ஊழல், மோசமான கொள்கைகள், பேராசை மிக்க அரசியல்வாதிகள் மற்றும் தவறான முகாமைத்துவம் காரணமாக, இலங்கை தனது சுதந்திரத்திற்கு பின் முகங்கொடுக்கப் போகும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில், அதன் மக்கள் மத்தியிலிருந்து தமது (முன்னாள்) ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவினை நோக்கி எழுப்பப்பட்ட ஒரேயொரு கோசம் தனது பதவியினை விட்டு அவர் விலகவேண்டும் என்பது மாத்திரமே. இந்தக் கட்டுரையில், போராட்டங்களின் தொடக்கம், நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி, மற்றும் இவற்றின் விளைவுகள் பற்றியும் ஆராயவுள்ளோம்.
அரசின் தோல்விக்கு காரணம் என்ன?
பரவிய போராட்டங்களும் ‘கோட்டாகோகம’வும்
ஜனாதிபதி செயலகத்துள் நுழைந்த மக்கள்
போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
வரிசைகளிலும் போராட்டங்களிலும் உயிரிழந்தோர்
- தவறான கொள்கை முடிவுகள், மக்களால் போரின் கதாநாயகன் என போற்றப்படும் நிலையிலிருந்த கோத்தபாய ராஜபக்சவினை இலங்கை வரலாற்றில் மோசமாக வெறுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன.
- பதிவு செய்யப்பட்ட முதலாவது மக்கள் போராட்டம் மார்ச் மாதத்தில் சாலையோர விழிப்புணர்வு போராட்டமாக தொடங்கியது. இது கொஞ்சம் கொஞ்சமாக பல பெரிய ஆரவாரமான போராட்டங்களாக விரிவடைந்தது.
- இக்காலப்பகுதியில் வரிசைகளில் நின்ற சோர்வு காரணமாகவும் பொலிஸ் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் காரணமாகவும் அண்ணளவாக 35 பேர் உயிரிழந்தனர்.
- அதே நேரத்தில் மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவழித்து கோத்தபாய நாட்டை விட்டு தப்பியோடினார்.
2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியான போது, அவருக்கு வாக்களித்த 6.9 மில்லியன் இலங்கையர்களும் ஓர் ஒழுக்கமான சமுதாயத்தை கனவு கண்டனர். பசுமையான, மிகச்சிறந்த, மற்றும் உயிர்ப்பான நாட்டினை அவர் வாக்குறுதியளித்த போது, அது தொடர்பில் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தமது ஐயங்களை எழுப்பியிருந்த போதிலும், மக்கள் அவரது வாக்குறுதியை முழுமையாக நம்பினர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகால அடக்குமுறைகளை கண்டிருந்த மக்கள், தொடக்கத்தில் இந்த புதிய ராஜபக்சவின் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்ய முடியுமா என்ற குழப்பத்திலேயே இருந்தனர். எவ்வாறாயினும், வரிச்சலுகைகள், சம்பள நிலுவைகள், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இராணுவமயமாக்கும் சட்டம் மற்றும் இரவோடிரவாக முன்னெடுக்கப்பட்ட இரசாயன உரத்தடை போன்ற படுதோல்வியடைந்த நாட்டை சமூக-பொருளாதார சீரழிவினை நோக்கி நகர்த்திய பல்வேறுபட்ட கொள்கை முடிவுகள் என்பன, 2020 இன் தொடக்கத்தில் விவசாயிகள், வணிக சங்கங்கள் மற்றும் உழைக்கும் மக்களை தெருவில் இறங்கி போராட வைத்தன.
தொடக்கத்தில் பெருந்தொற்றினை அரசு சாக்காக கூறிவந்தது. 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் ஏற்பட்ட பெருஞ்சீற்றங்களின் மத்தியில் ஆட்சிக்கு வந்த கோத்தாபய தனது ஆட்சிக்காலத்தில் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவர் தனது ஆட்சியின் முதலிரு வருடங்களில் பயங்கரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வரவும் (இறுதிவரை சாத்தியப்படவில்லை) பின் வந்த வருடங்களில் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார அழிவுடன் போராடவுமே சரியாக இருந்தது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மீதிருந்த நம்பிக்கை மேலும் விரைவாக குறைய தொடங்கியது. பணம், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவை விரைவாக குறையக்குறைய மக்களின் கவலை கூடத்தொடங்கியது. விலை உயர்வுகள், மின் வெட்டுகள், பல கிலோமீற்றர்கள் நீடித்த வரிசைகள் கூடக்கூட இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.
