Analysis
விவசாய நாடு என்ற மாயை
Mar 23, 2022
நாம் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்துள்ளோமா? ஒரு அரிசி மணி என்பது அற்புதமானதொரு விடயம், எனினும் எம்மிடம் கூறப்படும் இந்த புராணக் கதைகளின் உண்மையான பெறுமதிகளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது

Image: Claudius Ptolemy’s map of ancient Taprobane. Credit: archeology.lk

பண்டைய கால மக்கள் பயன்படுத்திய முறைமைகள் மூலம் இலங்கையின் தற்போதைய சனத்தொகைக்கு உணவளிக்க முடியுமா? நாம் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்துள்ளோமா? ஒரு அரிசி மணி என்பது அற்புதமானதொரு விடயம், எனினும் எம்மிடம் கூறப்படும் இந்த புராணக் கதைகளின் உண்மையான பெறுமதிகளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது

நினைவு என்பது ஒரு மாயையான விடயம்

புராதன வரலாறு என்ன சொல்கின்றது?

இது விவசாயத்துக்கு என்ன பொருள் கோடலை அளிக்கின்றது?

இந்த ஆக்கத்திற்கான தரவுகள்

நினைவு என்பது ஒரு மாயையான விடயம்

எமது கதை பின்வருமாறு நகருகின்றது: முன்னொரு காலத்தில் இலங்கை விவசாயத்தில் தன்னிறைவு அடைந்த நாடாகக் காணப்பட்டது. எமக்குத் தேவையான அரிசியை நாமே உற்பத்தி செய்தோம், மில்லியன் கணக்கானவர்களுக்கு எம்மால் உணவு வழங்க முடிந்தது. எமக்கு திறந்த பொருளாதாரம் தேவைப்படவில்லை. மேலும் எமக்கு நிச்சயமாக இந்த புதிய தொழில்நுட்பங்களோ அல்லது விலை கூடிய இறக்குமதிகளோ அவசியப்படவில்லை.

நீங்கள் ஒரு இலங்கையனாக இருந்தால், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கதை உங்களுக்கு கூறப்பட்டிருக்கும்.

அரசியல்வாதி ஒருவர் கதைக்கும் விடயங்களில் ஒன்றாக, ஊடகவியலாளர்கள் கூறும் ஒரு விடயமாக, தந்தை வழக்கமாக தேனீர் அருந்தச் செல்லும் கடையில் பேசப்படும் விடயமாக அல்லது சில கோப்பைகள் மதுபானம் மற்றும் அதனுடன் இணைந்த சிற்றுண்டிகளின் பின்னர், இக்கதை எழுவது வாடிக்கையாக அமைந்திருக்கும்.

இங்குள்ள பிரச்சினை என்னவெனில் நாம் எமக்கு கூறும் இக்கதை அதனுடன் இணைந்த தரவுகளுடன் சரியாகப் பொருந்தாதிருப்பதாகும்.

முதலாவதாக, நெல் எமது பிரதான பயிர்ச்செய்கையாக அமைகின்றது, விவசாயத் தொழிலாளர் படையின் பெரும்பான்மையினர் இப்பயிர்ச்செய்கையிலேயே ஈடுபடுகின்றனர். எவ்வாறாயினும், நாம் குறைந்தது 1960 ஆம் ஆண்டில் இருந்து ஆலையில் பதனிடப்பட்ட அரிசியை இறக்குமதி செய்து வருகின்றோம் [1].

1960 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதனிடப்பட்ட அரிசி இறக்குமதியைக் காட்டும் விளக்கப்படம். 2000 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மெட்ரிக் தொன் இறக்குமதிகள் அதிகமாக இருந்தன.

கோதுமையை நோக்கும் போது: இலங்கையில் கோதுமை உற்பத்தி செய்யப்படுவதில்லை அத்துடன் எமது உள்ளூர் கோதுமை மாவு ஆலைகளுக்காக நாம் கோதுமையினை இறக்குமதி செய்து வருகின்றோம். அண்மைக் காலமாக, நாம் கோதுமை மாவை நேரடியாகவும் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளோம்.

