதங்களில் ஒன்றாகத் திகழ்வது, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் அடிப்படையான காரணங்களில் ஒன்றாகும்.
நீண்ட காலமாகத் தொடர்கின்ற இவ்வரிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்:
- வருமான வரியின் வரி விகிதங்களை அதிகரித்தல்
- வரிப்பரப்பை விரிவாக்கல் (வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல்)
- குறைவான வருமானம் ஈட்டுவோரின் வரிச்சுமையினை குறைத்தல்.
மேலதிகமாக, வரி சீர்திருத்தங்கள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்த 2019 இல் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசு 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரி சட்டத்தில் கணிசமான திருத்தங்களை கொண்டு வந்தது போல அடிக்கடி திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது.
பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி (SGST) சட்டம் மற்றும் கூடுதல் வரி சட்டம் ஆகியன தற்போது எம்மிடையே உள்ளன. அவற்றுள் ஒன்று அண்மையில் உயர் நீதிமன்றினால் இல்லாது செய்யப்பட்ட போதும் மற்றைய ஒன்று இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவை இரண்டும் பற்றிய முழு விபரங்கள் இதோ.
நடைமுறையிலில்லாதது: பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி (SGST)
பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி 2021 பாதீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் (அப்போதைய நிதி அமைச்சர்) அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரியானது பல்வேறுபட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்ட சில வரிகளினை ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. [1]
எவ்வாறாயினும், இச்சட்டம் 2021 இல் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தனது 2022 பாதீட்டு உரையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, 2022 ஜனவரி முதல் பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி நடைமுறைக்கு வருவதாக குறிப்பிட்டார்.
முன்பே குறிப்பிட்டது போல, மது, சிகரெட், வாகனங்கள், தொலைத்தொடர்பு சேவைகள், சூதாட்டம், மற்றும் கணினி விளையாட்டுகள் ஆகியவற்றின் மீதான வரிகளை, பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி ஒருங்கிணைத்துள்ளது.
தற்போது இப்பிரிவுகள் மீது பல்வேறுபட்ட வரிகள் சுமத்தப்பட்டுள்ளன. உதாரணமாக வாகனங்கள் மீது, சுங்க வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி வரி, கலால் வரி மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன சுமத்தப்பட்டுள்ளன. 72 மில்லிமீற்றர் முதல் 84 மில்லிமீற்றர் வரையான நீளமுடைய சிகரெட்டுகள் மீது 15% சுங்க வரி, 8% பெறுமதி சேர் வரியும் 165% செஸ் வரியும் சுமத்தப்பட்டுள்ள அதே வேளை, 1000 சிகரெட்டுகளுக்கு 46,600 ரூபா வீதம் கலால் கட்டணமும் அறவிடப்படுகின்றது[2]. பல்வேறுபட்ட அரச நிறுவனங்கள் மேற்படி வரிகளினை அறவிடுகின்றன:
சுங்க வரி | வருவாய் சேகரிப்பு நிறுவனம் |
---|---|
சுங்க வரி | இலங்கை சுங்கம் |
கலால் வரி (சிகரெட்) | இலங்கை சுங்கம் |
கலால் வரி (வாகனங்கள்) | இலங்கை சுங்கம் |
கலால் வரி (மது) | மது வரித்திணைக்களம் |
செஸ் வரி | இலங்கை சுங்கம் |
பெறுமதி சேர் வரி (இறக்குமதிகள்) | இலங்கை சுங்கம் |
பெறுமதி சேர் வரி (உள்நாட்டு உற்பத்திகள்) | உள்நாட்டு இறைவரி திணைக்களம் |
துறைமுக விமான நிலைய அபிவிருத்தி வரி | இலங்கை சுங்கம் |
மூலம்: உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம், மற்றும் கலால் வரித்திணைக்களம் ஆகியவற்றின் தகவல்களைக்கொண்டு ஆசிரியரால் தொகுக்கப்பட்டது.
பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி சட்டம் அறிமுகப்படுப்பட்டதன் பின்னணியில் இரு காரணங்கள் உள்ளன**. ஒன்று, பல்வேறுபட்ட வரிகளுக்கு பதிலாக ஒரு வரியினை நடைமுறைப்படுத்துவது. மற்றையது இலங்கை சுங்கம், கலால் வரித்திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களங்களுக்கு ஊடாக செல்வதற்கு பதில் நேரடியாக** நிதி அமைச்சருக்கு வரிகளை அறவிடும் அதிகாரத்தை வழங்குவது.
வரிகளை அறவிடுவது நிதி அமைச்சின் பணியில்லை. ஒரு நிறுவனம் அனைத்து வரி அறவீடுகளையும் மேற்பார்வை செய்வது வினைத்திறன் மிக்கது போலத்தோன்றினாலும், இந்நடவடிக்கை இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரித்திணைக்களம் மற்றும் கலால் வரித்திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரத்தை குறையச் செய்யும். பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி மீது தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கொன்று, திறைசேரியின் செயலாளர், நிதி அமைச்சின் கீழ் வரும் அரச திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களை நிதி அமைச்சரின் பேரில் மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ள போதும், உள்நாட்டு இறைவரித்திணைக்களம், கலால் வரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் போன்ற அரச திணைக்களங்களின் பணிகளையோ செயற்பாடுகளையோ தான் முன்னெடுக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை எனத் தெளிவாக குறிப்பிடுகிறது.
இதனடிப்படையில் பொருள்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரி, இலங்கை சுங்கம், கலால் வரித்திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற பல்வேறுபட்ட குழுக்களால் உயர் நீதிமன்றில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
இச்சட்டத்திலுள்ள சில உட்பிரிவுகள் அரசியல் சாசனத்தோடு ஒத்துப்போகாதபடியால் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட முடியாதென உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. இச்சட்டம் தற்போது நடைமுறையிலில்லை. இனியும் மீள அறிமுகப்பட்டுத்தப்படும் வாய்ப்பும் பெரிதாக இல்லை.
நடைமுறையிலுள்ளது: கூடுதல் வரி
ஒரு முறை மட்டும் சுமத்தப்படும் வரியொன்றும் 2022 ஆம் ஆண்டின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் 2022 பாதீட்டில் முன்மொழியப்பட்டது. 2020/21 காலப்பகுதியில்(2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை) 2 பில்லியனுக்கும் மேற்பட்ட வரி விதிக்கத்தகு வருமானத்தை ஈட்டிய நிறுவனங்கள் மீது இவ்வரியானது சுமத்தப்பட்டது.[3]
இவ்வரியானது கடந்த காலத்துக்கும் பொருந்தும்படி நடைமுறைப்படுத்தப்பட்டதால், ஏற்கனவே 2020/2021 வரி கட்டிய நிறுவனங்களும் மீண்டும் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருந்தது. (எனவேதான் கூடுதல் வரி என்ற பெயர் ஏற்பட்டது)
வணிகங்களை பாதிப்பதால் இவ்வகையான வரிகள் பொருளாதாரத்திற்கு தீங்கானவை எனக் கருதப்படுகின்றன. வரி விகிதத்தில் உயர்வொன்று வருமாயின் அதை எவ்வாறு சமாளிப்பதென்று இந்நிறுவனங்கள் அறியும். ஆனால், கடந்த காலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் மீது வரி சுமத்தப்பட்டால், அதை சமாளிப்பது வணிகங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
அரசு இவ்வாறானதொரு நடவடிக்கையை ஏன் செய்ததென்று உங்களில் பலருக்கு ஐயம் எழலாம். அதற்கு காரணம், அரசு 2019 இல் தேர்தலை வென்று ஆட்சிக்கு வந்தவுடன் குறிப்பிட்ட சில வரிகளை சடுதியாக குறைக்கவும், சில வரிகளை இல்லாமல் செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதனால், வரி வருமானத்தில் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக, இலங்கை வரலாற்றிலேயே மிகவும் குறைவான வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையான விகிதமான 8.4% 2020 இல் பதிவானது.