அரசு மீதான மக்களின் கோபம் அரகலய எனும் மக்கள் போராட்டத்தின் பிறப்புக்கு வழிகோலியது.
அரசின் தோல்விக்கு காரணம் என்ன?
எளிமையாக சொல்வதென்றால், ராஜபக்சாக்கள் அதிகமான வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவற்றில் மிக குறைவானவற்றையே நிறைவேற்றினர். நாம் முன்பே குறிப்பிட்டது போல, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காட்டியே கோத்தபாய ஆட்சிக்கு வந்திருந்ததோடு, பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அனைவருக்குமான ஆட்சிக்கான பத்து கொள்கைகள் என தலைப்பிடப்பட்ட அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது கொள்கையே ‘தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கல்’ என்பதுதான்.
தெளிவான வெளிநாட்டுக்கொள்கை, ஊழலற்ற அரச நிர்வாகம், மனித வளப்பெருக்கம், மக்கள் மைய பொருளாதாரம், தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட சமூகம், பௌதீக அபிவிருத்தி, நிலைபேறான சுற்றுச்சூழலுடன் கூடிய அபிவிருத்தி, சட்டபூர்வமான, ஒழுக்கமான, நேர்மையான மற்றும் பாகுபாடற்ற சமூகத்துக்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியனவே ஏனைய ஒன்பதுமாகும். இது பார்க்க இலட்சிய பூர்வமானதாக தோன்றினும் தெளிவற்றதொரு தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி ‘‘செழிப்புக்கும் சிறப்புக்குமான தூரநோக்கு’’ நடவடிக்கையாக கோத்தபாய இரவோடிரவாக இரசாயன உரங்களை 2021 இல் தடைசெய்தார். இதன் விளைவாக நாடு முழுவதும் உணவுப்பற்றாக்குறையும் பயிரிழப்புகளும் ஏற்பட்டன.
மோசமான நிர்வாக முடிவுகள் காரணமாக நெருக்கடிகள் ஒன்றின் மேல் ஒன்றாக குவிந்து கொண்டேயிருந்தன. மோசமான பொருளாதார கொள்கைகள் காரணமாக, மின்வெட்டுகள் தொடர்கதையாகின, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சந்தொட்டன, நாடு எரிபொருள் மற்றும் மருத்துவ நெருக்கடிக்குட்பட்டது.
இம்முடிவுகளுக்கு பங்காளர்களாக இருந்த ஆலோசகர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு சிறந்த உதாரணம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால். அவர்தான் இலங்கைக்கு ஒரு சிக்கலும் இல்லை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் தேவையில்லை, அதற்கு பதில் சீனாவின் கடனுதவியை நாடுவோம் என வலியுறுத்தியிருந்தார்.
அரசின் மோசமான முடிவுகளும் பிரச்சினைகள் ஏதுமில்லை என்ற அரசின் மறுப்புகளும்தான் நம்மை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளன.
மக்களின் பொறுமை ஒரு கட்டத்தில் எல்லை மீறியது.
பரவிய போராட்டங்களும் ‘கோட்டாகோகம’வும்
முதலாவது பதிவு செய்யப்பட்ட மக்கள் போராட்டம் 2022 மார்ச் மாதம் முதலாந்திகதி கொஹுவெல சந்தியில் தொடங்கியது. மின்வெட்டுக்கள் ஒரு நாளுக்கு எட்டு மணிநேரத்துக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கிய அவ்வேளையில் ஒரு சிறு மக்கள் கூட்டத்தினர் மெழுகுவர்த்திகளுடனும் பதாகைகளுடனும் ஒன்று கூடி மௌன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நீண்ட நெடிய மின்வெட்டுகள் வழமையானவையாக மாற மாற, மெழுகுவர்த்திகள் ஏந்திய விழிப்புணர்வு போராட்டங்களும் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் அதிகரிக்கத்தொடங்கின. இந்த போராட்டங்கள் அனைத்தும் தன்னிச்சையானவை, பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த மக்களால் ஒருங்கிணைக்கப்பட்டவை. அவற்றில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பங்களிப்பும் இருந்தன. இப்போராட்டங்கள் பற்றிய செய்திகள் முகநூல் பதிவுகளாகவும் வாட்சப் செய்திகளாகவும் பரவி பாரிய மக்கள் கூட்டத்தை போராட்டத்தை நோக்கி கவர்ந்திழுத்தன.