பருப்பு, சீனி, பால் மற்றும் பாலுற்பத்தி பொருட்கள்: இவற்றில் சிறிய அளவுகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட போதும், இந்த அனைத்து பொருட்களுக்கும் நாம் இறக்குமதியிலேயே தங்கியுள்ளோம். கடந்த 60 வருடங்களில், நாம் தன்னிறைவை எட்டிப் பிடித்த தருணமொன்றாக 2006 அமைகின்றது, அத்தன்னிறைவு அரிசியில் மாத்திரமே எட்டப்பட்டது.

இது எதனை குறித்துக் காட்டுகின்றது என சிந்தியுங்கள்: தற்பொழுது உயிருடன் உள்ள ஒவ்வொருவரும் (வாழ்ந்த ஒவ்வொருவரும்) நாம் மூடிய பொருளாதாரத்தை கொண்டிருந்த போதும் (1977 இற்கு முன்னர்) அல்லது திறந்த தாராளவாத பொருளாதாரத்தை கொண்டிருந்த போதும் (1977 இற்கு பின்னர்) இறக்குமதி செய்யப்பட்ட உணவை உட்கொண்டுள்ளோம். நாம் ஒரு போதும் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்கவில்லை. அவ்வாறான ஒரு காலப்பகுதி எமது அண்மைய நினைவில் காணப்படவில்லை.

புராதன வரலாறு என்ன சொல்கின்றது?

இலங்கை பல நூற்றாண்டுகளாக விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து வாணிபத்தில் ஈடுபட்டு வந்தது. நாம் அறிந்தது இவ்வளவுதான்: ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியா என்பவற்றின் கடல்வழிப் பாதையில் ஒரு மையமாக இலங்கை காணப்பட்டது.

‘கிழக்கின் தானியக் களஞ்சியம்’ என அறியப்பட்ட இலங்கையில் அரிசி மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஏனைய விவசாயப் பொருட்கள் உள்ளூர் மக்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்பட்டதோடு ஏனைய நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் இலங்கை விவசாயிகள் விலங்குகளின் எச்சங்கள் மற்றும் அறுவடையின் பின் எஞ்சிய தாவரப் பகுதிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தல், சுழற்சி முறைப் பயிர்ச்செய்கை, மாற்றுப் பயிர்ச்செய்கை முறை மற்றும் பயிர்ச்செய்கை பல்வகைமையாக்கம் போன்ற உத்திகளை பயன்படுத்தியதாக நம்பப்படுகின்றது.

இந்த விடயங்கள் இன்னொரு கதையுடனும் இணைத்துக் கூறப்படுகின்றன: மஹா பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இந்த பாரம்பரிய முறைகளின் படி விவசாயம் செய்த இலங்கை தற்போதைய சனத்தொகையை விட அதிகமான சனத்தொகைக்கு உணவு வழங்க முடியுமான நிலையில் காணப்பட்டது என்பதே அக்கதையாகும்.

இங்குதான் விடயங்கள் சிக்கலடைய ஆரம்பிக்கின்றன.

இந்த சனத்தொகையின் எண்ணிக்கையை கணிப்பீடு செய்வது மிகவும் கடினமானது. எனக்கு தெரிந்த வகையில் இந்த எண்ணிக்கைகள் தொடர்பில் ஒழுங்கான பதிவுகள் எதுவும் எம்மிடம் கிடையாது. நாம் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆவணங்கள் (மஹாவம்சம், சூளவம்சம் மற்றும் பூஜாவெலிய போன்றன) மதத் தலங்கள் மற்றும் மத விவகாரங்களில் கவனம் செலுத்துவனவேயன்றி எண்ணிக்கைகளில் கவனம் செலுத்துவன அல்ல. சில எண்ணிக்கைகளை விபரிக்கும் மூன்று வரலாற்று ஏடுகள் தொடர்பில் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு: பராக்கிரமபாகுவின் படையைப் பற்றி எழுதப்பட்ட பூஜாவெலிய மற்றும் நிகாய சங்ராஹய (கி.பி. 1170) மற்றும் ரஜவெலிய (கி.பி. 1300), இவை இலங்கையின் வரலாற்றை புள்ளிவிபரவியலாளர் ஒருவரின் நோக்கில் புரிந்து கொள்ள பயன்படுத்தப்படலாம்.