மார்ச் 22 ஆந்திகதி, உயர் நீதிமன்றம் இச்சட்டமூலம் அரசியல் சாசனத்துடன் ஒத்துப்போவதாக ஏற்றுக்கொண்டபடியால், பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது.
இவ்வரிகளால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் யார்?
நீங்கள் பொதுமக்களில் ஒருவராயின் கூடுதல் வரி தொடர்பில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
ஹெய்லெய்ஸ், எல்ஓஎல்சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH), கொமர்சியல் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நேசனல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆசியாட்டா ஆகிய பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இக்கூடுதல் வரியை செலுத்தியாகவேண்டும்.
இவ்வரி சில சர்ச்சைகளையும் கிளப்பியிருந்தது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து வருகின்ற வருவாயினை கொள்ளையடிக்க முனைவதாக அரசு மீது குற்றஞ்சாட்டியிருந்தனர்.
கூடுதல் வரி சட்ட மூலத்தில் ‘நிறுவனம்’ எனும் பதம் விரிவாக விபரிக்கப்பட்ட விதத்தை வைத்து பார்க்கையில் எமது ஆய்வுகளில் மேற்படி குற்றச்சாட்டுகளில் சட்ட அடிப்படை இருப்பதாகவே தெரிகிறது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட ஐயங்களைத் தொடர்ந்து ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஒன்பது பிற நிதியங்கள் இக்கூடுதல் வரிக்குள் உள்ளடங்க மாட்டா என்பதை நிதி அமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஒட்டுமொத்தமாக இதனால் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இலங்கை விரிவான மற்றும் நீண்ட கால வரி சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய தேவையுள்ளது. வரி சீர்திருத்தங்கள் வெறுமனே அடிப்படை பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமல்ல. அவை பெரும் அரசியல் வாக்குறுதிகளும் கூட. இதுவரை வரி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஒரு சில அரசியல் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் செயற்படுத்தப்பட்டவை எல்லாம் குறுகிய காலமே நீடித்தவையாகவும் தூரநோக்கற்றவையாகவுமே இருந்துள்ளன.
[1] “வரி வருமான சேகரிப்பை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் பொருட்டு, மொத்த வரி வருமானத்தில் 50% ஐ அளிக்கும் மது, சிகரெட், தொலைத்தொடர்பு, சூதாட்டம், கணினி விளையாட்டுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் மீது பல்வேறு நிறுவனங்களால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் வரிகள், கட்டணங்களுக்கு பதிலாக இணையத்தினூடு முகாமை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் சிறப்பு வரியொன்றை நான் முன்மொழிகின்றேன். இச்சீர்திருத்தத்தின் வழியாக சட்டவிரோத மது மற்றும் சிகரெட் விற்பனை போன்றவற்றால் அரசு இழக்கும் வருமானங்களை பாதுகாக்கும் நோக்கில், கலால் சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ்வருகின்ற நிறுவனங்களை, சட்ட ஒழுங்கை பேணுவதில் மேலும் அதிக ஈடுபாடு செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது.”
[2] 2020/2021 காலப்பகுதியில் 2,000 மில்லியனுக்கும் அதிகமான வரி விதிக்கத்தகு வருமானத்தை ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரு தடவை மட்டும் 25% கூடுதலான வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இவ்வரி மூலம் 100 பில்லியன் ரூபாவினை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. - 2022 பாதீட்டு உரை, பக்கம் 69
[3] ஜோன் பிளேயர் கோல்டு லீஃப் மற்றும் டன்ஹில் இரண்டுமே இவ்வகைப்பாட்க்குள் வரும்.