போராட்டங்கள் பெருகத்தொடங்கியவுடன், அரசியல்வாதிகளும் அவற்றில் கலந்து கொண்டனர். பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மார்ச் 15 ஆந்திகதி கொழும்பில் ஒரு போராட்டத்தை தலைமையேற்று நடாத்தியது.
அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக போராட்டங்களும் காட்டுத்தீயாய் பரவத்தொடங்கின. நாடு முழுவதும் போராட்டங்கள் எவ்வாறு பரவின என்பதை இச்சுட்டியில் நீங்கள் காணலாம். ஏப்ரல் மாதம் மாத்திரம் 400க்கும் அதிகமான போராட்டங்களை எம்மால் கண்டறியக்கூடியதாயிருந்தது.
எதுவித தீர்வுகளும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியாததன் காரணமாக, மார்ச் மாதம் 31 ஆந்திகதி கோத்தபாயவின் மிரிஹான வீட்டின் வெளியே போராட்டக்காரர்கள் ஒன்று கூடினர். சற்று நேரத்திலேயே நிலைமை கட்டுக்கடங்காது போய், போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்குள்ளே நுழைய முற்பட்டதால், பொலிசாரும் இராணுவத்தினரும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், கணிசமானோர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் முதலாந்திகதி 300 க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் அவர்களை விடுதலை செய்ய முன்னிலையாகினர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) போராட்டக்காரர்களுடன் தோளோடு தோள் நின்று போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரிக்க கோரியும், சட்டவிரோதமான ஊரடங்கு ஆணைகளுக்கு எதிராகவும் போராடியது.
அவ்வேளையில் அரசாங்கம் பெருகிவரும் போராட்டங்களை கட்டுப்படுத்த எண்ணி அவசரநிலை பிரகடமொன்றை மேற்கொண்டு ஊரடங்குகளையும் பிறப்பித்தது. இதன் விளைவாக மக்கள் பொருட்களை பதற்றத்துடன் மேலதிகமாக கொள்வனவு செய்ய தொடங்கியதுடன், எரிபொருள் வரிசைகளிலும் நிற்க தொடங்கினர். ஏப்ரல் 3 ஆந்திகதி நடக்கவிருந்த நாடு தழுவிய மக்கள் ஒன்றுகூடலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் காலி முகத்திடலும் சுற்றி வளைக்கப்பட்டது. இது நடந்து ஒரு கிழமையின் பின் காலிமுகத்திடலில் போராடுவதற்கென கோத்தபாயவே ஒதுக்கி கொடுத்த ஒரு பகுதியில் ‘கோட்டாகோகம’ என்ற பெயரில் ஊரொன்று முளைத்தது.
ஏப்ரல் 9 ஆந்திகதி முதல் போராட்டக்காரர்கள் களத்தில் தனித்தனி நிலையங்களை அமைக்கத் தொடங்கினர். இளைஞர்களுக்கான கூடாரம், புதுமை பாலினத்தாருக்கான கூடாரம், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான கூடாரம், சுகாதார கூடாரம், சமூக சமையலறை, ஊடக மையக்கூடாரம் என பல நிலையங்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றையெல்லாம் தொடர்ந்து இதே போன்று ‘மைனா கோ கம’ என்ற பெயரில் இன்னொரு ஊரொன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பு அவரையும் பதவி விலகக்கோரி அமைக்கப்பட்டது.
போராட்டக் குரல்கள்
கோட்டகோகம வெவ்வேறுபட்ட குழுக்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்தது. வெவ்வேறு அரசியல் கொள்கைகள், பின்புலங்களைச் சேர்ந்த மக்களை ஒரே கோரிக்கையின் பின்னால் அணிவகுக்க வைத்தது. அதுதான், கோத்தபாய ராஜபக்சவின் பதவி விலகலும், ராஜபக்சாக்களின் பொறுப்புக்கூறலுமாகும்.