பராக்கிரமபாகுவின் படைக்கு நாட்டில் உள்ள “100 பேரில் இருந்து 10 பேர்” வீதம் சேர்க்கப்பட்டதாக பூஜாவெலிய கூறுகின்றது. “இருபத்தியொரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டனர்” – 2,125,000 படை வீரர்கள். பூஜாவெலிய ஏட்டின் அதே மூலங்களை பயன்படுத்திய நிகாய சங்கரஹாய ஏடும் இதனை உறுதி செய்கின்றது.

பூஜாவெலிய குறிப்பிடும் சேனையின் எண்ணிக்கை சரியானதென அனுமானித்தோமானால், இலங்கையின் அப்போதைய சனத்தொகை 21.25 மில்லியனாக அமைந்திருக்க வேண்டும் - அது கிட்டத்தட்ட இலங்கையின் தற்போதைய சனத்தொகைக்கு சமனானது. [2]

இங்குள்ள பிரச்சினை இந்த எண்ணிக்கைகள் அக்காலங்களுக்கு சிறிதும் பொருந்தாதனவாக காணப்படுகின்றன. காலவோட்டத்தில் உலகில் காணப்பட்ட மிகப் பெரிய படைச் சேனைகளை இலகுவாக மனக்கண் முன் நிறுத்திய கலைஞர் மார்ட்டின் வார்ஜிக் இன் விடயங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

கிமு 2500 முதல் 2014 வரையிலான மிகப்பெரிய படைகளின் காட்சிப்படுத்தல்.

இந்த இலக்கங்கள் சரியானவை என வைத்துக்கொள்வோம், இதன் பொருள் பராக்கிரமபாகு அக்காலத்தில் திரட்டிய சேனை உரோம சாம்ராஜியத்தின் படை (450,000), செங்கிஸ் கானின் ஒட்டுமொத்த படையணி (900,000) என்பவற்றை விட பெரியதாகவும் சீனாவின் மிங் சாம்ராஜியத்தின் படையை விட இரண்டு மடங்கு அதிகமானதாகவும் (1,300,000) அமைந்திருக்கும்.

இரண்டு மில்லியன் படைவீரர்கள் என்பது எமது காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சாம்ராஜியமான தற்போதைய ஐக்கிய அமெரிக்க படையின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமானதாகும். இது மிகவும் பாரியதொரு எண்ணிக்கையாகும். அதனை அக்காலத்துடன் ஒப்பிடுவது சவாலான விடயமாகும்.

இவ்விடயங்கள் எமக்கு இன்னொரு கேள்வியை எழுப்புகின்றன: இவ்வாறான எண்ணிக்கை கொண்ட படையொன்று இருந்திருந்தால், அந்த படை என்ன செய்தது, அத்துடன் எதை அடைந்தது?

பராக்கிரமபாகுவின் படைகள் பாண்டிய இராஜியத்தைக் கைப்பற்றி சோழர்களின் நாட்டுக்குள் ஆழ ஊடுருவியது. பூஜாவெலிய கூறும் எண்ணிக்கை கிட்டத்தட்டவேனும் சரியாக இருப்பின், அப்போதைய இலங்கைப் படை பண்டைய உலகின் மிகப்பெரும் படைகளில் ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். இந்த இரண்டு மில்லியன் கொண்ட இப்பாரிய படையினால் எட்டப்பட்ட அடைவுகள் மிகவும் சிறியதாக உள்ளமை சிந்திக்க வைக்கும் விடயமாகும். பூஜாவெலிய கூறும் எண்ணிக்கை ஒரளவுக்காவது சரியாக இருப்பின் இலங்கையின் படை பண்டைய உலகின் மிகப் பெரும் படைகளில் ஒன்றாக இருந்திருக்கும்.