ஒன்றிணைந்த குழுக்கள்
விவசாயிகள் - சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் - தகவல் தொழிநுட்ப துறையினர் - காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் - மலையகத்தமிழர் - வடக்கு கிழக்கு மக்கள் - மாணவர்குழுக்கள் - ஆசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசிரியர்கள் - கலைஞர்கள் - பெண்ணுரிமை குழுக்கள் - பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் குடும்பங்கள் - பௌத்த குருமார்கள் - கிறிஸ்தவ குருமார்கள் - அங்கவீனமான இராணுவத்தினர் - இளைஞர் குழுக்கள் - ஊடகவியலாளர்கள் - வர்த்தக சங்கங்கள் - மற்றும் எந்தக்குழுக்களோடும் தொடர்பில்லாத ஆனால் பொருளாதர நெருக்கடியால் கடின சூழ்நிலையை எதிர்கொள்ளும் தனிநபர்களும் குடும்பத்தினரும்
பொருளாதார நெருக்கடி இந்த போராட்டங்களை உண்டாக்கியிருந்த போதிலும், இதன் பலனாக பலருக்கும் தாங்கள் நீண்ட காலமாய் தேக்கி வைத்திருக்கும் கவலைகளை மக்கள்முன் வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்:
- கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் போரின் இறுதிக்கட்டத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கான நீதி.
- ராஜபக்சாக்களின் ஆணையின்படி கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான நீதி.
- அப்பாவி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை குறிவைக்க பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை திரும்பப்பெறல்.
எவ்வாறாயினும், ராஜபக்ச அரசுக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் மாத்திரம் அல்லாது அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்யும் குழுக்களும் இருந்தன. அவர்கள் கண்டி, தங்காலை, மொனராகல, அநுராதபுரம், மற்றும் கொழும்பில் இவ் ஆதரவு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். கோத்தபாயவுக்கு ஆதரவான போராட்டக்காரர் ஒருவர் கோட்டாகோகமவில் வடையினை விற்றுக்கொண்டிருந்ததை அடையாளம் கண்டு அவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் உணவில் நஞ்சினை கலந்து விடக்கூடும் எனக்கூறப்பட்டு அவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மேலும், தொடக்கத்தில் பல பிரபலங்களும் ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டிருந்த போதிலும் பின்பு வெளிப்படையாகவே மறுபக்கம் தாவியிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்துள் நுழைந்த மக்கள்
போராட்டங்கள் எண்ணிக்கையிலும் வீரியத்திலும் அதிகரித்து வந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி, பொருளாதர நெருக்கடியில் தனது பங்கினை தொடர்ந்தும் மறுத்து வந்தார்.
அத்துடன் போராட்டங்கள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, அனைத்தையும் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைத்து விட்டு அவர் அமைதியாக இருந்தார். மிரிஹானையிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடந்த போராட்டத்தை கோத்தபாய ஒரு போதும் குறிப்பிடவேயில்லை. ஜூலை ஒன்பதாந்திகதி அப்போராட்டம் வன்முறையாக மாறியபோது அவர் எங்கிருந்தார் என்றும் தெரியவில்லை. மே மற்றும் ஜுனில் மகிந்த மற்றும் பசில் தமது பொறுப்புகளில் இருந்து விலகிய போதும், கோத்தபாய தான் பதவி விலக மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஜூலை ஒன்பதாந்திகதி, பாரிய நடைபயணமொன்று தொடங்கியது. அது கோட்டாகோகமவில் உள்ள மக்களுடன் ஒன்றிணைந்தது. பல்வேறுபட்ட பின்னணிகளை கொண்ட மக்கள் அனைவரும் கொழும்பினுள் நுழையத்தொடங்கினர். - ‘‘கோட்டா கோ ஹோம்’’ என கோசமிட்டபடி வந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைமையிலான பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கி…
… தமது குடும்பத்தினருடன் உழவியந்திரத்தில் வந்த விவசாயிகள் வரை அனைவரும் இதில் அடக்கம். அவர்களது அணிவகுப்பு ரத்மலானையில் தொடங்கி கொழும்பு கோட்டை வரை நீண்டிருந்தது.
https://twitter.com/yudhanjaya/status/1545678027262238720
சிறிது நேரத்தினுள், மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைந்து இலங்கையில் ‘பாஸ்டில் சிறை தகர்ப்பு’ போன்ற ஒரு புரட்சிகர நிகழ்வை நிகழ்த்தியிருந்தது.
https://twitter.com/JDSLanka/status/1545709844220485634
அதே நேரத்தில், ஜனாதிபதி மாளிகையும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த கைவிடப்பட்ட உள்ளாடை தொடங்கி அலுமாரியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய் பணம் வரை அனைத்தும் அவர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டது. பலரும் இவ்வெற்றியை மாளிகையின் நீச்சல் தடாகத்தில் பாய்ந்து குளித்தல், அங்கிருந்த பூங்காக்களை சுற்றிப்பார்த்தல் போன்ற செயல்கள் மூலம் கொண்டாடித் தீர்த்தனர்.
இவையெல்லாம் நடக்க சற்று முன்னர்தான் கோத்தபாய தப்பித்து சென்றிருக்கிறார். பல வதந்திகளுக்கு மத்தியில் அவரது உண்மையான பயண விபரம் இதோ:
- 13 ஜூலை: இராணுவ ஜெட் விமானமொன்றில் மாலைதீவுக்கு தப்பிக்கிறார்.
- 14 ஜூலை: சிங்கப்பூருக்கு செல்கிறார். பின்பு அதே நாளில் பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறார்.
- 11 ஆகஸ்ட்: தாய்லாந்துக்கு செல்கிறார். இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளதன் காரணமாக கோத்தபாயவினால் 90 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
- 02 செப்டம்பர்: இலங்கை திரும்புகிறார். மொத்த பயண செலவு பல நூறு மில்லியன்களாக அதிகரிக்கிறது.
சுருக்கமான காலவரிசை
போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள்
மே ஒன்பதாந்திகதி பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களின் தாக்குதல்களின் பின்பு காலி முகத்திடல் மற்றும் ஏனைய இடங்களில் ராஜபக்சாக்களுக்கு எதிரான போராட்டக்காரர்களின் மீதான விசாரணைகள் மற்றும் பயமுறுத்தல்கள் அதிகரிக்க தொடங்கின.
மே பத்தாந்திகதி இராணுவத்துக்கு கண்டவுடன் சுடும் அதிகாரம் வழங்கப்பட்டதன் பின் உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் பெருஞ்சீற்றம் உண்டாகியது. முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க இது நடந்து ஒரு கிழமையின் பின்பு பாராளுமன்றில் வைத்து இதனை மறுத்திருந்தார்.
அடுத்தடுத்த கிழமைகளில், நாடு முழுதுமிருந்த கோட்டா கோ கமவின் சிறு சிறு கிளைகளின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த இடங்களில் வைத்து புலனாய்வு பிரிவினராலும் பொலிசாராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏனையோர் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜூலை மாதமளவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரது இருப்பிடங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு அதன் விளைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையானதன் பின்னர், ஒடுக்குமுறைகள் சடுதியாக தீவிரத்தன்மையிலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்க தொடங்கின.
“இலங்கையின் புதிய அரசு தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் மூலம் போராட்டக்காரர்களை பணிய வைக்க முனைவதன் மூலம், மாற்று கருத்துகளுக்கு இங்கு இடமில்லை என்பதை இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்துகிறது.” யாமின் மிஷ்ரா, தெற்காசிய பிராந்திய ஆணையாளர், சர்வதேச மன்னிப்பு சபை
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள், ஆயுதம் ஏந்திய படையினர் காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தினை அகற்ற அணிவகுத்து சென்றனர். 22 ஜூலை அதிகாலை 2 மணியளவில், இலங்கை இராணுவமும் ஏனைய அரச சார்பு பாதுகாப்பு பிரிவினரும் ஜனாதிபதி செயலகத்துக்கும் பாலதக்ஷ மாவத்தைக்கும் இடைப்பட்ட இடத்திலிருந்த கூடாரங்களை அழிப்பதை அங்கு தங்கியிருந்தோர் காணொளிகளாக பதிவு செய்தனர். மேலும், படையினர் பல போராட்டக்காரர்களை தாக்கியதுடன் சிறைப்படுத்தவும் செய்தனர். இவையெல்லாம், புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் காரணமாக போராட்டக்களத்திலிருந்து தாம் விலகுகிறோம் என போராட்டக்காரர்கள் வாக்குறுதி அளித்த பின்பு இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்படையினர் எதிரிகளுடன் போரிட பயிற்சி பெற்றவர்களே ஒழிய மக்களை ஒழுங்குபடுத்த பயிற்சி பெறவில்லை ஆதலால், பொது மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. Amnesty.org
ஒடுக்கு முறைகள் தொடர்ந்தும் நீடித்தன. ஜனாதிபதி செயலகத்தில் அல்லது அலரி மாளிகையில் மக்கள் ஆக்கிரமித்திருந்த வேளையில் எடுக்கப்பட்ட காணொளிகளில் தென்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் தொடர்பு இருந்ததன் காரணமாக புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட செயற்பாட்டாளர்களுடன் நாம் உரையாடியிருந்தோம். சமூக வலைத்தளங்களிலிருந்து திரட்டப்பட்ட படங்களை தம்மிடம் காட்டி அதிலிருந்த ஏனைய போராட்டக்காரர்களை அடையாளம் காட்டுமாறு அதிகாரிகள் கேட்டதாக அவர்கள் கூறினர்.