உதாரணமாக, சந்திர குப்த மவுராவின் சாம்ராஜியம் இந்திய உப கண்டத்தில் காணப்பட்ட ஆகப்பெரிய அரசியல் கட்டமைப்பாகக் காணப்பட்டது - இது பிரித்தானிய சாம்ராஜியத்தை விடவும் பெரியதாக இருந்தது. கிரேக்க வரலாற்றாசிரியரும் சில வேளைகளில் இந்திய இனப் பரம்பல் ஆய்வாளருமான மெகஸ்தேன்ஸ் மற்றும் உரோம எழுத்தாளரும் இராணுவத் தளபதியுமான பிலினி ஆகியோர் சந்திரகுப்தாவின் காலாட்படையின் எண்ணிக்கையை 600,000 எனக் குறிப்பிடுகின்றனர். பில்னி இதனுடன் 30,000 துணைப் படை வீரர்களையும் 9,000 யானைகளையும் இணைத்துக் குறிப்பிடுகின்றார் [3]. பண்டைய உலகில் திரட்டப்பட்ட மிகப்பெரிய படையாக இதனையே மெகேஸ்தேன்ஸ் குறிப்பிடுகின்றார்.

உரோம சாம்ராஜியம் 450,000 இராணுவ வீரர்களால் கட்டியெழுப்பப்பட்டது. பாரிய படையொன்றின் மூலம் மங்கோலியர்கள் சீனாவை அச்சுறுத்தினர், விண்வெளியில் இருந்தும் காணக் கூடிய சீனப் பெருஞ்சுவர் இக்கால கட்டத்தில் சீனர்களால் கட்டப்பட்டது. 103 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்த சாம்ராஜியத்தினால் 1.3 மில்லியன் எண்ணிக்கை கொண்ட மிங் இராணுவம் கட்டியெழுப்பப்பட்டது. இவ்வாறான நிலையில் 2 மில்லியன் எண்ணிக்கை கொண்ட இலங்கை இராணுவம் ஒன்று காணப்பட்டிருந்தால் அதுவே மிகப்பெரிய இராணுவமாக அமைந்து அனைத்து இராணுவங்களின் சாதனைகளையும் முறியடித்திருக்க வேண்டும். இருந்த போதும் இறுதியில் இலங்கை மேற்கொண்ட படையெடுப்புகள் தோல்வியில் முடிந்ததுடன் [4] பராக்கிரமபாகுவுக்கு பின்னரான இலங்கையின் கதை அழிவு மற்றும் வீழ்ச்சிமிக்கதாகக் காணப்பட்டது.

இந்த புராணங்களின் எழுத்தாளர்கள் புள்ளிவிபரவியலாளர்கள் அன்றி கதை சொல்வோராகவே இருந்துள்ளனர் என்பதையும் அவர்கள் விடயங்களை மிகைப்படுத்திக் கூறியுள்ளதையும் இலகுவாகவே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆரம்ப வரலாற்றாசிரியர்களும் இதனை அநேகமாக மேற்கொண்டுள்ளனர். நிச்சயமாக, இதனை பிலினியும் செய்துள்ளார் [5]. அவர்கள் இதனை கண்டிப்பாக செய்திருப்பர் என அனுமானிக்க முடிவதால் இலங்கையின் சனத்தொகை அப்போது 21.25 மில்லியன்களாக இருந்திருக்கின்றது என்பது பிழையான ஒரு கணிப்பீடு என எம்மால் இலகுவாக ஊகிக்க முடியும்.

ஏதோ சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக எமது சனத்தொகை புராணங்கள் குறிப்பிடுவது போன்றே இருந்தது என நாம் வைத்துக் கொள்வோம், இந்தியாவில் அப்போது இருந்த மிகப்பெரிய சாம்ராஜியத்தின் சனத்தொகைக்கு கிட்டத்தட்ட சமனாகக் காணப்பட்ட இந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது?