அரசின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு முக்கிய இலக்காக இருந்தவர்களுள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆகஸ்ட் 18 ஆந்திகதி இடம்பெற்ற போராட்டமொன்றை தொடர்ந்து மூன்று மாணவ தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை சட்டத்தரணிகள் அணுகுவதை கடினமாக்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் கதிரையில் அமர்ந்தமை, நீச்சல் தடாகத்தில் பாய்ந்தமை, மற்றும் கண்டெடுக்கப்பட்ட பணத்தினை எண்ணி பின்பு பொலிசாரிடம் அதை ஒப்படைத்தமை போன்ற விநோத காரணங்களுக்காகவும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வொடுக்குமுறைகளுக்கு எதிராக இறுதியாக நடந்த சில போராட்டங்களில் பொலிசார் போராட்டக்காரர்களை துரத்திச்சென்று அவர்களை சிறைப்பிடித்தனர். முதலில் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை சிதறடித்து விட்டு அவர்களை சிறு சிறு குழுக்களாக சிறு வீதிகளில் துரத்தி சிறைபிடித்ததை நாம் எம் கண்களால் கண்டோம். கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு பிணை கிடைத்து விட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர்களும் ஏனைய செயற்பாட்டாளர்களும் உள்ளடங்குவர்.
எவ்வாறாயினும், கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீதான தாக்குதல்களை நிகழ்த்திய சந்தேகநபர்களாக சட்டமா அதிபர் திணைக்களம் 04 பாராளுமன்ற உறுப்பினர்களுட்பட்ட 22 பேரை குறிப்பிட்டுள்ள போதும், இது வரை எட்டு பேர் மாத்திரமே சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
வரிசைகளிலும் போராட்டங்களிலும் உயிரிழந்தோர்
- மார்ச் 19 இலிருந்து ஜூலை 29 வரை, எரிபொருளுக்காக வரிசைகளில் நின்ற 19 தொடக்கம் 76 வரையான வயதுள்ள 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மின் வெட்டுகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் இருப்பிடத்துக்கு வெளியே நின்று போராடிய 53 வயதான நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
- மே 9 நடந்த மோதல்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொலிசார் இருவர், பொதுமக்கள் நால்வர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஜூலை 13, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரொருவர், பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே பொலிசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலின் பின் உயிரிழந்தார். பொலிசார் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கூறினர். அவரது இறப்புக்கும் அந்த தகவலுக்கும் ஒரு வித தொடர்பும் இல்லாததால் மக்களிடையை இவ்விடயம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
- ஜூலை 19 அன்று ரம்புக்கணையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உண்டான மோதல்களில் போராட்டக்காரர் ஒருவர் பொலிசாரால் கொல்லப்பட்டார்.
ரணில் தலைமையிலான அரசில், செப்டம்பர் இரண்டாந்திகதி கோத்தபாய இலங்கைக்கு மீண்டும் வரும்போது அவரது ஆதரவாளர்களாலும் பழைய கூட்டாளிகளாலும் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது கட்சியான இலங்கை பொதுஜன பெரமுண கட்சி (SLPP) விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுகையில் அவர்களது பதவி பறிபோன ஜனாதிபதிக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க கோரினர். அதற்கமைய அவருக்கு அப்பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
நாடு திரும்பியதில் இருந்து பொதுமக்கள் பார்வையில் படாது இருந்த கோத்தபாய இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க, முதல் முறையாக பகிரங்க அறிக்கையொன்றை வெளியிட்டார்.
https://twitter.com/GotabayaR/status/1569032669375381509
அடுத்தது என்ன?
தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த பொருட்களின் விலைகளில் ஒரு சமநிலை ஆகஸ்ட் மாதத்தின் பின் தெரிகிறது. பணப்பரிமாற்ற விகிதத்தினை சமநிலைக்கு கொண்டு வந்ததும், வணிகங்களுக்கு கேள்விக்கு ஏற்ப இறக்குமதிக்கு தேவையான வெளிநாட்டு பணத்தினை மத்திய வங்கி வழங்க தொடங்கியதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
செப்டம்பர் தொடக்கத்தில் மேலுமொரு நல்ல செய்தி சர்வதேச நாணய நிதிய கடன் உதவி உறுதி என்ற வடிவில் வந்து சேர்ந்தது. அண்ணளவாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விரிவான கடன் உதவிக்கு ஊழியர் மட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதன் எதிர்காலம் இனி மேல்மட்டத்தின் இசைவு, இலங்கை கடன்களை மீளக்கட்டமைப்பு செய்வதில் காட்டும் முயற்சி, வரி சேகரிப்பு மேம்பாடுகள் மற்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான செயற்பாடுகள் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது.
எவ்வாறாயினும், அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பு காரணமாக மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றபடியால் நாடு இன்னும் நெருக்கடியான சூழ்நிலைக்குள்ளேயே உள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. ‘பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணிகளாக, முந்தைய மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கான பொறிமுறைகள், பொருளாதார குற்றங்கள் மற்றும் புரையோடிப்போன ஊழல் ஆகியன இருக்கின்றன.’
“இலங்கையில் தொடர்ச்சியாக அமைந்த அரசுகள் யாவும், நிலைமாறுகால நீதியினை அடையவும், பாரிய மனித உரிமை மீறல்களையும் முறைகேடுகளையும் நிகழ்த்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கவும் தவறிவிட்டன. உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளுக்கு பதிலாக பொறுப்புக்கூறலுக்கு எதிரான அரசியல் ரீதியான தடைகளை உண்டாக்குவதையும், போர்க்குற்றங்களை நிகழ்த்திய இராணுவ அதிகாரிகளினை அரசின் உயர் மட்ட பதவிகளில் அமர்த்துவதையும் அவை திறம்பட செய்தன.” - ohchr.org
மேலும், செப்டம்பர் 19 அன்று ஹேக் நகரில் அமைந்துள்ள மக்கள் தீர்ப்பாயம், இலங்கை அரசினை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலையில் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது.
நாம் எவ்வாறு முன்னோக்கி செல்வது? இலங்கை பொதுஜன பெரமுனவிடம் திட்டமொன்று இருப்பதாக தெரிகிறது. ராஜபக்சாக்களின் அனுசரணையுடன் அரசியல் தலைமைத்துவ பயிற்சி மையமொன்றை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
https://twitter.com/RajapaksaNamal/status/1565935601106690048
நாட்டில் ஏனையோரின் நிலை என்ன? போராட்டங்களின் வீரியம் குறைந்து விட்ட போதிலும், கோத்தாவினை வெளியேற்றுவதில் அவை வெற்றி கண்டுள்ளன. ‘ரணில் ராஜபக்ச’ அரசாங்கம் மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் தொடர்கின்ற அதே வேளை, புதிய அரசு மீதான நம்பிக்கையும் நிலையான எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் மறுபக்கம் தொடர்கின்றன. எது எவ்வாறாயினும் மின்வெட்டுகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, பாரிய உணவு நெருக்கடியொன்று நாட்டை கபளீகரம் செய்ய காத்திருக்கின்றது, பொருளாதாரமோ இன்னும் நிலையற்றே காணப்படுகிறது. இங்கிருந்து எத்திசையில் நாடு போகப்போகிறதோ?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.