கி.பி. 1000 ஆம் ஆண்டுக்கு முன்னரான சனத்தொகைக் கணிப்பீடுகள் எவற்றையும் காண முடியவில்லை. அவகோவின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பொருளாதாரப் புள்ளிவிபரவியல் [6] பின்வரும் சனத்தொகைக் கணிப்பீடுகளை எமக்கு வழங்குகின்றது: சொங் சீன இராச்சியம் 80 மில்லியன் மக்கள் தொகை கொண்டது, சோழ இராச்சியம் 27 தொடக்கம் 28 மில்லியன் மக்கள் தொகை மிக்கதாக இருந்தது, புனித உரோம இராச்சியம் மற்றும் கிழக்கு உரோம இராச்சியம் ஆகிய இரண்டினதும் ஒட்டுமொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 24 மில்லியன்களாக இருந்தது. கி.பி. 1500 களில் சீனாவின் மிங் இராச்சியம் 103 மில்லியன் மக்கள் கொண்டதாக இருந்தது, புனித உரோம இராச்சியம் 23 மில்லியன் சனத்தொகை உள்ளதாகக் காணப்பட்டது, டெல்லி சுல்தான் இராச்சியம் மற்றும் மாலி இராச்சியம் என்பவற்றின் ஒன்று கூட்டப்பட்ட சனத்தொகை 20 மில்லியன் மக்கள் என்ற அளவில் காணப்பட்டது.

இலங்கையின் புராணங்களில் கூறப்படும் பராக்கிரமபாகு கால சனத்தொகையை நோக்கும் போது அது உரோம சாம்ராஜியத்துடன் போட்டியிடப் போதுமானதாக இருந்திருக்க வேண்டும். வியாபாரம் மட்டுமன்றி அனைத்திலும் நாம் வியாபித்திருந்திருக்க வேண்டும் - நாம் உலகின் பல பகுதிகளை எமது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும். நாம் வரலாறு, கலை மற்றும் சிந்தனை என்பவற்றில் ஆதிக்கம் செலுத்தியிருந்திருக்க வேண்டும். இலத்தீன் மொழி போன்று சிங்கள மொழி எங்கும் பரவிக் காணப்பட்டிருக்க வேண்டும். புராதன காலத்தில் எமது ‘சந்திரவட்டக் கல்’ பரவிக் காணப்பட்டிருக்க வேண்டும்.

பொலன்னறுவை இராச்சியத்தின் சின்னமான சந்தகட பஹானா (சந்திரவட்டக் கல்). மூலம் : விக்கிமீடியா காமன்ஸ்.

மேலும், சனத்தொகைக் கணக்கெடுப்புகள் தீவிரமாக 1871 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, எமது சனத்தொகை 2.4 மில்லியன்களாகக் காணப்பட்டது. CICRED (தேசிய சனத்தொகை ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச ஒத்துழைப்புக் குழு) இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வழங்கும் ஆவணம் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் சனத்தொகை தொடர்பான பின்வரும் விபரங்களை வழங்குகின்றது:

Table showing the population counts of Sri Lanka from 1871 (2.4 million) to 1971 (12.7 million)

புராணங்கள் கூறும் சனத்தொகைக் கதைகளை கருதும் போது எமது ஆரம்ப சனத்தொகையான 21.25 மில்லியன் 500 வருடங்களில் பத்தில் ஒரு மடங்காக சுருங்கியிருக்க வேண்டும்.

இன்னும் இலகுவாகக் கூறுவதாயின், எமக்கு தெரிந்தவர்களில் பத்தில் எட்டுப் பேர் மரணித்திருக்க வேண்டும்.

எனவே, இங்கு பின்வரும் இரண்டு விடயங்களில் ஒன்று நடந்திருக்க வேண்டும்:

அ) எமது புராணங்களில் குறிப்பிடப்படும் சனத்தொகை அளவுகள் மிகவும் மிகைப்படுத்தி கூறப்பட்டிருக்க வேண்டும், அல்லது, ஆ) காலனித்துவத்துக்கு முன்னர் இலங்கை தனது சனத்தொகையை தக்க வைப்பதில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது எமது கைகளாலேயே எமது சனத்தொகை அழிக்கப்பட்டுள்ளது. 500 வருடங்கள் இடம்பெற்ற இப்பேரழிவு நமது கவனத்தை மீறிச் செல்வதற்கு வாய்ப்பில்லை.

பராக்கிரமபாகுவின் காலத்தில் பொலன்னறுவையின் சனத்தொகை மூன்று மில்லியன்களாக இருந்திருக்க வேண்டும் என சேர் எமர்சன் மதிப்பிட்டுள்ளார். சில வரலாற்றாசிரியர்கள் இத்தொகை ஒரு மிகைக் கணிப்பீடு என எண்ணுகின்றனர் [6], அவ்வாறிருந்தும் அது நவீன கால இலங்கையின் சனத்தொகைக்கு நெருங்கியதாகக் காணப்படுகின்றது.

இது விவசாயத்துக்கு என்ன பொருள் கோடலை அளிக்கின்றது?

இது தொடர்பான உரையாடலுக்கு காணப்படுகின்ற சான்றுகள் மிகவும் நலிவானவை அல்லது அவ்வாறான சான்றுகள் இல்லை எனக் கூற முடியும்.

நாம் உரங்கள் தொடர்பான தொடர் கட்டுரை ஒன்றை தயாரித்து வருகின்றோம், அந்த தலைப்பு இவ்விடயத்துடன் மிகவும் நெருக்கமானதாக அமையும், எனினும் நாம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை நோக்குவோம். புராதன கால விவசாயிகள் சேதன விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்களால் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களை உயிர்வாழ வைக்க முடிந்தது. எவ்வாறாயினும், அவ்வாறான நடவடிக்கைகள் நவீன இலங்கையின் தேவையை பூர்த்தி செய்யும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எமது தேவைகள் மிகவும் அதிகமானவை. பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் அரசியல் உரையாடல்களுக்கு மத்தியிலும் இப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

பல வகையான விவசாய நடவடிக்கைகளுக்கு இலங்கை மிகவும் பொருத்தமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும், புராண கால விடயங்கள் எமது சமகால பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தனவா? – அது ஒரு கதை மாத்திரமே. ஈடன் தோட்டம் போன்ற கதையே அது. எம்மை பெருமையடைய வைக்கும் கதை அது, எனினும் அது தற்காலத்துக்கும் பிரயோகம் மிக்கது எனப் பொருள் கொள்ள முடியாது.

புராதன இராச்சியம் ஒன்றின் உத்திகள் நவீன கால பொருளாதாரம் ஒன்றுடன் எவ்வாறு பொருத்தி நோக்கப்படலாம் என்பதற்கான அதிக தரவுகள் எம்மிடம் இல்லை. அரசியல் பேச்சுக்கள் மற்றும் சில எழுத்தாளர்களின் (எனது உட்பட) ஆக்கங்கள் இவ்விடயத்தில் போதியன அல்ல.

உலகளாவிய ரீதியில், பண்டைய கால முறைகளின் பிரயோகம் மண்ணில் உள்ள நைதரசனின் அளவினால் மட்டுப்படுத்தப்படுகின்றன. சனத்தொகை வளர்ச்சியடையும் வேளை விவசாய நில அளவுகள் மற்றும் தொழிலாளர்களை பாரிய அளவுகளில் அதிகரிக்காமல் சனத்தொகையின் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியாது. இந்த முறைமைகள் ஈட்டிகள் மற்றும் அரசர்களின் காலத்துக்கு மாத்திரமே பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அக்காலத்தின் பொருளாதாரம் “ராஜ சேவை” (பொது வேலைகளை உடலால் செய்ய மக்களுக்கு கட்டளையிடும் அதிகாரம்) என்பதால் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அவ்வாறான கட்டளை மூலம் சனத்தொகையின் பெரும் பகுதி வயல்களில் வேலை செய்ய வைக்கப்பட்டிருக்கலாம்.

புராண கால இலங்கையின் சனத்தொகை பிரிவுகள் தொடர்பான துல்லியமான தரவுகள் எம்மிடம் இல்லாத அதே வேளை, அக்காலத்தில் வழக்கறிஞர்கள், மென்பொருள் பொருளியலாளர்கள், வாண்மை மிகு கணக்காளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் அழைப்பு மைய பணியாளர்கள் போன்ற எண்ணிலடங்கா தொழிற் பிரிவுகள் கொண்ட நவீன பொருளாதார கட்டமைப்பு அக்காலத்தில் இயங்கியிருக்க சாத்தியம் இல்லை. அவ்வாறான வெற்றிகரமான நாட்களை எண்ணி வியக்கும் எமக்கு இவ்வாறான பல துறைகள் காணப்படின் அத்துறைகளில் உள்ளோரின் வகிபாகங்கள் எவ்வாறிருக்கும் எனப் புரிந்து கொள்ள முடியாது [8].

நானும் கதைகளை கேட்க விரும்பும் ஒருவன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். நாம் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் அல்ல மாறாக நாம் கதை சொல்லும் ஹோமோ நரேட்டர் என்பதே எனது தனிப்பட்ட நம்பிக்கை. கதைகளே எம்மை இடையீடுகளை மேற்கொள்ள வைக்கின்றன, அவையே எம்மை ஒன்றிணைத்து வர்த்தகங்களை மேற்கொள்ள, இராச்சியங்களை உருவாக்க, மதங்களை உருவாக்க உதவுவதுடன் அவை வரலாற்றுக்கான விடயங்களையும் தருகின்றன. எனினும் சில நிலைகளில் நாம் விடயங்களை கணிதத்தின் மூலம் விளங்க வேண்டும். இந்த அனைத்து கதைகளையும் நோக்கி நாம் பின்வரும் கேள்வியை கேட்க வேண்டும்.

ஆனால், அது எப்படி?

இந்த ஆக்கத்திற்கான தரவுகள்

Rice imports by year, Sri Lanka, 1960-2021

Wheat imports by year, Sri Lanka, 1960-2021

CICRED 1974 monograph on Sri Lanka.pdf 6291125

[1] நான் USDA ஐப் பயன்படுத்தினேன், ஏனெனில் இந்தத் தரவு இலங்கை அரசாங்க நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டாலும், இலங்கையின் ஆதாரங்கள் PDFகளில் அணுகமுடியாதவாறுள்ளன, அவற்றை அட்டவணை வடிவத்தில் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு அதிக பிரயத்தனம் தேவைப்படும். இந்த வகையான சுருக்கமான கண்ணோட்டத்திற்கு USDA தரவு மிகவும் வசதியானது. USDA அறிக்கைகளை நோக்கும்போது, அவர்கள் இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களம் போன்ற நிறுவனங்களை நம்பியிருக்கிறார்கள், அமெரிக்க வெளிநாட்டு விவசாய சேவை (FAS)யின் கொழும்பு கிளை (புது டெல்லியிலிருந்து இயங்குகிறது) தொகுப்புகள் மற்றும் அறிக்கைகளை வழங்குகிறது.

[2] இந்த கணக்கீடு மிகவும் பொதுவான ஒன்றாகும், இது பெரும்பாலும் அனைத்து வகையான விசித்திரமான கூற்றுகளையும் நியாயப்படுத்த பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிங்களநெட்டில் “தமிழ் இனப்படுகொலை” மூலம் தமிழர் சனத்தொகையை அதிகரிக்கச் செய்யும் உலகின் ஒரே நாடு இலங்கை!” என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைக் கவனியுங்கள். அல்லது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த அண்மைய ஆய்வறிக்கை, அதே நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள்தொகையைக் கணக்கிடுகிறது மற்றும் இலங்கை ஒரு கட்டத்தில் 5 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருநததாக கூறுகிறது.

[3] Mookerji, R. (1966). Chandragupta Maurya and his times. Motilal Banarsidass

[4] Mendis, G. C. (1996). The Early History of Ceylon and Its Relations with India and Other Foreign Countries. Asian Educational Services.

[5] Carrier, R. (2017). The scientist in the early roman empire. Pitchstone Publishing (US&CA).

[6] Avakov, A. V. (2010). Two Thousand Years of Economic Statistics: World Population, GDP and PPP. Algora Publishing

[7] Ross, R. R., Savada, A. M., & Nyrop, R. F. (1990). Sri Lanka, a country study.

[8] இது என்னுடைய யூகம்தான், ஆனால் நான் இந்தக் கட்டுரையை (நான் ஒரு துறவியாகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தாலன்றி) எழுத மாட்டேன். இதைப் படிக்க உங்களுக்கு நிச்சயமாக நேரம் இருக்காது. நாங்கள் இருவரும் வயல் வெளியில் ஒரு மண்வெட்டிக்காக சண்டையிட்டுக் கொள்வோம்.